விநாயகரிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது

  கோமதி   | Last Modified : 04 Jun, 2018 04:27 pm
things-we-have-to-learn-from-vinayaga

பொதுவாக வீட்டில் உடைந்த சுவாமி சிலை மற்றும் பொம்மைகளை வைத்துக் கொள்ளக் கூடாது என்பார்கள். ஆனால் விக்கினங்களை தீர்க்க வல்ல விநாயக பெருமானின் இடது தந்தம் உடைந்து தான் காணப்படும். விநாயகருக்கு விக்கினமா?

தனக்கு மேல் ஒரு தலைவனும் இல்லாத இறைவனுக்கு எப்படி அந்த தந்தம் உடைந்தது என்பதை இப்பதிவில் காணலாம். மகாபாரதக் கதை எழுதக்கோரிய தேவர்களின் கோரிக்கையை ஏற்றார் வேத `வியாசர். ஆனால் தான் எழுதப்போகும் பாரதத்தை மிகவும் பண்டிதரான ஒருவர் தான், தான் சொல்ல சொல்ல புரிந்துக் கொண்டு, பிழையின்றி எழுத வேண்டும் என்று விருப்பப்பட்டார். சிவபெருமானை வேண்டி விநாயகரை எழுதிக்கொடுக்க கேட்குமாறு வியாசருக்கு ஆலோசனைக் கூறினார் பிரம்மா.

விநாயகர் ஞானத்தின் உறைவிடம் என்பதால் வியாசரும் விநாயகரிடம் உதவி கேட்டார். வியாசரின் வேண்டுகோளுக்கு ஒத்துக்கொண்ட விநாயகரும், தன் பங்கிற்கு ஒரு நிபந்தனை விதித்தார். அதாவது வியாசர் எக்காரணத்தைக் கொண்டும் நிறுத்தாமல் தொடர்ந்து முழு கதையையும் கூற வேண்டும் என்றும், அப்படி சொல்வதை நிறுத்திவிட்டால் தானும் எழுதுவதை நிறுத்திவிட நேரிடும் என்றும், அப்படியே தான் ஒரு வேளை எழுதுவதை நிறுத்தி விட்டால், பிறகு வியாசர் எழுத வேரொருவரைத்தான் தேட வேண்டும் என்றும் கூறினார். இந்த நிபந்தனைக்கு சற்றும் யோசிக்காமல் சம்மதம் தெரிவித்தார் வியாசர்.

வியாசர் தான் ஒத்துக்கொண்டபடி நிறுத்தாமல் மகா பாரதக்கதையின் பாக்களை சொல்லச்சொல்ல விநாயகரும் தொடர்ந்து வேகமாக எழுதினார். எழுதுவதற்கு முன்பு வியாசர் விநாயகரிடம் தான் கூறும் ஒவ்வொரு பாடலையும் அதன் முழுப்பொருளை புரிந்துக்கொண்ட பின்பே எழுதவேண்டும் என்று கூறினார்.

விநாயகரும் அதற்கு ஒப்புக்கொண்டார். வியாசர் கூறி முடிக்கும் முன்பாகவே விநாயகர் அதன் பொருள் புரிந்து வேகமாக எழுதிக்கொண்டிருந்தார், அப்படி வேகமாக எழுதும் போது அவருடைய எழுத்தானி உடைந்துவிட்டது. வேறு எழுத்தாணி தேட அவகாசம் இன்றியும், தான் போட்ட நிபந்தனையை தானே மீறக்கூடாது என்று நினைத்த விநாயகர் தன் இடது தந்தத்தை உடைத்து அதனைக்கொண்டு எழதி முடித்தார்.இதன் காரணமாகவே விநாயகர் ஏகதந்தா (ஓர் தந்தம்) என்று அழைக்கப்பட்டார்.

இதைத் தவிர இன்னொரு சுவாரசியமான கதையும் உண்டு. ஒருமுறை விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றான பரசுராமர் தன் எதிரி கர்த்தவீர்ய அர்ஜீனனை அழித்து விட்டு சிவனை பார்க்க கைலாசம் வந்தார். அப்பொழுது அவரை வழிமறித்த விநாயகர் தன் தந்தை ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதால் தற்பொழுது அவரைப்பார்க்க இயலாது என்று கூறிவிட்டார், இயல்பிலேயே கோபக்காரரான பரசுராமர் வெகுண்டெழுந்து, விநாயகருடன் சண்டையிட துவங்கி விட்டார். பரசுராமருடன் நடந்துக் கொண்டிருந்த யுத்தத்தில்,விநாயகர் வெற்றியடையும் நிலையில் இருந்தார்.

அப்போது பரசுராமர் சிவன் தனக்கு பரிசாக தந்த கோடரியை எடுத்து விநாயகரை நோக்கி வீசினார். அந்த ஆயுதத்தை எதிர்த்து போரிடுவது தன் தந்தையை அவமதிப்பதாக இருக்கும் என்றெண்ணிய விநாயகர்,கோடரியின் தாக்குதலை தன் தந்தத்தில் வாங்கிக்கொண்டார். இதனால் விநாயகரின் இடதுபக்க தந்தம் உடைந்து விட்டது.

கதை என்றாலும் இதில் நாம் அறிந்துக் கொள்ள வேண்டியது...முதல் கதையில் ஞானத்திற்காகவும்,இரண்டாவது கதையில் தந்தையின் மேல் இருந்த மரியாதைக்காகவும் விநாயகர் தனது தந்தத்தை உடைத்தார். இவை இரண்டுமே நம் வாழ்வில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாகும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close