“என்னைப் பார்க்கணும்னு வந்துட்டு,பார்க்காமலே போனால் என்ன அர்த்தம் ?”

  கோமதி   | Last Modified : 19 Apr, 2018 02:01 pm


தெய்வத்தை வணங்குவதில் ஆத்மார்த்தம் இருப்பின், நம்முடைய பிரார்த்தனைகளில் நாம் வணங்கும் தெய்வத்தை நேரில் காண முடியும் என்பதற்கு நிறைய உதாரணங்களை சொல்ல முடியும். எவன் ஒருவன் தனது கடமைகளில் உண்மையாக இருக்கிறானோ அவனுடைய அருகில்  தெய்வம் நிற்கும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சியாக நிற்கிறது.

திருச்சியில் காஞ்சி பெரியவரின் பக்தர்  ஒருவர்  போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்தார். அவருடைய பூஜையறையில் காஞ்சி மகானின் படம் பிரதானமாக இருக்கும். அவருடைய நித்ய கடமையே, தினமும் காலையில் எழுந்து குளித்த பிறகு, ஏதாவது ஒரு நைவேத்யத்தை மகாபெரியவர் படத்துக்கு முன் வைத்து வணங்குவது தான். இந்த கடமைகளை முடித்து விட்டுத்தான் தன் வேலையை ஆரம்பிப்பார். வேலைக்கு நடுவிலும் பெரியவாளின் நாமத்தை அவரது உதடுகள் சதா உச்சரித்துக்கொண்டே இருக்கும்.

ஒரு தடவை பெரியவா, ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்நூலுக்கு விஜயம் செய்திருந்தார். ஏற்கனவே அது உஷ்ணப் பிரதேசம் ஆதலால், வெயில் கடுமையாக வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது. நம்முடைய திருச்சி பக்தருக்கும் பெரியவாளைத் தரிசிக்க வேண்டும் என்று மனதில் ஆசை. அன்று காலை ரயிலில் புறப்படும்முன் வழக்கம்போல் பெரியவா படத்துக்கு முன்னால் நைவேத்யமாக பாலை காய்ச்சி ஒரு டம்ளரில் ஊற்றி வைத்துவிட்டுப் போனார்.

கர்நூலில் பக்தர்கள்  கூட்டம் நிரம்பி வழிந்தது. எங்கு திரும்பினாலும் மக்கள் வெள்ளம். நமது  போட்டோகிராபர் எந்தப் பக்கமும் உள்ளே செல்ல முடியவில்லை. சற்றுத் தூரத்தில் இருந்த மணற் குவியல் ஒன்றின்மீது ஏறி நின்று மகாப் பெரியவாளைத் தரிசிக்க முயன்றார். வெயிலின் கொடுமையால் கால் ஒரு பக்கம் சுட்டது. அவரால் சிறிது நேரத்திற்குப் பின் தாக்குப் பிடிக்க முடியவில்லை.கும்பல் குறைந்தவுடன் மாலையில் வந்து பார்த்துக்கொள்ளலாம் என்று மனதில் கவலையோடு புறப்பட்டார். இவ்வளவு தூரம் வந்தும் மகானை உடனடியாகப் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவருக்கு.

சற்றுத் தூரம்தான் நடந்திருப்பார். யாரோ அவரைக் கூப்பிடுவதுபோல் தோன்றவே, திரும்பிப் பார்த்தார். காஞ்சி மடத்தில் வேலை பார்க்கும் சிப்பந்தி ஒருவர் வேகமாக போட்டோகிராபரிடம் ஓடி வந்தார். “நீங்க திருச்சியிலிருந்துதானே வந்திருக்கீங்க?”

“ஆமாம்”

“பெரியவா உங்களை அழைத்துக் கொண்டு வரச் சொன்னார்.”

“என்னையா ?” நம் பக்தருக்கு ஒரே வியப்பு.

“நீங்க போட்டோகிராபர் தானே ?” சிப்பந்தி கேட்டார்.

“ஆமாம்”

“அப்படியென்றால் உங்களைத்தான் அழைச்சுண்டு வரச் சொன்னார், வாருங்கள்”

விடாப்பிடியாக அவரை அழைத்துக் கொண்டுபோய் பெரியவா முன் நிறுத்தினார், அந்தச் சிஷ்யர். கைகளைக் கூப்பியவாறு, கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓட, புகைப்பட நிபுணர் தன்னை மறந்து அங்கே பெரியவரின் முகத்தைப் பார்த்த வண்ணம் நின்றார்.

அவரை ஒரு தடவை ஏற இறங்கப் பார்த்த மகான், “என்னைப் பார்க்கணும்னு இவ்வளவு தூரம் கிளம்பி வந்திருக்கே… கடைசியில் பார்க்காமலே போனால் என்ன அர்த்தம் ?” என்றார்.

“கும்பல் நிறைய இருந்தது, அதான் கொஞ்சம் குறைஞ்சவுடனே வரலாம்னு” என்று தடுமாற்றத்துடன் இழுத்தார் போட்டோகாரர்.

“சரி. சரி.. சாப்பிட்டியோ?” தாயன்புடன் கேட்டார் அந்த தயாபரன்.

“சாப்பிட்டேன்” என்றார் பக்தர்.

சில விநாடிகள் தாமதத்துக்குப் பின் மகான் பேசினார். “ என் வாயைப் பார்த்தியோ?”

நாக்கை வெளியே நீட்டுகிறார். சூடுபட்டது போல் சிவந்திருக்கிறது. பிறகு கேட்டார். “உதடெல்லாம் கூடப் புண்ணாகி விட்டது, ஏன் தெரியுமா?”

போட்டோகாரருக்கு என்ன சொல்றதுன்னு புரியவில்லை.பெரியவரையே பார்த்துக்கொண்டு நின்றார்.

“நீ பாலைச் காய்ச்சி கொதிக்க கொதிக்க சூடா வச்சிட்டு அவசரம் அவசரமாக் கிளம்பி வந்துட்டே இல்லியா… அதான்! “

திருச்சிக்காரருக்குப் புறப்படும்போது தான் சூடாக அவர் படத்தின் முன்பு பாலைக்காய்ச்சி வைத்துவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது.

சாஷ்டாங்கமாக மகானின் திருவடியில் விழுந்து, “மஹா பிரபு, என்னை மன்னியுங்கள் “ என்று கதறினார்.

நாம் எந்த அளவுக்கு உள்ளன்போடு பக்தியை செலுத்துகிறோமோ,அந்த அளவுக்கு காஞ்சி மகானும் பக்தர்கள் அளிப்பதை விரும்பி ஏற்றுக் கொள்வார் என்பதற்கு இதைவிட சான்று வேண்டுமா?. 

ஜெய ஜெய சங்கரா .... ஹர ஹர சங்கரா!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close