'ஆசை மட்டும் இருக்கு ,அம்பாளுக்கு பண்ணணும்னு ...ஆனா, என்ன பண்ணறதுன்னு தெரியலையே!'

  கோமதி   | Last Modified : 27 Apr, 2018 04:33 pm


காஞ்சிபுரம் அன்னை காமாட்சி அம்மன் சன்னதியில், அம்பாள் வீற்றிருக்கும் கருவறைக்கு மேலே உள்ள விமானம் பொன்னால் ஆனது. அது எதோ இன்று நேற்று வேயப்பட்டது இல்லை. அந்தக் காலத்திலேயே தங்க  ரேக் சாத்தப்பட்ட விமானம். ஆனால்,காலப்போக்கில் அந்த தேவியின் பொன் மய விமானம் கொஞ்சம் கொஞ்சமாகப் பொலிவிழந்து காணப்பட்டது. அதன் மேல் பதிந்திருந்த தங்கமெல்லாம் அழிந்து, வெறும் செம்பாக, அழுக்கேறி காட்சி தந்தது.


ஸ்ரீமடத்தில் அப்போது பெரிதாகப் பண வசதி இல்லாத காரணத்தால்,அன்பர்களும்,பக்தர்களும் கொடுப்பதை வைத்துதான் மடம் நடந்து கொண்டிருந்தது. பல நாட்கள் பிட்சா வந்தனத்துக்கு, யார் வரப் போகிறார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருந்ததும் உண்டு. சந்நியாச தர்மப்படி அந்த பிட்சாவந்தனத்தை வைத்துத்தான் பெரியவாளுக்கு பிட்சையே நடக்கும்.


இந்த மாதிரியான சூழலில் ஒரு நாள் மகா பெரியவா, காமாட்சி அம்மன் கோயிலில் அம்பாள் விமானம் செம்பாகக் காட்சி அளிப்பது குறித்து பேச ஆரம்பித்துவிட்டார்."அம்பாள் சன்னதி விமானம் இப்படி இருக்கே....இதை மாத்த வேண்டாமோ?!" அவர் சொன்னபோது மடத்தின் மேனேஜர், வசதி இன்மையை சுட்டிக் காட்டினார்.

பெரியவா யோசனை பண்ணினார்."சரி நாம முயற்சிப்போம்.அவளே செஞ்சுப்பா..!" என்று அம்பாள் மீது பாரத்தைப்  .போட்டுவிட்டு, ஒரு ஆசாரியை வரவழைத்து,"மொத்த விமானத்துக்கும் தங்க ரேக் பதிக்க மொத்தமாக எவ்வளவு ஸ்வர்ணம் தேவைப்படும்" என்று கேட்டார்

வந்தவர் பரிசோதித்து,. அளந்தெல்லாம் பார்த்துவிட்டு,குறிப்பிட்ட அளவைச் சொன்னார்.

"இவ்வளவு பவுனுக்கு எங்கே போவது?" என்ற கேள்விக்குறி பெரியவா முகத்தில். 'ஆசை மட்டும் இருக்கு  ,அம்பாளுக்கு பண்ணணும்னு ...ஆனா, என்ன பண்ணறதுன்னு தெரியலையே!' என்று மகாபெரியவா யோசித்துக் கொண்டிருந்த சமயத்துல, அந்தக் காலத்தில் பிரபல சங்கீத வித்வானான மகாராஜபுரம் விஸ்வநாதய்யர், ஆசார்யாளை தரிசனம் பண்ண வந்தார்.

அவரைப் பார்த்ததும் மகாபெரியவா மனதுக்குள் ஏதோ நினைத்தவராக, "உனக்கு கனகதாரா ஸ்தோத்ரம் தெரியுமோ?" என்று கேட்டார்.

"சுமாராகத் தெரியும்" என்றார் விஸ்வநாதய்யர்.

"அப்படின்னா, நீ அதைப்பாடு. யாருக்கெல்லாம் தெரியுமோ,அவாளும் சேர்ந்து பாடுங்கோ!" என்று சொன்னார், மகாபெரியவா.

அதைத் தொடர்ந்து, மகாராஜபுரம் அவர்கள் கனகதாரா ஸ்துதியைப்பாட, அங்கே இருந்த பெண்கள் பலரும் அந்த ஸ்துதியை சேர்ந்து சொல்ல ஆரம்பித்தார்கள்.


சுமார் அரை மணிநேரம் முழுமையாகச் சொல்லி முடித்ததும்,அங்கே ஓர் ஆச்சரியம் நடந்தது.

அங்கேயிருந்த அத்தனை பெண்களும் தாங்கள் அணிந்து வந்திருந்த நகைநட்டுகளைக் கழற்றி மகாபெரியவா முன்னால் இருந்த ஒரு பெரிய மூங்கில் தட்டிலில் வைத்தனர்.

"மகாபெரியவா இந்த நகைகளை எல்லாம் உருக்கி ஸ்வர்ணத்தை எடுத்துக்கணும். காமாட்சி விமானத்துக்கு தங்கரேக் பதிக்கறதுல எங்க பங்கும் இருக்கணும்!" கோரஸாக எல்லோரும் வேண்டினார்கள்.

"ஆசார்யாளோட ஸ்லோகத்தை இன்றைக்குச் சொன்னாலும் ஸ்வர்ண மழை பொழிகிறதே!" என்று மகா பெரியவா புளகாங்கிதம் அடைந்தார்.

"கனகதாராவைக் கேட்டுட்டு அன்னிக்கு மகாலக்ஷ்மி தங்கமழை பெய்ய வைச்சா. இன்னிக்கு இத்தனை பெண்கள் சாட்சாத் அம்பாள் ரூபத்துல கனகமழை பெய்ய வைச்சிருக்கா!" என்று மகாபெரியவா சொல்ல, அத்தனை பெண்கள் முகத்திலும் ஆனந்தப் பரவசம்.

மூங்கில் தட்டுல இருந்த நகைகளை அப்படியே ஆசாரி கிட்டே அள்ளிக் கொடுத்து எடை போடச் சொன்னார்.

அதை எடை போட்டுப் பார்த்தபோது, தான் கேட்ட பவுனுக்கு ஒரு குந்துமணி கூடவுமில்லை.குறையவுமில்லை என்று அதிசயப்பட்டார் அந்த ஆசாரி.

அடுத்த வாரமே விமானத்துக்கு தங்கரேக் பதித்து,கும்பாபிஷேகமும் அமோகமாக நடந்தது.

ஸ்ரீமடத்தில் பொருளாதாரக் கஷ்டம் நிலவியபோதும், காமாட்சி அம்மனுக்கு பொன்விமானம் அமைக்க வேண்டும் என்று மகாபெரியவா தீர்மானித்து அதை அம்பாளிடமே சொல்லி வேண்ட, தன் அம்சமான பெண்கள் மூலமாகவே அதைச் செய்வதற்கான அனுகிரஹத்தை அம்பாள் அப்போதே தந்துவிட்டாள்.


இதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை என்பது அந்த காஞ்சி மாமுனியின் அற்புதங்களை நேரில் பார்த்தவர்களுக்கும், தங்கள் வாழ்வில் உணர்ந்தவர்களுக்கும் தெரியும். ஈஸ்வரனின் அம்சமாகவே திகழ்ந்த மகாபெரியவாளின் மகிமை இருக்கும் போது, ஏது  குறை.


ஜெய ஜெய சங்கர .....ஹர ஹர சங்கர 


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close