திருப்பங்கள் தரும் திருவேங்கடவனுக்கு செய்யப்படும் அன்றாட சேவைகள்

  கோமதி   | Last Modified : 10 Jun, 2018 04:58 pm
everyday-services-to-thiruvegadavan-who-gives-turning-point-in-life

திருமலை திருப்பதி, பக்தர்கள் பலருக்கும் வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்களை தந்துக் கொண்டிருக்கிறது. திருமால் தூணிலும் துரும்பிலும் இருக்கிறார் என்றாலும், திருமலைக்கு சென்று பெருமாளை சேவிப்பதில் இருக்கும் ஆனந்தமும் ஆத்மதிருப்தியும் வார்த்தைக்களுக்குள் வசப்படாதது. தன்னை நோக்கி வரும் பக்தர்களுக்கு வள்ளலாய் அருள் மழை பொழிந்துக் கொண்டிருக்கும் திருப்பதி வேங்கடவனுக்கு தினமும் காலை முதல் இரவு வரை நடைபெறும் ‘நித்திய சேவைகளைப்’ பற்றி அறிந்துக் கொள்வோம். தன்னை நோக்கி வரும் தனது அடியவர்களுக்கு, முகம் வாடாமல் நின்றபடி அருளும் வேங்கடவனுக்கு அன்றாட பூஜைகள் ஆனந்தமாய் நடந்தேறும்.

சுப்ரபாத சேவை:

சுப்ரபாத சேவையுடன் விடிகிறது உலகலந்தவனின் காலை பொழுது. தினமும் அதிகாலை 2.30 முதல் 3.00 மணியளவில் பெருமாளை துயிலெழுப்பும் சுப்ரபாத சேவை நடைபெறும். தங்கவாசல் முன்பு அன்னமய்யா பரம்பரையை சேர்ந்தவர்கள் ‘பூபாள ராகத்தில்’ அன்னமய்யாவின் திருப்பள்ளி எழுச்சி கீர்த்தனையை இசைக்க, அர்ச்சகர் ஒருவர் சுப்ரபாதத்தை பாடியவாறு பெருமாளை துயிலெழுப்புவார். பின்பு அர்ச்சகரால் ‘நவநீதஹாரத்தி’ காட்டப்படும்போது பக்தர்கள்  தரிசிக்க தங்கவாசல் திறக்கப்படும்.

தோமாலை சேவை:

பெருமாள் ‘அலங்கார பிரியர்.’ சுந்தரரான பெருமாளை  புஷ்ப அலங்காரத்தில் தரிசிப்பது ‘தோமாலை சேவை’ எனப்படும். முதலில் ‘போக ஸ்ரீனிவாசமூர்த்திக்கு ’ ஜீயர் ஸ்வாமிகள்அளித்த  பூமாலைகளால்  அலங்காரம் செய்தப் பின்னர், மூலவருக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்படும். ‘திருவடி மாலை’, ‘சிகாமணி’ மாலை, ‘சாளக்ராம மாலைகள்’, ‘கண்டசரி’ என்ற பெரிய மாலை என்று பல்வேறு மாலைகளால் திருவேங்கடவனுக்கு அலங்காரம் செய்யப்படும். எம்பெருமானுக்கு மலர் அலங்காரம் செய்தப் பின்,அவரை நொடிப் பொழுதும் அகலாமல் அவர்தம்   திருமார்பில் உறைந்திருக்கும்  ஸ்ரீதேவி, பூதேவிகளுக்கும் மலர்மாலை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டும்.பின்  தூபம், தீபம், நட்சத்திர ஆரத்தி ஆகியவற்றை தொடர்ந்து கற்பூர ஆரத்தி விமரிசையாக காட்டப்படும்.

கொலுவு (தர்பார்):

கண்களைப் பறிக்கும் சொர்ண சிம்மாசனத்தில் கோலாகலமாக கொலுவிருக்கும் ‘கொலுவு ஸ்ரீநிவாசமூர்த்திக்கு’ பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டு அன்றைய திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் மற்றும் அன்றைய உத்ஸவங்கள் பற்றியும் சொல்லப்படும். கணக்காளர் மூலம் வருவாய், காணிக்கைகள் போன்ற தகவல்கள் சீனிவாசனுக்கு வணக்கத்துடன் விவரமாக கூறப்படும்.

சஹஸ்ரநாமார்ச்சனை:

உலக நன்மைக்காக பிரம்ம முகூர்த்த சமயத்தில், ‘சஹஸ்ர நாம அர்ச்சனை’ எம்பெருமானின் திருப்பாதங்களில் துளசி சமர்ப்பித்து செய்யப்படுகிறது.அவரது மார்பில் வசிக்கும் ‘மஹாலக்ஷ்மிக்கும்’ அர்ச்சனையுடன் நட்சத்திர ஆரத்தியும் காட்டப்படும்.

நித்திய கல்யாணோத்சவம்:

தன் மக்கள் அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று வாழவும்  வையத்து பெண்கள் சுமங்கலிகளாக இருக்க வேண்டும்’ என்ற மகாசங்கல்பத்துடனும், ‘நித்திய கல்யாண’  மலையப்ப சுவாமிக்கு ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன், தினமும் நண்பகல் 12 முதல் 1 மணி வரை நித்திய கல்யாண உத்சவம் நடத்தப்படுகிறது.

டோலோத்ஸவம்:

கல்யாண உற்சவம் நிறைவுற்ற பிறகு, கண்ணாடி மண்டபத்தில் உள்ள ‘டோல்’ எனப்படும் ஊஞ்சலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி எழுந்தருளி ‘கற்பூர நீராஜனம்’ ஏற்கும் வைபவமே ‘டோலோத்ஸவம்’ எனப்படும்.

ஆர்ஜித பிரம்மோத்சவம்:

திருவேங்கடவன் தமது உபய நாச்சியார்களுடன் சேஷ, கருட மற்றும் அனுமன் வாகனங்களில் எழுந்தருளி ‘கற்பூர நீராஜனம்’ ஏற்பது ‘ஆர்ஜித பிரம்மோத்சவம்’ ஆகும்.

ஆர்ஜித வசந்தோற்சவம் :

ஒவ்வொரு நாளும் மாலை 3 மணிக்கு பக்தர்கள் முன்னிலையில் ‘வசந்தோற்சவ’ மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்படுவது ‘ஆர்ஜித வசந்தோற்சவம்’ ஆகும்.

சஹஸ்ர தீபலங்கார சேவை:

திருமலை வேங்கடவன் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கொலு மண்டபத்தில் ‘சஹஸ்ர’(ஆயிரம்) தீபங்களுக்கு மத்தியில் இருக்கும் ஊஞ்சலில் கோடி சூர்ய பிரகாசம் உடையவராக தரிசனம் தருவது ‘சஹஸ்ர தீபலங்கார சேவை’ எனப்படும்.

ஏகாந்த சேவை:

சயன மண்டபத்தில் வெள்ளி சங்கிலியால், தங்க கட்டிலை இணைத்து, அதில் பட்டு மெத்தை, தலையணை அமைத்து,சுவாமிக்கு பாத நமஸ்காரம் செய்து, போக ஸ்ரீநிவாச மூர்த்தியை அதில் பள்ளி கொள்ளுமாறு செய்யப்படும். அச்சமயத்தில் ‘அன்னமய்யாவின்’ தாலாட்டு பாடல் பாடப்படும்.துயில் எழும்போதும்,துயில் கொள்ளப் போகும் போதும் பெருமாளுக்கு அன்னமய்யாவின் பாடல் தான் பாடப்படுகிறது. எத்தனை பேறு பெற்றவர் அன்னமய்யா.

வேங்கடமுடையானின் இந்த சேவைகளைப் பார்த்தப் பின் நம் புலன்களுக்கு வேறு என்ன தேவை இருக்கப் போகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close