திருவாசகம் அருளிய மாணிக்க வாசகர் வரலாறு! - பகுதி 2

  கோமதி   | Last Modified : 21 Jun, 2018 04:10 pm

tiruvasagam-siva-performed-two-dramas-for-manikavasagar

நீண்டநாட்களாகியும் குதிரைகள் வராததால் மன்னனுக்கு சந்தேகம் ஏற்பட்டு, நம்மை ஏமாற்றிய இவனைச் சிறையில் அடைத்து சித்ரவதை செய்யுங்கள், என ஆணையிட்டான். காவலர்கள் அவர் முதுகில் பெரிய பாறாங்கற்களை ஏற்றி கொடுமைபடுத்தினர். அரசுப் பணத்தைக் கொள்ளையடித்ததாக ஒப்புக்கொள்ளாவிட்டால் மறுநாள் தண்டனை அதிகரிக்கும் என்று எச்சரித்து சென்றனர். இதற்குள் மன்னன் விதித்த கெடு காலமான ஆடி முடிந்து ஆவணி பிறந்துவிட்டது. அம்மாதத்தில் வரும் மூலம் நட்சத்திர நாளன்று சிவபெருமான் நந்தீஸ்வரரை அழைத்தார். நந்தி! என் பக்தன் மாணிக்கவாசகன், குதிரை வாங்கித்தராத குற்றத்திற்காக பாண்டியநாட்டு சிறையில் அவதிப்படுகிறான். நீயும், நம் பூதகணத்தவர்களும் காட்டிலுள்ள நரிகளை குதிரைகளாக்கி அங்கு கொண்டு செல்லுங்கள். நான் குதிரை வீரனாக உங்களுடன் வருவேன், என்றார். நந்தீஸ்வரரும் மகிழ்ச்சியுடன் அவ்வாறே செய்தார். 

ஆயிரக்கணக்கான குதிரைகள் மதுரை நகருக்குள் அணிவகுத்து வந்தது பற்றி மன்னனுக்கு தகவல் சென்றது. அந்த அழகான, விலைமதிக்க முடியாத குதிரைகளைக் கண்டு மன்னன் ஆச்சரியப்பட்டான். அன்று இரவே அந்த குதிரைகள் அனைத்தும் நரிகளாகி ஊளையிட்டன. தன்னை ஏமாற்றி விட்ட மாணிக்கவாசகரை சுடுமணலில் நிற்க வைத்தனர். தூரத்தில் தெரிந்த மீனாட்சியம்மன் கோபுரத்தைப் பார்த்து, இறைவா! இதென்ன சோதனை! குதிரைகளை நரிகளாக்கிய மர்மம் என்ன? இத்தகைய கொடுமைக்கு ஏன் என்னை ஆளாக்கினாய்? என்று கண்ணீர் விட்டார். சுடுமணல் நிறைந்து கிடந்த அந்த ஆற்றில் மழையே பெய்யாமல் திடீரென வெள்ளம் பெருகி வந்தது. காவலர்கள் அடித்து பிடித்துக் கொண்டு கரைக்கு ஓடினர். ஆனால், மாணிக்கவாசகரைக் கட்டியிருந்த கற்கள் உடைந்தன. அவர் எழுந்தார். அவர் நின்ற பகுதியில் மட்டும் வெள்ளம் அவரது பாதங்களை நனைத்துக்கொண்டு மூழ்கடிக்காமல் ஓடியது. சற்றுநேரத்தில் வெள்ளத்தின் அளவு மேலும் அதிகரித்து கரை உடைத்தது. 

மாணிக்கவாசகர் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. எம்பெருமானைப் புகழ்ந்து பாடியபடி குளிர்ந்த நீரில் நடப்பது நடக்கட்டுமென நின்றார். வைகை நதியின் வெள்ளப் பெருக்கு மதுரை நகரை அலைக்கழித்தது. வீட்டுக்கு ஒருவர் கரையை அடைக்கும் பணிக்கு வரவேண்டுமென முரசறைந்து அறிவிக்கப்பட்டது. மதுரையில் வந்தி என்னும் மூதாட்டி பிட்டு விற்று பிழைப்பவள். அவள் தினமும் முதல் பிட்டை சுந்தரேஸ்வரருக்கு நைவேத்யம் செய்வாள். அதை சிவனடியார் ஒருவருக்கு பிரசாதமாகக் கொடுத்து விடுவாள். வந்திக் கிழவிக்கும் கரையை அடைக்கும் பணியின் ஒரு பகுதி தரப்பட்டது. கூலிக்கு ஆள் தேடினாள். சுந்தரேஸ்வரப் பெருமான் தனக்கு தினமும் பிட்டிட்டதுடன் தர்மமும் செய்து வணங்கிய அந்த பெருமூதாட்டிக்கு உதவி செய்ய முடிவெடுத்து கூலி ஆள் போல பாட்டி முன் வந்து 

“பாட்டி! உனக்கு பதிலாக நான் கரையை அடைக்கிறேன், பதிலுக்கு நீ எனக்கு பிட்டு மட்டும் கொடுத்தால் போதும் என்றார். பாட்டியும் ஒத்துக் கொண்டாள். பின் ஒழுங்காக பணி செய்யாமல், மண்ணை வெட்டுவது போலவும், பாரம் தாங்காமல் அதே இடத்தில் கூடையை கீழே தவற விட்டது போலவும் நடித்தார். அப்போது அரிமர்த்தனபாண்டியனே பணிகளைப் பார்வையிட அங்கு வந்ததைக் கண்ட சுந்தரேஸ்வரர், ஒரு மரத்தடிக்குச் சென்று, உறங்குவது போல பாசாங்கு செய்தார். யாரோ ஒருவன் வேலை செய்யாமல், தூங்குவதைக் கவனித்து விட்ட மன்னன், அங்கு வந்து அவரை பிரம்பால் அடித்தான். அந்த அடி உலக உயிர்கள் அனைத்தின் மீதும் விழுந்தது. உடனே அந்த கூலியாள் ஒரு கூடை மண்ணைக் கரையில் கொட்டியதும் வெள்ளம் வற்றிவிட்டது. 

இதைக் கண்ட மன்னன் அதிசயித்தான். இந்த அதிசயம் நிகழக்காரணமாய் இருந்த மூதாட்டி வந்தியைக் காணச் சென்ற போது, வானில் இருந்து புஷ்பக விமானத்தில் வந்த சிவகணங்கள், “ தங்களை அழைத்து வரும்படி சிவபெருமானே உத்தரவிட்டார், தாங்கள் எங்களுடன் வாருங்கள்”, என்று அழைத்துச்சென்றனர். அவளும் மகிழ்வுடன் சிவலோகத்துக்குப் பயணமானாள். உடனே பாண்டியன், எனக்கெதற்கு இந்த அரசாங்கம்? இதனால், என்ன பலன் கண்டேன். என புலம்பினான். அப்போது அசரிரீ ஒலித்தது. அரிமர்த்தனா! திருவாதவூராரின் பொருட்டு இந்த லீலைகளைப் புரிந்தது நானே! என்றார். தனது தவறை உணர்ந்து அவரிடம் மன்னிப்பு கேட்ட மன்னன், மீண்டும் அமைச்சர் பொறுப்பேற்க வேண்டினான்.

மாணிக்கவாசகரோ அதை ஏற்காமல் அவனை ஆசிர்வதித்து விட்டு, தில்லையம்பலமாகிய சிதம்பரத்துக்குச் சென்று விட்டார். 
அங்கு வேதியர் போல அமர்ந்திருந்த சிவபெருமான், மாணிக்கவாசகர் பாடப்பாட ஓலைச்சுவடியில் எழுதத் தொடங்கினார். எழுதி முடித்த சிவபெருமான் அந்த ஓலைச்சுவடியின் மேல் மணிவாசகன் சொன்ன திருவாசகத்தை எழுதியது அழகிய திருச்சிற்றம்பலமுடையான் என்று கையொப்பமிட்டு சிதம்பரம் கனகசபையில் வைத்து விட்டு மறைந்து விட்டார்.

அப்போது தான் மாணிக்கவாசகருக்கு தான் கூறிய திருவாசகத்தை எழுதியது சிவபெருமான் என்பது தெரியவந்தது. பன்னிரு திருமுறைகளில் 8ம் திருமுறை மாணிக்கவாசகரால் பாடப்பட்ட திருவாசகமும், திருக்கோவையாரும் ஆகும்.ஞானநெறியைப் பின்பற்றிய இவர் 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் சிவனடி சேர்ந்தார்

ஓம் நமசிவாய ஓம்

முதல் பகுதியைப் படிக்க...

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.