பதவி உயர்வும், வாக்கு வளமும் தரும் அன்னை ராஜமாதங்கி

  கோமதி   | Last Modified : 13 Jun, 2018 08:06 pm
goddess-to-be-worshiped-for-good-position


திருமகளும்,கலைமகளும் ஒரு சேர கொலுவீற்றிருக்கும் அன்னை ராஜமாதங்கி, தன்னை வணங்குபவர்களுக்கு கலைகளில் தேர்ச்சியும், பதவி உயர்வும், வாக்கு வளமும் அளிப்பவள்.தன்னிகரில்லா  ஒப்பற்ற அழகும், கம்பீரமும் கொண்ட அன்னை ராஜமாதங்கி, ராஜ ஸ்யாமளா, மாதங்கி, காதம்பரி, வாக்விலாஸினி என்று பலவாறு துதிக்கப்படுபவள்.  கவிகாளிதாஸர் ஷ்யாமளா தண்டகம் முழுவதும் இவளின் பெருமையை பாடிப் பரவசப்பட்டுள்ளார். மேலும் ஆதிசங்கரர், இவளை போற்றித் துதித்து பணித்துள்ளார். `ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தில், ராஜ ஷ்யாமளா’ என்ற திருநாமத்தில் போற்றப்படுகிறாள். சாக்த வழிபாட்டில் சப்த மாதாக்களில் ஒருவராகவும், தசமகா வித்யாக்களில் ஒன்பதாவது தேவியாகவும் வணங்கப்படும் ராஜ மாதங்கி  அன்னையின் அவதாரம் குறித்த நிகழ்வுகளை தெரிந்துக்  கொள்வோம். 

ஊழிக்காலத்தின் இறுதிப்பகுதியில்  புதிதாகத் தோன்றிய பிரம்மதேவன், `மதங்கம்’ எனும் யானையின் வடிவம்கொண்டு சிவனைத் துதிக்க ஆரம்பித்தார். சிவனின் பேரருளால் படைப்புக்கான ஆற்றலையும் பிரம்மா பெற்றார்.  பின்னர், பூவுலகின் பல புண்ணிய சிறப்புகளைக் கொண்ட  திருவெண்காடு என்னும் ஸ்வேதவனத்தில்  சிவனை எண்ணி தியானம் இருந்தார். அத் தலத்தின் நாயகனான  விடையேறு நாதரிடம் , அன்னை பார்வதியே தனக்கு மகளாக பிறக்க வேண்டும் என்றும் அவரை மணந்துகொண்டு சிவனே தனக்கு மருமகனாக இருக்க வேண்டும் என்று வரம் கேட்டார். அப்படியே சிவனும் அருளினார்.  மஹாசக்தியின் ஸ்வரூபமாக, அன்னையின் மந்திரிணி சக்தி அவருக்கு மகளாகப் பிறந்தாள். திருமகளின் அம்சங்களுடன் பிறந்த அன்னை ராஜ ஷ்யாமளாவிற்கு  ஏழு வயது நிறைவடைந்தபோது, ஈசன் மதங்கேஸ்வரராக ,முப்பெரும் தேவியர் புடைசூழ, திருவெண்காட்டில் திருமணம் செய்துகொண்டார். 

மதங்கேஸ்வர - மாதங்கி திருமண வைபோகத்தில், அன்னை மாதங்கிக்கு எந்தச் சீர்வரிசையுமே செய்யப்படவில்லை எனத் தேவர்களில் சில பிரிவினர் வாக்குவாதம் செய்தர். சர்ச்சை பெரிதாகவே, சிவனே தலையிட்டு, `சீர்வரிசை தருவதும் பெறுவதும் தவறு’ எனக் கண்டித்ததுடன், சிவனின் ஆணைப்படி நந்திதேவர் கயிலையில் இருந்து பெரும் செல்வத்தினைக் கொண்டு வந்து, அன்னைக்கு கொடுத்ததாக திருநாங்கூர் மாதங்கீஸ்வரர் ஆலய தலபுராணம் வழியாக நம்மால் தெரிந்துக் கொள்ள முடிகிறது. 

முப்பெரும் தேவியர்களின் அம்சமான  ஸ்ரீ ராஜ மாதங்கி, சாக்த ப்ரமோதத்தில், இசைவாணியாகவும், வாக் தேவதையாகவும்  வணங்கப்படுகிறாள். கலைகளின் தேவதையான  இவளுக்கு  நவாவர்ண பூஜையும், குங்கும அபிஷேகமும் மிகவும் பிடித்தமானது. சியாமளா நவரத்னமாலை, சியாமளா ஆவரணம், மாதங்கி ஸஹஸ்ரநாமம், சியாமளா தண்டகம், சியாமளா கவசம், மாதங்கி ஹ்ருதயம், ராஜமாதங்கி மந்தரம், மாதங்கி ஸ்தோத்திரம், மாதங்கி ஸுமுகி கவசம், ஸ்யாமளா ஸஹஸ்ரநாமம் போன்ற பல துதிகளால் அன்னையை வணங்கலாம்.  

வாழ்வில் சகலக் கலைகளில்  தேர்ச்சிப் பெறவும், செல்வ வளத்தினைப் பெறவும் அன்னையை  வெள்ளிக்கிழமை தோறும் வணங்கி சகல நன்மைகளும் பெற்று சிறப்பாக வாழ்வோம்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close