இந்த கோடையில் நமக்கும் (கருணை) மழை கொண்டுவருவார் காஞ்சி பெரியவா

  கோமதி   | Last Modified : 17 May, 2018 05:06 pm


காஞ்சி மகாப் பெரியவர் ஆன்மீக உலகின் இமயம். பல வறண்ட  மனங்களை… மனிதர்களை பசுமையாக்கியவர். அடியாரின் துயரங்களைப் பொடிப்பொடியாக்கியவர். இயற்கையும் காஞ்சிப் பெரியவாவின் கட்டளைக்கு கட்டுபட்டதே. 

நாகை மாவட்டத்தில் ஒருமுறை காஞ்சி முனிவர் செய்த கருணை சம்பவம் இதோ....

1941-42ல் சாதுர்மாஸ்ய விரதத்தை அனுசரிக்க தங்களோட ஊரில் பெரியவா தங்கப்போறார் என்று தெரிஞ்சதும்,நாகப்பட்டணத்துக்காராளுக்கெல்லாம் பரமானந்தம். அதற்குக் காரணம் வறட்சி. பூமி வறண்டு நிலமெல்லாம் வெடிச்சிருந்தது. குளமெல்லாம் வத்தி மைதானம் மாதிரி ஆகியிருந்தது.பெரியவா அவர்கள் பாதம் பட்டால் தங்களுக்கு விடிவு பிறக்காதா என்ற ஏக்கம்.

பஞ்சமும்,வறட்சியும் நிலவின விஷயம் பெரியவாளுக்கு தெரியவந்தாலும் தன்னோட திட்டத்தை மாத்திக்காம அங்கேதான் முகாமிடணும் என்று சொல்லிவிட்டார்.

எங்கேயோ அலைஞ்சு திரிஞ்சு ஸ்நானம் செய்வதற்கும், மற்ற பூஜை காரியங்களை செய்வதற்கும் தேவையான நீரை ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்,ஊர்க்காரர்கள் .

இரண்டு மூன்று நாட்கள் கழிந்தது. நாலாவது நாள்காலை  நீலாயதாக்ஷி அம்மன் கோவிலின்  சிவாசார்யாரும் நிர்வாகியும் பெரியவாளை தரிசிக்க வந்தார்கள். அவர்களோடு  ஊர்ப் பெரியமனுஷர்கள்  சிலரும் வந்திருந்தார்கள். எல்லோர் முகத்துலயும் கவலைரேகை பட்டவர்த்தனமாவே தெரிந்தது.

வந்தவர்கள்,ஆசார்யாளை தரிசிச்சு சாஷ்டாங்கமா நமஸ்காரம் பண்ணினார்கள். அவர்களை ஆசிர்வதித்த ஆசார்யா,

"எல்லாருமா சேர்ந்து என்கிட்டே ஏதோ விஷயத்தை சொல்றதுக்காக வந்திருக்கறாப்ல தெரியறது? என்ன சேதி?" அப்படின்னு கேட்டார்.

"பெரியவா..உங்களுக்கு தெரியாதது இல்லை. நாலஞ்சு வருஷமாகவே இங்கே மழை இல்லை. ஊரே வறண்டு கிடக்கு. போனவருஷம் வரைக்கும் எப்படியோ சிரமப்பட்டு கோயில் திருவிழாவை நடத்திட்டோம். இந்த வருஷம் அதுக்கு எந்த வகையிலயும் சாத்தியமே இல்லாத சூழ்நிலை.அதான் திருவிழாவை நிறுத்திடலாம்னு தோணுது. நாங்களா தீர்மானிக்கறதைவிட உங்ககிட்டே சொல்லிட்டு அப்புறம் தீர்மானிக்கலாம்னுதான் வந்திருக்கோம்!" தயங்கி தயங்கி சொன்னார்கள்  எல்லாரும்.

எல்லாத்தையும் கேட்டுண்ட ஆசார்யா, மௌனமா கையை உயர்த்தினார். "அவசரப்பட வேண்டாம்.கொஞ்சம் பொறுத்துப் பார்த்துட்டு தீர்மானிக்கலாம்!" சொல்லிட்டு கல்கண்டு பிரசாதம் குடுத்து அவர்களை ஆசிர்வாதம் செய்தார்.

அன்றைக்கு மத்தியானம் உச்சி வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்த நேரத்தில், முகாமில் இருந்து  புறப்பட்டு எங்கேயோ வெளியில் போனார் பரமாசார்யா. எல்லாரும் என்ன காரணம்? எங்கே போறார்னு புரியாம பார்த்துக் கொண்டு இருக்க, மளமளவென்று  நடந்துபோய், பக்கத்துல இருந்த கோயில் குளத்தில இறங்கினார்.

குளம் வறண்டு பெரிய மைதானம் மாதிரி இருந்ததோட, பாதம் கொப்பளிக்கற அளவுக்கு சூடேறி இருந்தது.அதுல இறங்கின பெரியவா ,கோயில் பிராகாரத்துல அடிப்பிரதட்சணம் செய்யற மாதிரி தன்னோட பாதத்தை ஒவ்வொரு இடமா பதிச்சு, மெதுவாக நடந்தார்.


ஒரு இடத்துல நின்னவர், சட்டுன்னு கால் விரலால ஒரு இடத்துல கீறுறாப்புல தோண்டினார். அந்த இடத்துலேர்ந்து கொஞ்சமா ஜலம் வந்தது.உடனே அந்த ஜலத்துல தன்னோட வலது பாதத்தை வைச்சவர்,இடது காலைத் தூக்கிக் கொண்டு  மாங்காடு காமாட்சி ஒற்றைக்காலில்  தவம் இருக்கிறமாதிரி ஒரு சில நிமிஷம் நின்னு ஆகாசத்தை உற்றுப் பார்த்தார் .அடிச்ச வெயில்ல கொஞ்ச நாழிகையிலேயே பெரியவா பாதம் பதிஞ்சிருந்த இடத்துல இருந்த தண்ணியும் வந்தது. யார்கிட்டேயும் எதுவும் பேசலை பெரியவா கொஞ்ச நேரத்துல அங்கேர்ந்து புறப்பட்டு முகாமுக்கு வந்துவிட்டார்.

அன்னிக்கு சாயந்திரம் வானத்துல இருந்த வெள்ளை மேகம் எல்லாம் திடீர்னு கருநீலமா மாறி மளமளவென்று மழையா பொழிய ஆரம்பித்தது. ஒரு நாள் ரெண்டு நாள் இல்லை. தொடர்ந்து நாலுநாள் மழை கொட்டித் தீர்த்து ஊர் முழுக்க வெள்ளப் ப்ரவாகமா ஓடி, கோயில் குளம் உட்பட.அந்த ஊரில் இருந்த எல்லா நீர்நிலையும் நிரம்பி வழிஞ்சுது.ஊரும், ஊர் மக்களோட மனசும் பூரணமா குளிர்ந்தது.

கோவில்காரர்கள்  மறுபடியும் பெரியவாளைப் பார்க்க வந்தார்கள்.

"அதான் மழை பெய்ஞ்சு குளமெல்லாம் ரொம்பிடுத்தே, அப்புறம் என்ன,ஜாம்ஜாம்னு திருவிழாவை நடத்துங்கோ!" ஆசிர்வதித்தார் ஆசார்யா.

வறட்சியா இருக்கிற ஊர்னு தெரிஞ்சும் நாகப்பட்டணத்துல வியாசபூஜை பண்ணணும்,சாதுர்மாஸ்ய விரதம் இருக்க முகாம் இடணும்னு பெரியவா தீர்மானித்தது, அங்கே அங்கே நிலவற வறட்சியை நீக்கவேண்டிய பணி தனக்கு இருக்குன்னு முன்பே அவருக்கு தெரிந்ததாலேயா ? இதற்கு  விடை, நாகை நீலாயதாக்ஷிக்கும் மகாபெரியவாளுக்கும் மட்டும் தெரிந்த  ரகசியம்.

இந்த கொதிக்கும் கோடை வெப்பத்ததையும் பெரியவா கருணை நிச்சயம் குளிமையாக்கும்.


ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர!!!


ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.