மன நோய் மற்றும் மனக்குழப்பம் தீர செல்ல வேண்டிய கோவில்

  கோமதி   | Last Modified : 22 Jun, 2018 07:34 pm
temple-to-recover-mental-illness-and-disorder

மனித வாழ்க்கையில் மிகப் பெரிய சிக்கல் வறுமையோ, நோய் நொடிகளோ மட்டும் இல்லை. மனக்குழப்பமாக ஆரம்பித்து  மன அழுத்தமாக மாறி அதுவே தீராத மனநோயாக உருவெடுத்து விடுகிறது. கவலை வேண்டாம் உங்கள் மன நோயை – மனக்கவலைகளை – மனக்குழப்பத்தை நான் தீர்த்து வைக்கிறேன் என்று அருள் பாலிக்கிறார் குணசீலம் பெருமாள். திருச்சி மாவட்டம் முசிறி வட்டத்தில் உள்ளது குணசீலம். குணசீல  மகரிஷியின் தவத்தையும் வேண்டுகோளையும் ஏற்று குணசீலத்தில் பிரசன்ன வேங்கடாசலபதியாக  இந்த திருத்தலத்தில் அருள்பாலிக்கிறார் வைகுண்ட வாசனான  மகாவிஷ்ணு.

திருப்பைஞ்சலி ஆசிரமத்தில் குரு தால்பியருடன் வசித்து வந்தவர் குணசீலர் மகிரிஷி. திருமலை ஏழுமலையானை க்ருத  யுகத்தில் அவ்வளவு எளிதில் எவராலும் தரிசனம் செய்ய முடியவில்லை. அந்த காலகட்டத்திலேயே தமிழகத்தில் வேங்கடவன் தரிசனம் தர வேண்டும் என்று நெக்குருக வேண்டினார். திருமலை சென்று  வேங்கடமுடையானை தரிசித்து தமிழகத்திற்கு எம்பெருமானை வரவழைக்க காவிரிக் கரையில் தவமியற்றினார். 

குணசீலர் மகிரிஷியின் கடும்  தவத்தை பார்த்து, இதனால் தனது  பதவிக்கு ஆபத்து என்று இந்திரன் பயந்தார். அதனால் யாகத்தை கெடுக்க பல தொல்லைகள் கொடுத்தார். இருந்தாலும் ஒரே சிந்தனையாக  ஏழுமலை வாசன் தமிழகத்தில் அருள்பாலிக்க வர வேண்டும் என உறுதியாக  மன வேள்வி வளர்த்தார்  குணசீலர் மகிரிஷி.

மகரிஷியின் மனவேள்வி தனக்கு எதிரானதில்லை என்பதை உணர்ந்த இந்திரன் குணசீலரை வாழ்த்தினார்.

புரட்டாசி திருவோண நட்சத்திரத்தில் அமைந்த ஒரு  சனிக்கிழமையன்று   தேவி பூதேவி சமேதராய் குணசீலருக்கு , பெருமாள் கருட வாகனத்தில் காட்சியளித்தார் . கலியுக இறுதிவரை பக்தர்களுக்கு அருள்பாலிக்க திவ்ய விக்ரக ரூபமாய்  இந்த தலத்தில் தங்க வேண்டும் என்ற குணசீலரின் வேண்டுகோளை ஏற்றார் பெருமாள்.  மகரிஷி குணசீலரின் பெயராலேயே அந்த இடம் அழைக்கப்பட வேண்டும் என்றும் பகவான் திருவாய் மலர்ந்தார். க்ருத யுகத்தில் தொடங்கி த்வாபர யுகம் வரை  வைகாநச சாஸ்திர முறைப்படி ஆராதனை செய்து வந்தார். குரு தால்பியருடன் தீர்த்த யாத்திரை செல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டதால், சீடர்  ஒருவரை அழைத்து, பெருமாளுக்கு நித்ய ஆராதனை செய்ய உத்தரவிட்டார் குணசீலர். 

காவிரியில் வெள்ளப்பெருக்கு, வன விலங்குகளின் தொல்லை என சில   காரணங்களால் , பெருமாளுக்கு நித்ய கடமைகளை தொடர்ந்து செய்ய முடியாமல் அங்கிருந்து புறப்பட்டு விட்டார் சீடர். இதனால் தன்னை புற்றினால்  முழுவதும் மறைத்துக் கொண்டார் பெருமாள். புற்றால் மூடப்பட்ட பகவான் இருந்த இடம் காலமாற்றங்களில் கண்களில் இருந்து மறைந்தது.

உறையூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ஞானவர்மன் என்ற சோழ மன்னனின் கோசாலை, குணசீலம் அருகில் உள்ள கல்லூர்  என்ற இடத்தில் இருந்தது. புற்று அமைந்திருந்த புல்வெளியில் மேய்ந்த பசுக்களிடம் பால் கறந்து அரண்மனைக்கு எடுத்துச்  செல்வது வழக்கமாயிருந்தது. ஒரு  நாள், கறந்து வைக்கப்பட்டிருந்த குடங்கள், பால் இல்லாமல் காலியாக இருந்தன. இந்த மாயத்தைக் கண்ட இடையர்கள் பயந்தபோது, ஒரு வயோதிகருக்கு அருள்  வந்து, அவ்விடத்தில் எம்பெருமான் கோயில் கொண்டிருப்பதைச் சொன்னார்.

விவரம் அறிந்த மன்னன், படைகளுடன் அங்கு வந்தார். புற்றை பால் ஊற்றி கரைக்க  வேண்டும் என்று ஒருவர் தெரிவிக்க, அவ்விதமே செய்யப்பட்டது. புற்று கரையக் கரைய, பெருமாளின் திவ்ய அர்ச்சாரூபம் கண்டு மன்னன் ஆனந்தமடைந்தான்.  தாயார் சமேதராய் காட்சியளித்து அவ்விடத்தில் எளிமையான ஆலயம் நிர்மாணிக்க இறைவன் பணித்தார். குணசீலர் ஆராதனை செய்த அதே முறைப்படி பூஜைகள் நடந்தன.

குணசீலர் நடைமுறைப்படுத்திய சாஸ்திர முறைப்படியே இன்றைக்கும்  ஆறு கால பூஜைகள் நடந்து வருகின்றன. உச்சி கால மற்றும் அர்த்தஜாம பூஜைகளும் தீர்த்த பிரசாதமும் இங்கு சிறப்பான அம்சங்கள். மனநோய் தீர்க்கும்  வல்லவராக இங்குள்ள இறைவன் போற்றப்படுகிறார். திருமணம், சந்தான பாக்கியம் கைகூட, நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களையும் தீர்த்து வருகிறார் எம்பெருமாள் பிரசன்ன வெங்கடாசலபதி. 

மனநிலை பாதிக்கப்பட்டவர்களை இத்திருக்கோவிலுக்கு அழைத்துச் சென்று 48 நாட்களுக்கு கோயில் வளாகத்தில் தங்கவைத்தால் 48 நாட்களின் முடிவில் பிரசன்ன வெங்கடாசலபதி தெய்வத்தின் கிருபையினால் அவர்களின் வியாதி குணப்படுத்தப்படுகிறது என்பது நம்பிக்கை. திருக்கோயிலில் தமிழக அரசின் பார்வையில் மனநல சுகாதார மறுவாழ்வு மையம் இங்கு செயல்படுகிறது.

உச்சிக்கால மற்றும் அர்த்தஜாமம் ஆகியவற்றின் போது, பக்தர்கள் மீது தண்ணீரை தெளிக்கிறார்கள், இது தீய நோய்கள் மற்றும் மன நோய்களை தீர்த்து வைக்கிறது. இங்கு தங்கியுள்ளவர்கள் மீது  48 நாட்களுக்கு உச்சிகாலம்(நண்பகல்) மற்றும் அர்த்தசாமத்தின்(இரவு) போது ஒவ்வொரு நாளும் புனித நீர் தெளிக்கப்படுகிறது. 

குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதியை நினைத்து மனமுருகி வேண்டி மனக் குழப்பங்கள் தீர்ந்து மன நலன் பெறுவோம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close