இன்று சித்ரா பௌர்ணமி – சித்திர குப்தரிடம் நமது பாவ புண்ணிய கணக்குளை சரி பார்த்துக் கொள்வோம்.

  கோமதி   | Last Modified : 29 Apr, 2018 08:31 amயாராவது தவறு செய்யும் போது, “நீ செய்யும் பாவத்தை எல்லாம் மேலே ஒருவன் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான்.அவன் கிட்டே உன்னோட கணக்கை நீ கொடுத்து ஆகணும் என்று சொல்வதை கேட்டிருப்போம். நம்முடைய இந்து மத சாஸ்த்திரப்படி அது முற்றிலும் உண்மை.நம்முடைய பாவ புண்ணிய கணக்குகளை மேலிருந்து பார்த்து கொண்டிருப்பவர் வேறு யாரும் இல்லை, ஈஸ்வரனால் அந்த பதவியில் அமர்த்தப்பட்ட சித்திர குப்தர் தான். யார் இந்த சித்திர குப்தர். ஈசன் அவரிடம் ஏன் இந்த பொறுப்பை கொடுக்க வேண்டும்?

 

பூலோகத்தில் ஒருவரின் பாப புண்யங்களை சரிபார்த்து,அதற்கு  தக்கபடி தண்டனைகள் வழங்கி வந்தார் யமதர்மராஜன். ஒரு கட்டத்தில், கலி பிறந்து,அதர்மங்கள் அதிகரிக்க,கூடவே பாவங்களும் அதிகரித்தது. தனி ஆளாக தர்ம பரிபாலனம் செய்ய முடியாமல், யமதர்மராஜன் திணறினார். அவர் சிவபெருமானை அணுகி தனக்கு வேலை அதிகரித்துவிட்டதால்,தனக்கு  ஒரு உதவியாளர் தேவை என்ற விண்ணப்பத்தை வைத்தார். 

அந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டார்  சிவபெருமான்.அப்போது பார்வதி தேவியார் தங்க தாம்பாளம் ஒன்றில் ஒரு உருவத்தை வரைந்து கொண்டிருந்தாள். அந்த உருவம் தனது கையில் ஒரு நோட்டு புத்தகத்தையும் எழுத்தாணியையும் வைத்திருந்தது. இதைப்பார்த்த சிவபெருமான் அந்த சித்திரத்திற்கு உயிர் கொடுக்கும்படி பார்வதியை கேட்டுக்கொண்டார். பார்வதியும் அந்த உருவத்திற்கு  உயிர்கொடுத்தாள். சிவபெருமான் அந்த உயிர்பெற்ற உருவத்திற்கு ரகசியத்தை காக்கும் சக்தியை கொடுத்து எமதர்மராஜனுக்கு உதவியாக இருக்க பணித்தார். சித்திரத்திலிருந்து வந்ததாலும் ரகசியத்தை காப்பவராக இருந்ததாலும் அவர் சித்திரகுப்தன் (குப்தன் என்றால் ரகசியத்தை காப்பவன் என்று பொருள்) என்ற பெயர் பெற்றார்.மனிதர்களின் பாப புண்ணிய கணக்குகளை சரியாக எழுதி அதன் ரகசியத்தையும் காத்து வந்தார் சித்திரகுப்தர். 

தனது கடமையில் சிறிதும் தவறாமல் இருந்த சித்திர குப்தர் மனதில் சிறிய குறை ஒன்று இருந்தது. பூலோகத்தில் பலர் அறியாமல் செய்த பாபங்களின் கணக்கு மிக அதிகமாக இருந்தது அவரை வருத்தத்தில் ஆழ்த்தியது.

மக்கள் அறியாமல் செய்த பாபங்களுக்கும் நாம் தண்டனை கொடுக்கிறோமே என்று வருத்தப்பட்ட அவர், அறியாமல் செய்த பாபங்களை பொறுத்து மக்களை காத்து ரஷிக்கவேண்டும் என்று பரமசிவனிடம் வேண்டினார். சித்ரா பவுர்ணமியன்று சித்திரகுப்தனை வேண்டுபவர்களுக்கு அறியாமல் செய்த பாவங்களிலிருந்து விலக்கு அளிக்கும் சக்தியை சித்திரகுப்தனுக்கு அளித்தார் ஈசன். சித்திரகுப்தனும் ஜனங்களை அறியாமல் செய்த பாபங்களிலிருந்து காத்தருளி வருகிறார்.


சித்ரா பவுர்ணமியன்று யார் சித்திரகுப்தனை வணங்கினாலும்,அவர்கள் அறியாமல் செய்த பாவங்கள் மலையளவாக இருந்தாலும் அது கடுகளவாக மாறும். அதுபோலவே அன்று செய்யும் தானம் கடுகளவாக இருந்தாலும் அது மலையளவாக மாறுவதும் உறுதி என்பது நம்பிக்கை.

காஞ்சிபுரத்தில் சித்திரகுப்தனுக்கென்று இருக்கும் தனி கோவிலுக்கு சித்ரா பவுர்ணமியன்று முடிந்தவர் நேரில் சென்று அவரை வணங்கலாம். சித்திர குப்தனை மனதில் நினைத்து ”நாங்கள் மலையளவு செய்த பாவங்களை கடுகளவாகவும் கடுகளவு செய்த புண்ணியத்தை மலையளவாகவும் எழுதிக்கொள்” என வேண்டி வழிபட வேண்டும்.

மேலும் அன்று, புனித நதிகளில் நீராடியும் நமது பாவங்களைப் போக்கிக்கொள்ளலாம். கடலில் நீராடுவதும் சிறப்பானதாகக் கூறப்படுகிறது. அன்றைய பௌர்ணமி தினத்தில் கடலில் நீராடுபவர்களின் பாவங்களை போக்கியும், சிலவற்றை தாமே ஏற்றுக்கொள்ளவும் பித்ருக்கள், தயாராக இருப்பதாக ஐதீகம்.


ஸ்ரீ சித்ரகுப்த த்யான ஸ்லோகம் :


சித்ரகுப்தம் மஹா ப்ராக்ஞம்

லேகளீ பத்ர தாரிணம்

சித்ர ரத்னாம்பர தாரம்

மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்.


ஸ்ரீ சித்ரகுப்த காயத்ரி :


ஓம் தத்புருஷாய வித்மஹே

சித்ரகுப்தாய தீமஹி

தன்னோ லோகஹ் ப்ரசோதயா

இன்று சித்ரா பௌர்ணமி,சித்ர குப்தரை மனதில் தியானித்து நமது வரவில் புண்ணியங்களை அதிகமாக சேர்ப்போம். 


ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.