சனி பகவானை ஏன் இப்படி வணங்க கூடாது ?

  கோமதி   | Last Modified : 31 Mar, 2018 02:01 pm


இந்து மத வழிபாட்டில் ஒவ்வொரு  செயலுக்குப் பின்னரும் ஒரு காரண காரியங்கள் உண்டு. தொன்று தொட்டு நாம் அதை பின் பற்றினாலும் வெகு சிலருக்கே அதனுடைய முழு அர்த்தமும் தாத்பரியமும் தெரியும். மற்றவர்கள்,பெரியவர்கள் சொல்லிச் சென்றது என்ற அளவிலேயே அதை பின்பற்றுபவர்களாக இருப்பார்கள்.

பொதுவாக கோவில்களில் சனி பகவானை நேருக்கு நேர் வணங்க கூடாது என்ற கருத்து உள்ளது. ஆனால் அதற்கு என்ன காரணம் என்று நம்மில் நிறைய பேருக்கு தெரியாது.நவக்கிரகங்களில் ஒவ்வொரு கிரகத்துக்கும் அதன் இருப்பிடம், சேர்க்கை, பார்வை ஆகியவை மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. அவைகளைப் பொறுத்து தான் ஒவ்வொரு விதமான பலன்கள் அறியப்படுகிறது. 

நவகிரகங்களில், இயல்பிலேயே அசுபகிரகனம் என்று சொல்லப்படுவது  சனிகிரகத்தை தான்.  ஜாதக ரீதியாக சனி கிரகத்தின் 3, 7, 10ஆம் பார்வை, அசுப பலனையே ஏற்படுத்தும். அதனால் தான் சனியின் பார்வை கேடினை ஏற்படுத்தும் என்பதால், கோயில்களிலும் சனீஸ்வரனை நேருக்கு நேர் நின்று அமர்ந்து தரிசிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்.

 

சனிப்பார்வை ஏற்படுத்தக்கூடிய  விளைவுகளை பற்றி சொல்லும் புராணக்கதை

 

மூவுலகங்களையும் தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்த ராவணேஸ்வரன்  அதோடு நிற்காமல் நவக்கிரகங்களையும், தன் கட்டுப்பாட்டில் வேலைக்காரர்களாக வைத்து  கொடுமைப்படுத்தி வந்தான். சூரியன் உட்பட  சந்திரன், செவ்வாய் முதலான ஒன்பது கிரகங்களையும் தனது சிம்மாசனத்தின் கீழே அமைக்கப்பட்டிருக்கும் படிக்கட்டுகளில் படுக்க வைத்து, தான் அரியணையில் ஏறும்போதும் இறங்கும்போதும் அவர்களின் மார்பின் மீது தனது கால்களை வைத்து அவர்களை மிதித்துக் கொண்டே அரியணை ஏறும் வழக்கத்தைக் கொண்டிருந்தான்.

இதற்காக நவக்கிரகங்கள் ஒன்பது பேரும், ஒவ்வொரு படிகளிலும் ஒவ்வொன்றாக வரிசையாக மேல்நோக்கி படுத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால்,நவக்கிரகங்களில் சனி கிரகம் மட்டும் தனது பார்வை பட்டால் கெடுதல் விளையும் என்பதால், மேல் நோக்கிப் படுக்காமல் கீழ் தரையை நோக்கியபடி படுத்திருந்தார்.

அவைக்கு வந்த நாரதர், இதை கவனித்தார். இராவணனின் கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காக, ராவணன் நவக்கிரகங்களை காலால் மிதித்து அரியணை ஏறும் போது,“ராவணா, உனது கட்டளையை அனைவரும் மதித்து, மேல் நோக்கி படிகளில் படித்திருக்கிறார்கள். ஆனால், இந்த சனி கிரகம் மட்டும் உனது கட்டளையை அவமதிக்கும் வகையில் கீழ் நோக்கி படுத்திருக்கிறது பார்த்தாயா! என்று கூறவும் ,ராவணனும் சனியை மேல் நோக்கி படுக்கச் சொன்னான். தனது பார்வையால் கெடுதல் விளையும் என்பதை சனி கிரகம் எடுத்துச் சொல்லியும் ராவணன் பிடிவாதமாக இருக்கவே , சனியும் படிக்கட்டில் மேல் நோக்கியவாறு திரும்பிப் படுத்தார் . ராவணன் தனது காலால் சனியை மார்பில் மிதிக்கும் போது சனி கிரகத்தின் குரூரமான பார்வை, இராவணனின் மீது விழுந்தது.அன்று ஆரம்பித்தது ராவணனுக்கு ஏழரை.

 

இனி கோவிலுக்கு செல்லும் போது சனி பகவானை பக்கவாட்டில் இருந்து தரிசித்து,அவருக்கு உகந்த எள் தீபம் ஏற்றி வணங்கி அவரின் கருணையை பெறுவோம். 

 


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close