குழந்தை பாக்யம்வேண்டுமா ? கை மேல் பலன் கொடுக்கும் இந்த விரதம்

  கோமதி   | Last Modified : 27 Feb, 2018 10:08 pmமாசி மாத சிறப்புகளுக்கு மகுடமாக விளங்குவது மாசி மக திருவிழா என்றால் அது மிகையில்லை. மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாள் தான்,  மாசி மகம் என்னும் சிறப்பான நாளாகும். இந்த நாள் கடலாடும் விழா என்று அழைக்கப்படுகிறது. 

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணத்தில் கும்பேசுவரர் கோயிலில் கொண்டாடப்படும் மாசிமகத் திருவிழா மகா மகம் என்ற சிறப்பு பெறுகிறது. வடஇந்தியாவில் இந்த நாளை கும்பமேளா என்ற  பெயரில் கொண்டாடுகிறார்கள். பிற ஸ்தலங்களில் செய்த பாவம் காசியில் தீரும். காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் நீங்கும் என்ற சொல் வழக்கே இதன் சிறப்பை கூறும். 

அன்றைய மகோன்னதமான நன்நாளில்  யமுனை, சரசுவதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி போன்ற 12 நதிகள் மக்கள் கழுவிய பாவச்சுமைகளை அகற்றி புனிதம் பெற அங்கு வருவதாக ஐதீகம். மேலும் அம்பிகை மாசி மக நட்சத்திரத்தில் அவதரித்ததால் மாசிமகம் பெருமை பெறுகின்றது.

உமா தேவியார் மாசி மாதம்  மக நட்சத்திரத்தில் தான் தட்சணின் மகள் தாட்சாயணியாக அவதரித்தார் என்பதால் மிகவும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது. பாதாளத்தில் அசுரர்களால் கொண்டு செல்லப்பட்ட பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து மீட்டு வந்த நாளும் மாசி மகத்தன்றுதான்.

மேலும், அப்பனுக்கே பிரணவ மந்திரத்தின் பொருள் சொல்லி, அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் என்ற பெயர் பெற்றதும் மாசி மகத்தன்று தான்.இதனால் மாசி மகம் முப்பெரும் தெய்வங்களுக்கு உகந்த நன்னாளாக சிறப்பு பெறுகிறது. 

மாசி மாதம் சூரியன் கும்பராசியில் சஞ்சாரம் செய்வார், மக நட்சத்திரத்தில் சிம்ம ராசிக்குரியது. அன்று சந்திரன் மக நட்சத்திரத்தில் சிம்ம ராசியில் சஞ்சரிப்பார். இந்நாளே மாசிமகம் எனப்படுகிறது. இத்தினத்தில் தீர்தோற்சவம் நடைபெறுவது வழக்கம்.

இந்நாளில் புண்ணிய ஸ்தலங்களை தரிசிப்பதும், புண்ணிய நதிகள், தீர்த்தங்களில் நீராடுவதும் பாவங்களை போக்கும் என்பது ஐதீகம். 

ஒரு சமயம் வருணபகவானைப் பிடித்த பிரமஹத்தி தோஷம்  அவரை மிகவும் ஆட்டிப் படைத்து,கடலுக்குள் ஒளித்து வைத்திருந்தது. வருணபகவான் சிவபெருமானின் கருணைக்காக வேண்ட, அவரும் மனமிரங்கி அவரைக் காப்பாற்றினார். சிவா பெருமான் வருணனை  தோஷத்தில் இருந்து விடுவித்த தினமே மாசிமகம் ஆகும். அப்போது வருணபகவான், சிவபெருமா னை அன்றைய தினத்தில் புண்ணிய தீர்தமாடுவோரின் பாவங்களை நீக்கி அவர்களுக்கு வீடுபேற்றை அருள்படி வேண்ட அவரும் அவ்வாறே சிவபெருமான் வரமளித்தார் என்கிறது புராணம்.

மாசி மகத்தன்று நதி,  கடல், குளம், புண்ணிய தீர்த்தங்கள், கும்பகோணம், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் தர்ப்பணம், பிதுர் கடன் செய்வது நன்மை தரும்.

நம் முன்னோர்களை நினைத்து அன்னதானம், ஆடைதானம் செய்யலாம்.  இதனால் குடும்பத்தில் ஒற்றுமையும், சுபிட்சமும் நிலவும். மாசி மாதத்தில் கிரகப்பிரவேசம் செய்தால் சகல பாக்யங்களும் ஏற்படும். 

மாசி மகம் பல்வேறு சிறப்புக்களை கொண்டது. இந்த நாளில் மந்திர உபதேசம் பெறுவதும் மிகவும் சிறப்பாகும். மாணவர்கள் கல்வியில் நாட்டம் செலுத்தினால்,அறிவு விருத்தியாகும். கல்வி தொடர்பான செயல்களை தொடங்க வேண்டும் என்றால் மாசி மகத்தில் தொடங்குவது நன்று என்கிறார்கள் பெரியவர்கள்.

மாசி மாத சங்கடஹர சதுர்த்தி மிகவும் விசேஷம்.அன்றைய தினம் விநாயகரை வழிபட்டால் வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் விலகும். குழந்தை பாக்யம் இல்லாதவர்கள் மாசி மகத்தில் விக்னேஸ்வரனின் தம்பியான முருகப் பெருமானை விரதம் இருந்து வழிபட்டால் தோஷம் நீங்கி, குழந்தை பாக்யம் கிட்டும். 

தோஷங்கள் தீர்க்கும் அற்புத நாளாம் மாசி மகத்தன்று கடலாடி,பிறவி பெருங்கடலை நீந்தி இறைவன் திருவடி கரை சேருவோம்.


ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.