திருவாசகம் அருளிய மாணிக்க வாசகர் வரலாறு!

  கோமதி   | Last Modified : 19 Jun, 2018 04:44 pm
tiruvasagam

அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!

படிக்கும் போதே - பாடும் போதே நெஞ்சை உருக்கும் அற்புத தெய்வத் தமிழ் இது. திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார். இது சத்யம் தோய்ந்த வரிகள். மாணிக்க வாசகரின் ஒவ்வொரு சொல்லும் தெவிட்டாத தேனின்பம்.

சைவ சமயக் குரவர்கள் நால்வருள் ஒருவர். சிவனடியார்கள் பலர் இருந்தாலும் சிவனுக்கு மிக நெருக்கமானவர்களுள் முக்கியமானவர் மாணிக்கவாசகர். பாண்டிவள நாட்டில் வைகை ஆற்றங்கரையிலுள்ள திருவாதவூர் என்னும் ஊரில் அமாத்தியர் மரபில் சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாக  அவதரித்தார்.பிறவியிலேயே ஞானம் பெற்றுத் திகழ்ந்தார் மாணிக்க வாசகர்.

மாணிக்க வாசகரின்  அறிவாற்றலைக் கேள்விப்பட்ட மன்னன் அரிமர்த்தன பாண்டியன், இவரை வரவழைத்து அமைச்சர் பதவியை அளித்து தென்னவன் பிரமராயன் என்ற பட்டத்தையும் அளித்தார். ஆனால் உயர்ந்த பதவி, செல்வம் அனைத்தும் இருந்தும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என  சிவ வழிபாட்டில் ஈடுபாடு காட்டினார்.

சோழநாட்டில் நல்ல குதிரைகள் வந்திருக்கின்றன என்று கேள்விப்பட்ட மன்னன் வாதவூராரை குதிரைகள் வாங்கி வரும்படி பணித்தான். அதற்குத் தேவையான பொன்னைக் களஞ்சியத்தில் இருந்து எடுத்துக் கொண்டு படைவீரர்களுடன் புறப்பட்டார் வாதவூரார். இதைத் தான் எதிர்பார்த்தேன் என்பது போல, சிவபெருமான் தன் திருவிளையாடலை நிகழ்த்த ஆரம்பித்து விட்டார். அவர் ஒரு குருவைப் போல வேடம் பூண்டு திருப்பெருந்துறை என்னும் தலத்தில் போய் ஒரு குருந்த மரத்தடியில் அமர்ந்து கொண்டார். திருப்பெருந்துறையை அடைந்து விட்ட வாதவூரார் அங்கேயே தங்கும் படி தன் படையினருக்கு உத்தரவிட்டார். இங்குள்ள ஆத்மநாதர் கோயிலுக்குள் சென்றார்.

ஆத்மநாதர் திருக்கோயிலில்  லிங்கம் கிடையாது. ஆண்டவன் உருவமின்றி இருக்கிறான் என்பது இங்கு தத்துவம். ஆவுடையார் மட்டும் இருக்கும். மேலே லிங்கம் இருக்காது. லிங்கம் இருக்க வேண்டிய இடத்தில், அடையாளம் தெரிவதற்காக ஒரு குவளையை வைத்திருப்பார்கள். அங்குள்ள  திருக்குளத்தில்  குளித்து, உடலெங்கும் வெண்ணீறு பூசி, சிவப்பழம் போல் காட்சியளித்த வாதவூரார், கோயிலுக்குள் சென்று உருவமற்ற இறைவனை, மனதுக்குள் உருவமாக்கி உருகி உருகி வணங்கினார். பிரகாரத்திலுள்ள குருந்தமரத்தடியில் தட்சிணாமூர்த்தியாய் அமர்ந்திருந்த, சடை தாங்கிய சிவத்தொண்டரைக் கண்டார். அவர் முன் விழுந்து வணங்கி பாமாலை பாடினார். அவர் தான் சிவம் என்று வாதவூராருக்கு உறுதியாகத் தெரிந்தது. அதற்கேற்றாற் போல், தன் திருவடியைத் தூக்கிய சிவன், தன் முன்னால் பணிந்து விழுந்து கிடந்த வாதவூராரின் சிரசில் வைத்துத தீட்சை வழங்கினார். அன்று  முதல் வாதவூரார் மாணிக்கவாசகர் ஆகி விட்டார். 

மாணிக்கவாசகருக்கு மீண்டும் ஆசியளித்து விட்டு, சிவன் மறைந்துவிட்டார். சிவன் தனக்கு காட்சி தந்த அந்த ஊரிலேயே தங்கி சிவ கைங்கர்யம் செய்ய மாணிக்கவாசகர் முடிவு செய்தார். படையினரை அழைத்தார். குதிரை வாங்குவதற்கான ஏற்பாடுகளை நான் செய்து விட்டேன். குதிரைகளுடன் நான் ஆடிமாதம் மதுரைக்கு வருவதாக மன்னரிடம் சொல்லுங்கள். நீங்கள் எல்லாரும் இப்போது ஊருக்கு கிளம்பலாம், என்றார். படையினரும், அமைச்சரின் கட்டளையை ஏற்று ஊருக்குப் புறப்பட்டனர். பின், தான் கொண்டு வந்த பணத்தைக் கொண்டு கோயிலைத் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்தினார். கையில் இருந்த செல்வமும் வேகமாகக் கரைந்தது. இதனிடையே ஆடி பிறந்துவிட்டது. குதிரை வாங்க வந்த ஞாபகமே மாணிக்கவாசகருக்கு மறந்து போனது. அவர் எப்போதும் சிவாயநம... சிவாயநம என உச்சரித்தபடியே இருந்தார்.

பாண்டிய மன்னன், தன் அமைச்சரின் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தான். திருப்பெருந்துறையில் அவர் தங்கியிருக்கிறார் என்பதை ஏற்கனவே வந்த படைவீரர்கள் மூலம் தெரிந்திருந்த அவன், அவருக்கு ஒரு வீரன் மூலமாக ஓலை அனுப்பினான். ஓலையைப் படித்த பிறகு தான், அவருக்கு பழைய நினைவே திரும்பியது. நேராக ஆத்மநாதர் சன்னதிக்கு ஓடினார். ஐயனே! மன்னன் என்னை நம்பி, குதிரை வாங்க அனுப்பினான். நானோ, உன் திருப்பணிக்கென செல்வம் அனைத்தையும் செலவிட்டேன். இப்போது, குதிரைகளை அங்கு கொண்டு சென்றாக வேண்டுமே! நீ தான் வழிகாட்ட வேண்டும் என்று இறைஞ்சினார். அப்போது அசரீரி ஒலித்தது. 

கவலைப்படாதே மாணிக்கவாசகா! விரைவில் குதிரைகளுடன் வருவதாக பதில் ஓலை அனுப்பு. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன், என்றது அக்குரல். இறைவனின் குரல் கேட்ட மாணிக்கவாசகர், அவர் சொன்னபடியே மதுரைக்கு குதிரைகளுடன் வருவதாகப் பதில் ஓலை அனுப்பினார். அரிமர்த்தன பாண்டியனும் ஓலையைப் படித்து மகிழ்ந்தான். மன்னன் குறிப்பிட்டிருந்த காலம் நெருங்கியது. குதிரைகள் எப்படி வரும் என்ற கவலையில் இருந்த மாணிக்கவாசகரின் கனவில், மாணிக்கவாசகா! நீ உடனே கிளம்பு. நான் குதிரைகளுடன் வருகிறேன், என்றார்.

இறைவனை வேண்டி மாணிக்கவாசகர் பாண்டிய நாட்டுக்கு கிளம்பினார். அரண்மனைக்குச் சென்ற மாணிக்கவாசகரிடம், அமைச்சரே! குதிரைகள் எங்கே? எத்தனை குதிரை வாங்கினீர்கள்? என்று கேட்ட மன்னனிடம்,அரசே! தாங்கள் இதுவரை பார்த்திராத குதிரை வகைகள் வரிசையாக வந்து சேரும், என்று பதிலளித்தார் மாணிக்கவாசகர். 

குதிரைகள் வந்தனவா? ஈசனின் திருவிளையாடல்கள் தொடர்ந்தனவா? 

அடுத்த பாகத்தில்...

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close