வாழ்க்கையில் நல்ல வேலை அமைய வேண்டுமா?-நீங்கள் செல்ல வேண்டிய கோவில் இது தான்

  கோமதி   | Last Modified : 01 Jul, 2018 06:53 am
those-who-are-looking-for-good-jobs-in-the-life-must-go-to-this-temple

சென்னை மயிலாப்பூரில் உள்ள சித்திரக் குளத்தைத் தல தீர்த்தமாகக் கொண்டது ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோயில். மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு மிக அருகில் அமைந்துள்ளது  ஆலயம். புராணப் பெருமையுடன் ஆழ்வார் மேன்மைகளையும் அதிகம் கொண்ட திருத்தலம் இது.
வாழ்க்கையில்  நல்ல வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள்,சரும வியாதிகளினால் சிரமப்படுபவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில் இது.
கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜ கோபுரம். ஏழு கலசங்கள். உள்ளே நுழைந்ததும் ஆதிகேசவ பெருமாளைப் பார்த்த வண்ணம் தும்பிக்கை ஆழ்வார், நாகராஜன் சந்நிதிகள். இடப் பக்கம் ஆலய அலுவலகம், மடைப்பள்ளி. சற்றுத் தொலைவில் பலிபீடம், கொடிமரம். கருடாழ்வார் சந்நிதி. மூன்று படிகள் ஏறினால் ஒரு மண்டபம். வலப் பக்கம் ஆழ்வார்கள் மற்றும் ஆச்சார்யர்கள் சந்நிதிகள். மொத்தம் முப்பத்துமூவரின் திருமேனிகள் இங்கு காணக் கிடைப்பது பெரும் பாக்கியம்!

மூலவர் ஆதிகேசவ பெருமாள் தவிர, மகா மண்டபத்தில் ஸ்ரீராமபிரான், பேயாழ்வார் சந்நிதிகள். துவாரபாலகர்கள் ஜயன்- விஜயன் காவல் காக்க... மூலவர் ஆதிகேசவ பெருமாளின் நின்ற திருக்கோலம் அற்புதம். கிழக்கே திருமுக மண்டலம். நான்கு கரங்கள். சங்கு, சக்கரம், அபயம், கடிஹஸ்தம் தாங்கிய கரங்கள். உற்சவர் விக்கிரகங்கள். ஆதிகேசவ பெருமாளுக்கு பங்குனி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும். திருத்தேர் புறப்பாடு உட்பட தினசரி விழாக்கள் இந்த உற்சவ காலத்தில் களை கட்டும். ஆழ்வார்கள்- ஆச்சார்யர்கள் முப்பத்துமூவரும் பன்னிரண்டு சப்பரங்களில் தரிசனம் தருவர். மயிலை கபாலீஸ்வரர் கோயில் அறுபத்துமூவர் புறப்பாட்டை இது நினைவுபடுத்தும்.

அடுத்து, சீதாதேவி- ஸ்ரீராமபிரான், லட்சுமணருடன் சேவை சாதிக்கும் சந்நிதி. இடப் பக்கம் பரதனும் வலப் பக்கம் சத்ருக்கனனும் காட்சி தருகின்றனர். வெளியே வந்து பிராகார வலம் வருவோம். ஊஞ்சல் மண்டபம். அடுத்து, திருமழிசை ஆழ்வார் சந்நிதி. இவர், பேயாழ்வாரின் சிஷ்யர். மற்ற, ஆழ்வார்கள் தனி சந்நிதியில் காட்சி தர... இவர் பேயாழ்வாருக்கு எதிரே இருப்பது சிறப்பு. அடுத்து, வெள்ளித் தேர்.

தனிச் சந்நிதியில் தாயார். திருநாமம்- மயூரவல்லி தாயார். வீற்றிருக்கும் திருக்கோலம். கிழக்கே திரு முக மண்டலம். கருட புராணத்தின் நான்காவது அத்தியாயத்தில் மயூரவல்லி தாயாரின் அவதாரம் விளக்கப்பட்டிருக்கிறது. கைரவணி புஷ்கரணி தீரத்தில் பிருகு மகரிஷி, திருமகளே தனக்கு மகளாக அவதரிக்க வேண்டும் என்று விரும்பி பிராட்டியைப் பிரார்த்தித்தார். 

மகரிஷியின் பிரார்த்தனைக்கு உடன்பட்ட மாலவனும், தாயாரை பிருகுவின் மகளாக அவதரிக்குமாறு ஆணையிட்டார். உத்திர நட்சத்திரம் கூடிய ஒரு சுப தினத்தில் புஷ்கரணியில் ஆம்பல் புஷ்பத்தில் ஆவிர்பவித்தார் தாயார். குழந்தைக்கு பார்கவி என்று பெயர் சூட்டினார் பிருகு மகரிஷி. மயிலாபுரியில் அவதரித்ததால், இவர் மயூரவல்லி தாயார் என்றும் அழைக்கப்படுகிறார்.

கருணையே வடிவான மயூரவல்லித் தாயார், தன்னைச் சரண் அடைந்தவர்களுக்கு அருளையும் பொருளையும் வாரி வழங்குகிறாள் 
வாழ்க்கையில்  நல்ல வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் மயூரவல்லி தாயாரை வணங்கிட நிச்சயம் வேலை கிடைக்கும். சரும வியாதிகளினால் சிரமப்படுவோருக்கு நிவாரண தலமாகவும் விளங்குகிறது  இந்த திருக்கோயில் .

மேலும் வெள்ளிக்கிழமைகளில்  மாலை தாயாருக்கு நடக்கும் வில்வார்ச்சனை காணக் கண் கோடி வேண்டும். வெள்ளிக்கிழமை தோறும் தாயாருக்கு நடைபெறும் வில்வார்ச்சனையில் கலந்துக் கொள்வது விசேஷம் என்கிறார்கள் பட்டாச்சார்யர்கள்.
நாமும் இயன்ற போதெல்லாம் , வில்வார்ச்சனையில் கலந்துக் கொண்டு மயூரவல்லித் தாயாரின் அருளைப் பெறுவோம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close