இன்று ஸ்ரீமத் சங்கர ஜெயந்தி - காலடியில் அவதரித்து தனது காலடி தடத்தால் மக்களை வழி நடத்திய ஜெகத்குரு

  கோமதி   | Last Modified : 20 Apr, 2018 03:31 pm


மாதா,பிதா,குரு தெய்வம் என்பது ஆன்றோர் வாக்கு. நமது தாய் தந்தையைர் மூலமாக இந்த பூமியில் அவதரித்த நமக்கு,அஞ்ஞானம் நீக்கி ஞானத்தை அருள்பவர்கள் குரு. அந்த குருவின் மூலமாக நாம் இறைவனை அடைகிறோம்.சுமார் இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நமது புற இருளை நீக்கி அகத்தில் ஜோதியை ஏற்ற இறைவனின் அவதாரமாக  தோன்றியவர் தான் ஆதிசங்கரர்.

பல புண்ணிய ஆத்மாக்களை தருவித்த பாரத தேசத்தில்,சிவ பெருமானின் அவதாரமாக, காலடி என்னும் ஷேத்திரத்திலே அவதாரம் செய்தார் ஆதிசங்கரர்.

திருமணம் முடிந்து வருடங்கள் பல ஆகிவிட்ட போதிலும், தங்களுக்கு பெயர் சொல்ல ஒரு குழந்தை இல்லாதது குறித்து,சிவகுரு- ஆர்யாம்பா தம்பதியினர் ஏங்கினர். இறைவனை தவிர வேறொன்றும் அறியாத அவர்கள் சிவபெருமானை பூஜிக்க, மனமிரங்கிய ஈசனும் சிவகுருவின் கனவில் தோன்றினார்.

“அந்தணரே... உலகம் முழுவதையும் உண்மையாக உணர்ந்தவனும், எல்லா நற்குணங்களுடனும் விளங்குபவனும், ஆனால் நீண்ட ஆயுள் இல்லாதவனாக ஒரு புதல்வன் உமக்கு வேண்டுமா அல்லது இதற்கு மாறாக நீண்ட காலம் நிலைத்திருக்கும் நூறு புதல்வர்கள் வேண்டுமா?” என்று வினவினார்.

“தங்கள் சித்தம் எங்கள் பாக்கியம்..” என்கிறார் சிவகுரு.

“சரி.. என்னையே ஒரு புதல்வனாக அருளுகிறேன்.. ஆனால் பூமியில் அவன் பதினாறு வயது வரையில்தான் வாழ்வான்.. என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார் பரமேஸ்வரன்.

இறைவனின் பெருங்கருணை ஆர்யாம்பாவின் வயிற்றில் சிசுவாக உருக்கொண்டது.திருவாதிரை நட்சத்திரம், சுத்த பஞ்சமியில்,இந்த பூவுலகில் தர்மத்தை நிலை நிறுத்த அவதரித்தார் சங்கரர்.

அக்கால வழக்கப்படி,குருகுலவாசம் மேற்கொண்டார் சங்கரர். உத்தம சிஷ்யரான சங்கரர் குருவுக்கு சேவகம் புரிந்த காலத்தில்,சிரத்தையாக வீடு வீடாகச் சென்று பிட்க்ஷை எடுத்து வந்தார். ஒருநாள் ஓர் ஏழை அந்தணர் வீட்டுக்கு பிட்க்ஷைக்கு சென்றார்.அந்தச் சமயத்தில் அந்தணர் வீட்டில் இருக்கவில்லை. தேவையான உணவுப் பொருள்களைத் தேடி வெளியே சென்றிருந்தார்.

பிட்சை இடுவதற்கு வீட்டில் உணவு இல்லாத நிலையில், அந்தணரின் மனைவி இருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியை எடுத்து வந்து, “மன்னிக்க வேண்டும். என்னிடம் இப்போது இருப்பது இந்த நெல்லிக்கனி மட்டும்தான்...” என பாலசங்கரரின் பிட்சை பாத்திரத்தில் அதை பக்தியுடன் இட்டாள். ஏழ்மை நிலையிலும் பிட்க்ஷை இட்ட அவளுடைய பக்தி சிரத்தையை உணர்ந்தார் சங்கரர். அந்தக் குடும்பத்தின் வறுமையைப் போக்கி சுபிட்சத்தை அருள திருவுளம் கொண்ட அந்த கருணாமூர்த்தி செல்வம் தரும் திருமகளைத் துதித்தார். அதுதான் 'கனக தாரா ஸ்வதம்.' சங்கராரின் வாக்கிலிருந்து வந்த முதல் ஸ்துதியும் அது தான். 

தனது அவதாரத்தின் நோக்கம் சங்கரரின் அடி மனத்தில் எழுந்துக்கொண்டே இருந்தது.இவ்வுலக பந்தத்தை துறந்து, துறவறம் மேற்கொள்ளத் தீர்மானித்தார். தந்தை சிவகுரு காலமாகிவிட்ட நிலையில்,சங்கரரின் இந்த முடிவு அவரின் வயோதிக தாயாருக்கு கவலையை அளித்தது.


ஒரு நாள் பூர்ணா நதியில் குளிக்க இறங்கிய சங்கரரின் ஒரு காலை ஒரு முதலை கவ்விக்கொண்டது. அவரது அம்மாவால் அவரைக் காப்பாற்ற இயலவில்லை. தாயின் அனுமதி பெற்று, துறவறத்துக்கான தீட்சை மந்திரத்தை சங்கரர் வேகமாகச் சொல்லத் தொடங்கியவுடன்   முதலை அவரை விடுவித்தது. உடனடியாகத் தன் பந்தம் துறந்து சந்நியாச ஆஸ்ரமம் பெற்றுக்கொண்டார் சங்கரர்.

“சங்கரா... என்னைத் தனியா விட்டுட்டா நீ போகப்போறே? என் கடைசிக் காலத்தில்கூட உன்னைப் பார்க்காமல் தான் என் உயிர் பிரியணுமா?” என்று கண்களில் நீர் மல்க, கேட்டார் தாய்.


“கவலைப்படாதே அம்மா. பகலிலோ இரவிலோ எந்த நேரமானாலும் நீ என்னை நினைத்த மாத்திரத்திலேயே என்னுடைய கடமைகள் அனைத்தையும் விட்டு விட்டு நான் ஓடோடி வந்துவிடுவேன்... ஒருவேளை நீ உயிர் இழக்க நேர்ந்தால் என் கையினாலேயே உனக்கு ஈமக் கிரியைகள் செய்வேன்...” என்று உறுதியளித்தார் சங்கரர்.அதன் படியே வெகு தூரத்திலிருந்தும் தன் தாயின் மீது படரும் மரணத்தின் நிழலை முன்னறிந்து சென்றார். இறந்த தாய்க்கு மகன் செய்ய வேண்டிய அத்தனை கடமைகளையும் செய்து முடித்தார்.

 சங்கரர் காசியில் இருந்தபோது ஒரு முதியவர் ஒருவர் வடமொழி இலக்கணச் சூத்திரங்களையும் அதன் விதிகளையும் மனப்பாடம் செய்து ஒப்புவித்துக் கொண்டே சென்றதைக் கண்டார். அந்த முதியவர் மீது சங்கரருக்குக் கருணை பிறந்தது.“அரிதான மனிதப் பிறவியும் அறிவும் நமக்கும் பிற புலன் பொறிகளும் பெற்றுள்ள நீங்கள் ,இப்படி இலக்கணத்தை வைத்துக்கொண்டு கஷ்டப்படுவதற்குப் பதிலாக, இறைவனான கோவிந்தனிடத்தில் பக்தி செய்வதிலும், அவன் திருநாமங்களைப் பஜனை செய்வதிலும், உங்கள் நேரத்தைச் செலவழித்தால் எளிதில் பிறவிப்பயன் பெற்றுவிடலாமே!” என்று அறிவுரை கூறினார் சங்கரர்.அதன் தொடர்ச்சியாக சங்கரர் இயற்றியதுதான் புகழ்மிக்க பஜகோவிந்தம்!

தனது திக் விஜயத்தின்போது சங்கரர் வாதப்போர் புரிந்து அநேகரை வென்ற சந்தர்ப்பங்கள் ஏராளம்.அப்படி ஒரு முறை சங்கரரிடம் வாதம் புரிந்து தோல்வியுற்ற அபிநவகுப்தர் பகையுணர்வு அதிகமாகி அபிசார யாகம் என்ற யாகமொன்றை நடத்தி சங்கரரின் உடலில் பாதிப்பு ஏற்படுத்தினார். வைத்தியர்களால் கூட நிவர்த்தி செய்யமுடியாத கொடிய நோய் அவரைத் தாக்குகிறது. அவர் அனுபவிக்கும் வேதனையை சீடர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எல்லா திசைகளிலிருந்தும் வைத்தியர்கள் வரவழைக்கப் படுகிறார்கள். நோய் தீவிரம் அடைந்ததே தவிர,பலனளிக்கவில்லை.

சிவபெருமானின் அறிவுறுத் தலின்படி திருச்செந்தூர் சென்ற சங்கரர்,அங்கே பாம்பு ஒன்று தன் உடலை நெளித்து நெளித்துச்சென்று முருகப்பெருமானின் பாதங்களில் பூஜை செய்வதைக் கண்டார். இதையே அடிப்படையாகக் கொண்டு அதே ஸ்தலத்தில் 'சுப்ரமணிய புஜங்கம்' என்ற தலைப்பில் 33 பாடல்களைப் பாடி அருளினார்.


தனது சரீர யாத்திரையை முடித்து கொள்ளும் முன் அவர் தனது சீடர்களுக்கு உபதேசித்தது தான் ‘ஸோபாந பஞ்சகம்.'

காலடியில் அவதரித்து தனது காலடி தடத்தால் திக்விஜயம் செய்து, மக்களுக்காக  ஜீவனும் பிரம்மமும் ஒன்றே' என்ற அத்வைதத்தை ஸ்தாபித்தருளினார் சங்கரர். இன்று மக்களால் ஜகத்குருவாக போற்றப்பட்டு வணங்கப்பட்டும் வருகிறார். 

குரு திருவடிகளே சரணம்...

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close