மீனாட்சி –சொக்கநாதர் திருமணத்தைக் காண மதுரைக்கு வாருங்கள்

  கோமதி   | Last Modified : 25 Apr, 2018 03:22 pm


நடமாடும் இயந்திரங்களாக மாறிவிட்ட மனிதர்களுக்கு திருவிழாக்களும், கொண்டாட்டங்களும் தங்களை புதுப்பித்துக் கொள்ள உதவும். உற்றார் உறவினர் வீட்டு நல்லது கெட்டதுக்கு கலந்துக்கொள்ள நேரம் இல்லை என்று சொல்பவர்கள் கூட,குலசாமி கோவில் கொடை, திருவிழா என்றால் குடும்பத்துடன் வெளி நாடுகளில் இருந்தும் கூட நேரம் ஒதுக்கி கலந்துக் கொள்வார்கள்.

எல்லா ஊர்களிலும் திருவிழாக்கள் நடத்தப்பட்டாலும், சில ஊர்களில் திருவிழா மிக கோலாகலமாக உலக புகழ்ப் பெற்றதாக இருக்கும்.சித்திரை மாதம் பிறந்ததும் நம் நினைவிற்கு வருவது, மதுரை சித்திரை திருவிழா தான். மதுரை மீனாட்சியம்மன் திருமண விழாவும் அதையொட்டி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழாவும் உலகப் புகழ்பெற்றவை.


பங்குனி மாதத்தில் நடைபெற்று வந்த இந்த விழா,சித்திரை மாத விழாவாக மாற்றியது, மதுரை மன்னன் திருமலை நாயக்கர் காலத்தில் தான்.


பங்குனி மாதம் மக்கள் விவசாய வேலையில் ஈடுபடும் காலமாதலால்,மீனாட்சிஅம்மன்  திருமணத்திற்கும், தேர்த் திருவிழாவுக்கும் மக்கள் கூட்டம் குறைவாகவே இருக்கும். மேலும் திருமலை மன்னரின் காலத்தில் சைவ- வைணவ பேதம் அதிகமாக இருந்த காரணத்தினால்,மக்களை ஒன்றிணைக்க மன்னரின் யோசனையின் பேரில், பங்குனியில் நடைபெற்ற விழாவை சித்திரைக்கு மாற்றப்பட்டது. மேலும் சைவத்துடன் வைணவத்தை இணைக்கும் விதமாக கள்ளழகர் விழாவையும் அத்துடன் இணைத்து விட்டார்.


திருவிழாவை சித்திரைக்கு மாற்றிய பிறகு , மீனாட்சி திருமணம், தேர் விழா, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாக்களில் மதுரை, மக்கள் கூட்டத்தால் திணறியது. இன்றளவும் சைவ- வைணவ பேதம் இன்றி மக்கள் இவ்விழாவை சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

மதுரை மீனாட்சி அம்மன் திருமண விழாவிற்குப் பின் ஒரு சுவாரசியமான புராண கதை ஒன்று உண்டு. மதுரையை அரசாண்ட மலையத்வஜனுக்கும், காஞ்சன மாலைக்கும் வெகு நாளைக்குப் பிறகு, புத்ரகாமேஷ்டி யாகத்து அக்னியில் தெய்வாம்சம் நிறைந்த மூன்று வயது அழகு பெண்ணாக பிறந்தாள் மீனாக்ஷி. அவளுடைய மீன் போன்ற நீண்ட அழகிய கண்களுக்கு ஏற்ப அவளுக்கு மீனாக்ஷி என்று பெயரிட்டார்கள்.

அரசனின் மரணத்திற்குப் பிறகு மதுரையின் அரசாட்சியை ஏற்று, பற்பல தேசத்து அரசர்களை தனது காலடியில் கொண்டு வந்தாள். எல்லா உலகையும் வென்று, இறுதியாக அஷ்டதிக் பாலகர்களையும் எதிர் கொண்டாள். எல்லாத் திசைகளையும் வென்றவள் கடைசியாக ஈசான்ய திக்கில் இருந்த ஈசனையே எதிர்க்கத் துணிவு கொண்டாள். போரை ஆரம்பித்தவள், ஈசனை கண்டவுடன் தன்னுள் ஏற்பட்ட ஒரு மாற்றத்தை உணர்ந்தாள். மனதில் அவரே தன் மணாளன் என்ற உணர்வு மேவிட, ஈசனும் அவளை ஏற்றுக் கொண்டார். 


ஸ்ரீ மீனாட்சி சுந்தேரஸ்வரர் திருமணத்தில்,அவளின் அன்பு சகோதரன்,ஸ்ரீமஹாவிஷ்ணு தனது தேவியுடன் முன்னின்று மீனாட்சியை தாரைவார்த்துக் கொடுக்க, நான்முகன் நாமகளுடன் அந்த தெய்வத் திருமணத்திற்கு தலைமையேற்றார். சப்தரிஷிகள், இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் பூமாரிப் பொழிந்து வாழ்த்துக்கள் கூற, ஸ்ரீ சுந்தரேஸ்வரர் அம்பிகையின் கரம் பற்றி திருமாங்கல்யம் அணிவித்து,தம்பதி சமேதராக பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.இந்த வருடம் ஏப்ரல் 27ம் தேதி இந்த தெய்வத் திருமணம் நடைபெற உள்ளது.

நமது குழந்தைகளை இத்தகைய பாரம்பரியமிக்க திருவிழாக்களுக்கு அழைத்து செல்வதன் மூலம்,நமது பண்பாடும் கலாச்சாரமும் இந்த மண்ணில் நிலைத்து நிற்கும்.


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close