சிலிர்க்க வைக்கும் ஷீரடி அற்புதங்கள்

  கோமதி   | Last Modified : 31 May, 2018 01:02 pm
miracles-of-shirdi

தன்னை தேடி வருவோரை மட்டுமன்றி தன்னை நினைப்பவர்களின்  பாவங்களையும் நீக்கி  மேன்மை அளித்த,அளித்துக் கொண்டிருக்கும் புண்ணிய பூமி ஷீரடி.

அடியவர்களோடு அடியவராக, எளிமையே மனித உருவாக இந்த மண்ணிற்கு வந்த சாயி பகவான்  வாழ்ந்த இடம். அவர் பாதத்தை முத்தமிட்ட  ஷீரடியின் ஒவ்வொரு கல்லும், முள்ளும் பாக்கியம் செய்தவை.

அவர் தம் அடியவர்கள் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்கள் ஏராளம்.அவற்றில் ஒன்றை இந்த பதிவில் பார்க்கலாம்.

மராட்டிய மாநிலம் அகமத் நகரைச் சேர்ந்தவர் தாமோதர் சால்வாராம் ராஜனே சாகர். வளையல் வியாபாரம் உள்பட பல விதமான தொழில்களை இவர் செய்து வந்தார்.

ஒரு தடவை இவர் மற்றொரு வியாபாரியுடன் சேர்ந்து பஞ்சு வியாபாரம் செய்வதற்கான வாய்ப்பு வந்தது. அந்த வியாபாரத்தில் ஈடுபட தயாரான தாமோதர், எதற்கும் தான் கண்கண்ட தெய்வமாக வழிபடும் பாபாவிடம் அனுமதி கேட்போம் என்று நினைத்து ஷீரடிக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார்.

அந்த கடிதத்தை படித்த பாபா, ‘‘இவனுக்கு பண ஆசை போகவே போகாது. இருக்கிற பணத்தை வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டியது தானே…. ஏன் இப்படி பணம், பணம் என்று அலைகிறான்’’ என்று கோபப்பட்டார்.

பிறகு அவர் பஞ்சு வியாபாரத்தில் ஈடுபட வேண்டாம் என்று தாமோதருக்கு கடிதம் எழுதி அனுப்புங்கள் என்று உத்தரவிட்டார். பாவின் கடிதத்தை படித்த தாமோதர் அதிர்ச்சி அடைந்தார். பல லட்சம் ரூபாய் கிடைக்கும் வியாபாரத்தை பாபாவின் உத்தரவால் கைவிட வேண்டியதிருக்கிறதே என்று நினைத்தபடி பஞ்சு வியாபாரத்தை அவர் விலக்கினார்.

சிறிது நாட்கள் கழித்து தாமோதர் ஷீரடி வந்தார். பாபாவிடம் ஆசி பெற்ற அவர், ‘‘பாபா நான் தானியம் ஏற்றுமதி தொழில் செய்யலாம் என்று முடிவு  செய்துள்ளேன். இந்த தொழிலில் நிறைய லாபம் கிடைக்கும். அதற்காக இப்போதே தானியம் உற்பத்தியாளர்களுக்கு பணம் கொடுக்கலாம் என்றிருக்கிறேன். இந்த தொழிலை செய்யட்டுமா?’’ என்று கேட்டார்.

அதைக் கேட்டதும் பாபா சிரித்தார். ‘‘நீ உன்னிடம் இருக்கிற பணத்தை வைத்துக் கொண்டு சந்தோஷமா இரு. இப்போதைக்கு நீ எந்த தொழிலிலும் ஈடுபட வேண்டாம். அமைதியாக இரு’’ என்றார். பாபா இப்படி சொல்லி விட்டாரே என்று தாமோதருக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த சமயத்தில் பஞ்சு விலையும் தானியங்கள் விலையும் பல மடங்கு உயர்ந்து விற்பனை ஆயின.

அதைக் கண்ட தாமோதர், ‘‘ச்சே… பாபாவிடம் கேட்டதால் பல லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்காமல் போய் விட்டதே. புதிய தொழில் பற்றி அவரிடம் கேட்காமல் இருந்திருக்கலாமோ?’’ என்று தாமோதர் நினைத்தார். மனதுக்குள் குமைந்தார். வேதனைப்பட்டார்.

இந்த நிலையில் ஓரிரு நாட்களில் சர்வதேச சந்தையில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டன. நாடெங்கும் தானியங்கள் விலையும் பஞ்சு விலையும் அதிரடியாக குறைந்தன. அடுத்த ஓரிரு நாட்களில் அவற்றின் விலை படுபாதாளத்துக்குப் போய் விட்டது.

அந்த வியாபாரத்தில் ஈடுபட்ட அனைவரும் பல லட்சம் ரூபாய் நஷ்டத்தால் தலையில் துண்டு போட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். தாமோதர் இந்த வியாபார மாற்றத்தை கண்டு ஆச்சரியத்தில் மூழ்கினார். அவர் மட்டும் அந்த இரு தொழில்களிலும் ஈடுபட்டிருந்தால் எல்லாவற்றையும் இழந்து தெருவுக்கு வந்திருப்பார். எல்லாம் அறிந்த பாபா உரிய நேரத்தில் தாமோதரை தடுத்து நிறுத்தி காப்பாற்றி விட்டார்.

பாபாவின் குறிப்புகள் சில ஆரம்பத்தில் நமக்கு புரியாமல் போகலாம்.ஆனால் தன்னுடைய குழந்தைக்கு ஏது தேவை என்பதை அறிந்து கொடுக்கும் தாய்க்கு நிகரானவர் நம் சாய்.அந்த கருணாமூர்த்தியை, இந்த குருவாரத்தில் பணிந்து போற்றுவோம்.

ஓம் ஸ்ரீ சாய் ராம்...

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close