ஆடல் வல்லானை மகிழ்விக்கும் ஆனித்திருமஞ்சனம்

  கோமதி   | Last Modified : 22 Jun, 2018 12:10 pm
aadalvallan-natarajar

ஆடல்வல்லான் சிவபெருமானுக்கு உகந்த திரு விழாக்களில் மிகவும் முக்கியமானது, ஆனி உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் திருமஞ்சனம். நடராஜப் பெருமானுக்கு ஆனிமாதம் உத்திர நட்சத்திரத்தன்று சாயரட்சை பூஜையில் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்வதுதான் ஆனித்திருமஞ்சனம். 

ஆனித் திருமஞ்சன விழாவை சிதம்பரத்தில் ஆரம்பித்து வைத்தவர் பதஞ்சலி மகரிஷி என்கிறது புராணம். அதிகாலையில்  கூத்தபிரானுக்கு நடக்கும் அபிஷேகத்தை காண்பவர்கள் இப்பிறவிப் பிணி நீங்கி இன்பம் அடைவார்கள். எத்தகைய இடர்பாடுகள் வந்தாலும் காலை தூக்கி ஆனந்த நடனமாடும் அப்பனை வணங்குபவர்களுக்கு ஏது  துன்பம்?.
ஆலயங்களில் இறைவனுக்கு, ஒரு நாளைக்கு தினமும் 6 கால பூஜை( வைகறை, காலை, உச்சி, மாலை, இரவு, அர்த்தஜாமம்)  நடத்துகிறார்கள்.இந்த 6 காலங்களில் நடக்கும் பூஜைகள், அபிஷேகங்கள் இறைவனை மிகவும் குளிர்ச்சிப்படுத்தும். சிவாலயங்களில் காணப்படும் நடராஜருக்கு ஆண்டுக்கு 6 தடவை அபிஷேகம் செய்வார்கள். மாசி சதுர்த்தசி, சித்திரை திரு வோணம், ஆனி உத்திரம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை ஆகியவையே சிறப்புமிக்க அந்த 6 அபிஷேக நாட்கள் ஆகும்.

குறிப்பாக மார்கழி திருவாதிரை, மற்றும் ஆனி உத்திர திருமஞ்சனம் ஆகிய இரு நாட்களில் நடைபெறும் அபிஷேகம், பூஜைகள் மிக  சிறப்பானதாக கருதப்படுகிறது.
இந்த இரு நாட்களிலும் சூரிய உதயத்திற்கு முன்பே, அதிகாலையிலேயே நடராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகிறது.

பூலோக கைலாயம் எனப் போற்றப்படும் பொன்னம்பலமான சிதம்பரத்தில்,  ஆனி உத்திரத்திருவிழா பத்துநாட்கள் கோலாகலமாக நடைபெறும். அபிஷேக பிரியரான சிவபெருமானுக்கு அவர் மனம் குளிரும் வண்ணம்,  விதம் விதமான பொருட்களால் அபிஷேகம் செய்வார்கள். அபிஷேகம் முடிந்ததும் ,விசேஷமாக அலங்கரிக்கப்பட்ட  நடராஜருக்கு 16 வகை தீபங்களால் ஷோடச ஆராதனைக் காட்டுவார்கள்.

தன்  மேனியின் ஒரு பாதியை சக்திக்கு தந்து, இறைவனே, பெண்மையும் தன்னில் சரிபாதி நடத்திக் காட்டிய ஈசனின் ரூபமான  நடராஜரின் இடது பாகம் சக்தி தேவியின் பாகம் என்பதால்,  நடராஜரை வழிபடும்போது அவரது இடது பக்கம் மற்றும் இடது காலையும் சேர்த்து பார்த்து வழிபடுதல் வேண்டும். செல்வத்தை குறிக்கும் நடராஜரின் வலது பாகத்தை தரிசனம் செய்தால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைக்கும் என்பது ஐதீகமாகும்.

ஆனிஉத்திர திரு விழாவின் ஒன்பதாம் நாளில் பஞ்ச மூர்த்திகள் அனைவரும் ஐந்து தேர்களில் பவனி வருவார்கள். மூலவர் நடராஜரே தேரில் எழுந்தருளி 4 மாட வீதிகளிலும் உலா வருவது இங்கு மட்டுமே காண முடிகிறஅதிசயம் . நடராஜப்பெருமான் திருத்தேரில் எழுந்தருளி நான்கு வீதிகளில் உலாவந்த பின்னர் இரவில் ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் தங்குவார். ஆனிஉத்திரமான பத்தாம் நாளன்று வைகறையில் ஆனித் திருமஞ்சன அபிஷேகம் விமரிசையாக நடைபெறும். பகல் ஒருமணிக்கு நடராஜரும், சிவகாம சுந்தரியும் ஆனந்த நடனம் செய்தபடியே, ஞானாகாச சித்சபையில் எழுந்தருள்வர். பெருமாளும், சிவகாமி அம்மனும் மாறி மாறி நடனம் செய்து சிற்றம்பல மேடைக்கு எழுந்தருளும் காட்சியை காண கண்கோடி வேண்டும்.  அன்றிரவு மீண்டும் சித்சபையாகிய சிற்றம்பலத்தில் கடாபிஷேகம் நடைபெறும்.

நடராஜர் வழிபாடு, மனதில் இருக்கும் துன்பத்தை நீக்கி மகிழ்ச்சியை கொடுக்கக்கூடியது. வீட்டில் நடராஜர் உருவத்தையோ , சிற்பத்தையோ வைத்து வணங்கிட இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும்.கலைத்துறையில் உள்ளவர்கள் தில்லையம்பலத்தானை வணங்கிட கலைகளில் சிறந்து விளங்குவார்கள். வற்றாத செல்வத்தை வாரி வழங்கிடும் நடராஜ பெருமானை அருகில் உள்ள சிவாலயங்களில் சென்று வணங்கிட நலன்கள் எல்லாம் நம் வசமாகும்.  

ஓம் நமச்சிவாய!

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close