ஆண்டாளின் மடியில் ரங்கமன்னார் – தரிசிக்கும் தம்பதியரிடையே ஒற்றுமை வலுப்படுமாம்

  கோமதி   | Last Modified : 30 Jun, 2018 05:16 pm
in-the-lap-of-andal-rangamannar-darshan-will-strengthen-the-unity-of-couples

பக்திக்கு ஆண்டாளைத்தான் சொல்லவேண்டும். உண்மையான பக்தி இருந்தால், நாராயணன் ஆட்கொள்வார் என்பதற்கு ஆண்டாளே உதாரணம். 

மார்கழி நோன்பிருந்த ஆண்டாள், 30 பாசுரங்கள் கொண்ட திருப்பாவை எனும் பிரபந்தம் பாடினாள். கண்ணனை தரிசிக்க தோழியரை எழுப்புவது போன்ற பொருளில்  பாடப்பட்டிருக்கும். தோழியரை ஆண்டாள் எழுப்பும் சிற்பங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில், ஆண்டாள் சந்நிதி விமானத்தில் உள்ளன. இதற்கு, திருப்பாவை விமானம் என்றே பெயர். 

ஆண்டாள் சந்நிதிக்கு முன்புறத்தில் மாதவிப்பந்தல் உள்ளது. ஆண்டாள், இந்த பந்தலுக்கு கீழ்தான் வளர்ந்தாள். இந்தப்பந்தல் மரங்களால் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆண்டாள், தன்னை கோபிகையாக பாவித்து, கண்ணனை வேண்டிப் பாடிய சிற்பங்கள் இந்த பந்தலுக்கு அருகிலுள்ள விதானச் சுவரில் செதுக்கப்பட்டு உள்ளன. இதேபோல திருப்பாவை காட்சிகளை ஆண்டாள் கோயில் முன்மண்டபத்தில் ஓவியங்களாகவும் தரிசிக்கலாம்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர், ஆண்டாளின் மடியில் சயனித்திருப்பார். அதுபோல, ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் ஆடித்திருவிழாவின் 7ம் நாளில் ரங்கமன்னார் சுவாமி, ஆண்டாளின் மடியில் சயனித்த கோலத்தில் அருளுவதைக் காணலாம். இவ்வூர் கிருஷ்ணன் கோயிலில் இந்த நிகழ்ச்சி நடைபெறும்.  இதைத் தரிசித்தால், தம்பதியரிடையே ஒற்றுமை வலுப்படும் என்பது ஐதீகம்! 

ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயிலில், மார்கழியின் பகல்பத்து திருநாளின் முதல்நாள், ஆண்டாள் தம் பிறப்பிட வம்சாவளியினரான வேதபிரான் பட்டர் வீட்டுக்குச் செல்வாள். அந்த வீட்டு முன்பு காய்கறிகளை பரப்பி வைத்து ஆண்டாளுக்கு வரவேற்பு கொடுக்கின்றனர். இதனை, “பச்சைப்பரத்தல்” என்பார்கள். கொண்டைக்கடலை, சுண்ட காய்ச்சிய பால், வெல்லம் ஆகியவை சேர்க்கப்பட்ட திரட்டுப்பால், மணிப்பருப்பு நைவேத்தியத்தை ஆண்டாளுக்கு படைப்பார்கள். ஆண்டாளுக்கு பெருமாளுடன் திருமணம் நடக்கும் முன் அவளுக்கும் இவ்வாறு கொடுத்தனர். அக்கால மக்கள். அதன் நினைவாக இன்றும் இவ்வழக்கம் தொடர்கிறது. திருமணம் ஆனதும் பெண்கள் இதைச் சாப்பிட்டால் ஆரோக்கியமான உடல்நிலை கிடைக்கும். சத்தான குழந்தைகள் பிறக்கும் என்பது நம்பிக்கை!

வைகாசி பவுர்ணமியின்போது, ஆண்டாளுக்குத் தயிர் சாதம், “பால் மாங்காய்” நைவேத்யம் செய்கின்றனர். சுண்ட காய்ச்சிய பாலில் நறுக்கிய மாங்காய் துண்டுகள், மிளகு, சீரகம், சீனி ஆகியவை சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படும். பெரியாழ்வார் தலைமுறையைச் சேர்ந்த குடும்பத்தினர் இதனை படைக்கின்றனர். இந்நேரத்தில் ஆண்டாள் வெண்ணிற உடை, சந்தனம், மல்லிகை மலர் சூடி காட்சி தருவாள்.

பங்குனி உத்திரத்தில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடக்கும்போது, பெரியாழ்வார் தன் இருப்பிடத்திற்கு செல்கிறார். அவருடன் பெரியாழ்வாரின் வம்சாவளியினர் சேர்ந்து கொண்டு 2 கலசத்தில் தீர்த்தம் எடுத்து வந்து, ரங்கமன்னாருக்கு பூரணகும்ப மரியாதை கொடுத்து, தங்கள் பெண்ணை மனப்பூர்வமாக கொடுப்பதாகச் சொல்லி, கன்னிகாதானம் செய்வார்கள். பிறகு ரங்கமன்னார், ஆண்டாளுக்கு மாலையிட்டு, தன் மனைவியாக்கிக் கொள்கிறார்.

ஆண்டாள் சன்னதியில் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளியிருக்கும் மண்டபம், முத்துப்பந்தல் எனப்படுகிறது. இதில் வாழைமரம், மாவிலை மற்றும் பூச்செண்டும் இருக்கிறது. மேலே திருமாலின் பாதம் இருக்கிறது. 

பெருமாள் தலங்களில் கருடாழ்வார், சுவாமி சன்னதியின் எதிரே அவரை நோக்கி வணங்கியபடிதான் இருப்பார். ஆனால், இத்தலத்தில் பெருமாளுக்கு அருகிலேயே வணங்கிய கோலத்தில் இருக்கிறார். இத்தலத்தில் பிறந்த பெரியாழ்வார், கருடாழ்வாரின் அம்சமாக பிறந்ததாக ஐதீகம். தன் மகளை, திருமாலுக்கு திருமணம் செய்து தந்தபோது, மாப்பிள்ளைக்கு அருகில் நின்றுகொண்டாராம். இதன் அடிப்படையில் இங்கு சுவாமிக்கு அருகில் இருக்கிறார் கருடாழ்வார்! 

ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள் கிழக்கு நோக்கி தனிச்சன்னதியில் அருளுகிறாள். பொதுவாக கிழக்கு நோக்கியிருக்கும் பெண் தெய்வங்களை வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close