“இந்தா இதெல்லாம் உனக்குதான். எடுத்துண்டு போ” – காஞ்சி மகான்

  கோமதி   | Last Modified : 12 Apr, 2018 06:19 pmமாதா, பிதா, குரு, தெய்வம் என்கிறது நம்முடைய மதம். குருவின் மூலமாக நமது அஞ்ஞானம் அகன்று மெய்ஞானம் அடைய முடியும். இறைவனை நம் கண் முன் நிறுத்தும் வல்லமை ஒரு நல்ல குருவினால் மட்டுமே முடியும். அப்படிப்பட்ட குரு அமையப் பெற்றவர்கள் பாக்கியவான்கள்.

காஞ்சி மகான் என்று போற்றப்படும் மஹா பெரியவர் பலகோடி அடியவர்களால் தங்கள் குருவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பூஜிக்கப்பட்டவர். நடமாடும் தெய்வமாக விளங்கிய அவருக்கு தெரியாமல் எந்த விஷயமும் அவரின் அடியவர்கள் வாழ்வில்  நடந்ததில்லை.

ஒரு சமயம் காஞ்சி மடத்தில் பெரியவரின் தரிசனத்திற்காக, பக்தர்கள் காத்துக்கொண்டு இருந்தார்கள். பல ஊர்களில் இருந்து பல தரப்பட்ட மக்கள் வந்திருந்தார்கள். காத்திருந்தவர்களின்  வரிசை மிகவும் நீளமாக இருந்தது.

அந்தக் கூட்டத்துல சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு பாட்டி, நெற்றி நிறைய குங்குமமும் சந்தனமும் இட்டுகொண்டு, தழையத் தழைய பட்டுக் கட்டி கொண்டு வந்திருந்தாள். கழுத்தில் ருத்ராட்சம், ஸ்படிக மாலைகளை போட்டுகொண்டு இருந்த அவளைப் பார்த்த எல்லாருக்கும் கொஞ்சம் கூடுதலாவே அவள் மீது மதிப்பு ஏற்படுத்தியது.

நேரம் கடந்து செல்ல ஒரு வழியாக அந்த  பாட்டியின்  முறை வந்தது.  மகா பெரியவாளை இரண்டு கையையும் கூப்பி நமஸ்காரம் பண்ணினாள் அந்த மூதாட்டி. ஆச்சார்யா, ஆசிர்வாதம் செய்யப்போறார்னு நினைச்சதுக்கு மாறாக , பக்கத்துல இருந்த சீடனை கூப்பிட்டார் பரமாசார்யா.

"மடத்து உக்ராண அறையில் இருந்து (சமையல்கட்டு) நூறு எலுமிச்சம்பழம் எடுத்துண்டு வா!' உத்தரவிட்டார்.

அவசர அவசரமாக ஓடினார் அந்தச் சீடர். பாட்டிக்கு ஒண்ணும் புரியலை. சுத்தி இருந்தவர்களுக்கு  ஆச்சரியம். "பெரியவா ஒரு எலுமிச்சம் பழம் கொடுத்தாலே அது மகாபிரசாதம். நூறு எலுமிச்சம்பழம் எடுத்துண்டு வரச் சொல்லியிருக்கார்னா, இந்தப் பெரியம்மா ஏதோ பாக்யம் பண்ணி இருக்கணும்னு!' ஆளாளுக்கு சிலாகித்தார்கள்.

ஒரு கூடையில நூறு எலுமிச்சம் பழத்தை எடுத்துண்டு வேகவேகமா ஓடி வந்தார் சீடர். கூடையை அந்த மூதாட்டி பக்கத்துல வைக்கச் சொன்னார் ஆசார்யா.

 "இந்தா இதெல்லாம் உனக்குதான். எடுத்துண்டு போ. நீ செய்யற காரியத்துக்கு உபயோகமா இருக்கும்'

பெரியவா சொல்ல, திருதிருன்னு முழிச்சா அந்த வயதான பெண்மணி. ரொம்ப தயங்கி, "பெரியவா, என்ன சொல்றேள்னு புரியலை. எனக்கு எதுக்கு இத்தனை எலுமிச்சம்பழம்' கேட்டா.

"அதான் காசு வாங்கிண்டு, குடும்பத்தைக் கெடுக்கறது, உறவை அழிக்கறது, ஏவல் வைக்கறதுன்னெல்லாம் எலுமிச்சம் பழத்துல மாந்திரீக வேலைகளைப் பண்ணிண்டு இருக்கியே... அதுக்கு இது உபயோகப்படும்னுதான் குடுக்கச் சொன்னேன்!'

மகாபெரியவா கொஞ்சம் கோபமான குரல்லயே சொன்னதும்தான் எல்லாருக்கும் அந்த மூதாட்டியோட மறுமுகம் என்னவென்று தெரிந்தது.. துஷ்டனை கண்டமாதிரி எல்லாரும் சட்டென்று விலகி நின்றார்கள். சட்டென்று பெரியவா கால்ல விழுந்த அந்தப் பாட்டி.

"என்னை மன்னிச்சுடுங்கோ... காசுக்க ஆசைப்பட்டு, யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சு தைரியமா அத்தனை காரியத்தையும் செஞ்சுட்டேன். கூடவே இருந்து எல்லாத்தையும் பார்த்த மாதிரி நீங்க சொன்னது பகவானுக்குத் தெரியாம ஒரு காரியமும் பண்ண முடியாதுங்கறதை எனக்கு உணர்த்திடுத்து. இனிமே எந்தக் கெட்ட காரியமும் கனவுலயும் செய்ய மாட்டேன். என்னை மன்னிச்சுடுங்கோ'ன்னு கதறினா. அவ கண்ணுல இருந்து வழிஞ்ச நீரே அவ பாவத்தைக் கழுவிடும்படிக்கு அழுதா.

கொஞ்ச நேரம் கழிச்சு, "உனக்கு தெரிஞ்ச அபிசார மந்திரத்தை எல்லாம் ஏதாவது ஒரு பசுமாட்டோட காதுல சொல்லிட்டு அதோட தலை முழிகிடு. அதெல்லாம் உனக்கு முழுசா மறந்துடும். போயிட்டு வா. இனிமேலாவது நல்லகாரியம் பண்ணு!'ன்னு சொல்லி அந்தப் பாட்டியை அனுப்பி வைச்சார், பரமாச்சார்யார்.

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close