எட்டுப்பேட்டைகளைக் கட்டியாளும் அன்னை கோட்டை மாரி

  கோமதி   | Last Modified : 24 Jun, 2018 02:52 pm

salem-kottai-mariamman-temple

உலகில் எவ்வளவு பெரிய பதவி மற்றும் அந்தஸ்த்தில் இருந்தாலும், நம்மை பெற்ற தாய் முன் நாம் மண்டியிட்டு தான் ஆக வேண்டும். அந்த தாத்பர்யத்தை உணர்த்தும் விதமாக தமிழ்நாட்டில் ஒரு கோவில் உள்ளது. தமிழகத்தில் வேறு எங்குமே காண முடியாத அளவிற்கு, மிகவும் சிறிய கருவறை உள்ள அம்மன் கோயில் சேலம் கோட்டை மாரியம்மன்  கோயிலாகும். இங்கு எவ்வளவு பெரிய அந்தஸ்து உள்ள மனிதர்களாக இருந்தாலும் திருத்தலத்தில் உள்ள தாயை காண வேண்டும் என்றால், பணிவோடு குனிந்து தலைவணங்கி மண்டியிட்டு தான் வரவேண்டும் என்பதுதான் இங்குள்ள நடைமுறை. மேலும் கோவில் கொண்டுள்ள அம்மனுக்கு இங்கு  நைவேத்தியமென்பதே  கிடையாது. மாறாக, அம்பாளுக்கு ஊட்டியே விடுகின்றனர். இதுவும் இந்த கோயிலின் மற்றுமோர் சிறப்பு.

சேலத்தில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன், அம்மாப்பேட்டை மாரியம்மன், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன், சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன், சின்னக் கடைவீதி சின்னமாரியம்மன், குகை மாரியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன், பொன்னம்மாப்பேட்டை மாரியம்மன் ஆகிய எட்டு மாரியம்மன்களில் கோட்டை மாரியம்மன் தான் பெரியவள். சக்தி வாய்ந்தவள். இதனாலேயே கோட்டை பெரிய மாரியம்மன் என்று பக்தர்களால் அழைக்கப்படுகின்றாள். சேலத்தில் உள்ள எட்டு மாரியம்மன்களுக்கும் தலைமையாக விளங்குவதால் “எட்டுப்பேட்டைகளைக் கட்டியாளும் அன்னை கோட்டை மாரி” என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

 500 வருட பாரம்பரியம் கொண்ட இந்தத் திருத்தலம், திருமணி முத்தாறு நதிக்கரையில் உருவானது.  சேரநாட்டின் ஒரு பகுதியாக இருந்த தலம் , தங்கள் வீரர்களைத் தங்க வைக்க எழுப்பப்பட்ட ஒரு கோட்டையாக இருந்தது. அந்த வீரர்கள் இந்த அம்மனை தங்கள் காவல் தெய்வமாக வழிபட்டு வந்தனர். நாளாவட்டத்தில் கோட்டை  மாறி குடியிருப்புகளான  போது, இந்த அம்மன் கோட்டை மாரியம்மன் என்று பெயர் பெற்றாள் . 

கோட்டை மாரியம்மன் பெயருக்கு ஏற்றாற்போல்,கம்பீரமாக ஈசான திசையான வடகிழக்கு நோக்கி தனது இடதுகால் மேல் வலது காலை , யோகாசனமாய் மடித்து, அமைதியே உருவாக, ஆனந்த ஸ்வரூபிணியாக சிரசில் ஜுவாலா கிரீடத்துடன்  காட்சி தந்து அருள் பாலிக்கின்றார். நான்கு கரங்களில்,வலது மேற்கரத்தில் நாகபாசம், மற்றும் உடுக்கை. இடது மேல்கரத்தில் அங்குசம் மற்றும் அமுத சின்னம். கீழ்கரத்தில் கபாலம்  என அம்சமாய் அருள் பாலிக்கின்றாள் .

இத்தனை கம்பீரமாய் வீற்றிருக்கும் இந்த அன்னைக்கு அபிஷேகம் செய்து மனம் உருகி  வேண்டினால், மழையால்  இந்த பூமியை குளிரச்செய்வாள் என்பது தொன்றுதொட்டு நிலவி வரும் நம்பிக்கை. இந்தக் கோவிலில் ஆடித்திருவிழா மிகவும் முக்கியமானது. அது சமயம், நடைபெறும் பூச்சூட்டுதல் நிகழ்ச்சிக்காக சேலத்தில் உள்ள இதர ஏழு மாரியம்மன்  கோவில்களுக்கும்  இந்த அம்மன் திருத்தலத்தில் இருந்துதான் பூக்கள் அனுப்பப்படுவது சம்பிரதாயம். ஆடித்திருவிழா  கொண்டாட்டத்தில், பூச்சாட்டுதல், கம்பம் நடுதல், சக்தி அழைப்பு, சக்தி கரகம், உருளுதண்டம், பொங்கலிடுதல், மகா அபிஷேகம் ஆகியவை முக்கிய அம்சங்கள் ஆகும்.

இங்கு வரும் மக்கள் தங்கள் மனதில் உள்ள பிரச்சினைகளுக்கு, அம்மன் முன்பு பூ கட்டி போட்டு அம்பாள் தரும் உத்தரவையே தீர்ப்பாக ஏற்றுக்கொள்கின்றனர். இதற்காக, வெள்ளை மற்றும், சிவப்பு நிறப்பூக்களை தனித்தனியே பொட்டலம் கட்டி, அம்மன் காலடியின் முன்பு போடுகிறார்கள். அவர்கள் நினைத்த நிற பூக்கள் வந்தால் அம்மன் உத்தரவு கொடுத்ததாகவும்,இல்லையென்றால் அம்பாள்  உத்தரவு தரவில்லை என்றும்  எடுத்துக் கொள்கின்றனர்.

அம்மை நோய் கண்டவர்கள் , கண் நோய் பீடித்தவர்களுக்கு கோட்டை மாரியம்மன் கண்கண்ட தெய்வமாகும். மேலும் திருமண தடை நீங்கவும் குடும்ப ஒற்றுமை பலப்படவும்  இந்த திருத்தலம் வந்து அம்மனை வேண்டினால் கை மேல் பலன் நிச்சயம்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.