அழகன் முருகனுக்கு ஆண்டி கோலமா ?

  கோமதி   | Last Modified : 27 Feb, 2018 11:58 am

உலகில் உள்ள பல மதங்கள், வழிபாட்டு நம்பிக்கைகளில் , இறை என்ற உணர்வு மனிதர்களுக்கு மிக அணுக்கமாக நெருக்கமாக அமைந்துள்ளது இந்து மதத்தில் மட்டுமே. இங்கு மட்டும் தான் இறைவனை மிக செல்லமாக அழைக்க முடிகிறது. உரிமையாக திட்டவும் முடிகிறது. பல வடிவங்களில், பருவங்களில் இறைவனை பல அவதாரங்களாக நாம் வணங்கி வருகிறோம். பெருங்கோபத்துடன் ஆண்டி கோலத்தில் மலை மீதேறி நின்ற தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் , ஞானக்கிழவி அவ்வையின், மனமுருகும் தமிழால் பழம் நீ என்று பாடப்பட்டதால் அமைதி ஆன திருத்தலம் இது. ஆண்டி கோலத்தில் நின்ற முருகனுக்கு தினந்தோறும் நடக்கும் ராஜ அலங்காரத்தை காண கண்கள் கோடி போதாது.

கேட்ட வரங்களை அள்ளித்தரும் அற்புதத்திருத்தலம் இது. பழம் நீ என அவ்வைப்பாட்டி சொன்னதால் இந்த இடத்துக்கு பழநி என்று பெயராம். புராண பின்னணியில் இங்கு முருகப்பெருமான் தடம் பதித்த சுவாரசியமான வரலாறு ஒன்று உண்டு.

நாரதர் ஒரு நாள் அரிதாகக் கிடைத்த ஞானப்பழத்தை சிவனுக்கு சாப்பிட கொடுத்தார். அப்போது அருகில் இருந்த பார்வதி, தன்னுடைய மகன்கள் முருகன், விநாயகருக்கு பகிர்ந்து கொடுக்க விரும்பினார். ஆனால், சிவபெருமானோ பழத்தை பகிர்ந்தால் அதன் தனித்தன்மை போய்விடும் எனக் கூறி, பழத்தை பெற மகன்களுக்கு ஒரு போட்டியை அறிவித்தார். உலகத்தை முதலில் யார் முதலில் சுற்றிவருகிறார்களோ அவர்களுக்கு இந்த ஞானப்பழத்தை வழங்க முடிவு செய்தார். முருகனோ, தன்னுடைய மயில் வாகனத்தில் உலகத்தை சுற்றிவர சென்றார். விநாயகரோ, பெற்றோரை உலகமாக நினைத்து அவர்களை சுற்றி வந்து ஞானப்பழத்தை பரிசாக பெற்றார். சிவபெருமானின் இந்த திருவிளையாடலின் விளைவாக தாய் தந்தையரிடம் கோபம் கொண்டு குடியேறிய இடமே பழநி.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடு திருஆவினன்குடி எனப்படும் பழநி திருத்தலம். பழநி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது குழந்தை வேலாயுதசுவாமி கோவில். இக்கோவிலுடன் இணைந்து ஒரு குளம் உள்ளது. இங்கு முருகன் நெல்லி மர நிழலில் கோவில் கொண்டுள்ளார். இந்த கோவிலில் முருகன் குழந்தையாக மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.

இடும்பன் என்பவன், அகத்தியரின் உத்தரவுபடி சக்திகிரி, சிவகிரி என்ற இரு மலைகளை தென்பொதிகைக்கு எடுத்து சென்றான். வழியில் பாரம் தாங்காமல் பழநி மலையில் இடும்பன் இரு மலைகளையும் கீழே வைத்து விட்டான். அப்போது பழனி மலையில் இருந்த முருகன் கீழே வைத்த சக்திகிரி மலையில் ஏறி நின்றார். இடும்பன், அவரை இறங்கும்படி எச்சரித்தான். முருகன் அவன் பேச்சை கேட்கவில்லை. ஆத்திரமடைந்த இடும்பன், முருகனை எதிர்க்க துணிந்தான். முருகன், அவனுக்கு தன்னுடைய அருட்பார்வையை செலுத்தி அவனை தன்னுடன் வைத்துக் கொண்டார். சக்திகிரி மலையில் மீது ஏறி நின்றபோது முருகன் தன் கையில் தண்டம் வைத்திருந்ததால் “தண்டாயுதபாணி” என பெயர் பெற்றார்.

இத்திருத்தலத்தில் முருகனுக்கு தினமும் ஆறுகால பூஜை நடைபெறுகிறது. காலை 5 மணிக்கு முருகன் விஸ்வரூப தரிசனம் அளிக்கிறார். காலை 7.15 மணிக்கு விழாபூஜை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு காலசாந்தி பூஜையும், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 6 மணிக்கு சாயரட்சையும், இரவு 8 மணிக்கு ராக்கால பூஜையும் நடைபெறுகிறது. முருகனுக்கு உகந்த நாட்களான பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, அக்னி நட்சத்திரம் ஆகிய விழாக்கள் முக்கியமானவையாகும். வைகாசி விசாகம், திருக்கார்த்திகை ஆகிய தினங்கள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

இத்திருக்கோயிலில் மூலவர் நவபாஷானத்தால் ஆனவர். போகர் என்ற மகா சித்தர், இந்தத் தலத்தின் மூலவரை நவபாஷானத்தால் பிரதிஷ்டை செய்துள்ளார். உற்சவர் முத்துகுமாரசாமி. போகர் ஒரு மருத்துவராக இருந்ததால், நவபாஷானங்களை கலந்து சிலை செய்ய முடிந்தது. இந்த கோவிலில் போகர் வழிபட்ட நவதுர்க்கா, புவனேஸ்வரி, மரகத லிங்கம் ஆகியவையும் உள்ளன. போகரின் சமாதியும் இங்கு அமைந்துள்ளது. கோவிலின் தென்மேற்கு பிரகாரத்தில் போகர் சந்நிதி உள்ளது. முருகனின் நவபாஷான சிலையை போகர் வடித்து தினமும் பூஜை செய்து வந்தார் என்பது வரலாறு. அவர் கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்துள்ளார்.

கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி நம் தமிழ் குடி. தமிழ் கடவுள் முருகப்பெருமானை வணங்கிட பெருஞ்செல்வம், பேரழகு, பேரமைதி ,பெரு மகிழ்ச்சி என வாழ்க்கை முழுமையான நிறைவை, நிம்மதியை நிச்சயம் அடையும். வேலுண்டு வினையில்லை... மயிலுண்டு பயமில்லை

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close