காசி - ராமேஸ்வரம் யாத்திரை – எங்கு தொடங்கி எப்படி முடிக்க வேண்டும்?

  கோமதி   | Last Modified : 06 Jul, 2018 10:50 am

kasi-rameshwaram-pilgrimage-where-to-start-and-how-to-complete

தமிழகத்தின் புண்ணியபூமி ராமேஸ்வரம். வடக்கே காசி. தெற்கே ராமேஸ்வரம். பழமை வாய்ந்தது புண்ணியத் திருத்தலமான ராமேஸ்வரம். ஸ்ரீபர்வதவர்த்தினி அம்பாள் சமேத ஸ்ரீராமநாதசுவாமி திருக்கோயில்  பிரமாண்டமான ஆலயம். மூலவர் பெயர் ராமநாதசுவாமி, அம்பாள் ஸ்ரீ பர்வத வர்த்தினி.

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்று. ஞானசம்பந்தர், அப்பர் பெருமான் ஆகியோரின் பாடல் பெற்றது இந்தத் திருத்தலம். 

இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. ராவணனைக் கொன்ற பாவம் தீர ராமபிரான் இங்கே வழிபட்டார் என்கிறது ஸ்தல புராணம்.

ஸ்ரீராமன் சீதையை மீட்க ராவணனிடம் போர் புரிந்து அவனைக் கொன்றார். ராவணனைக் கொன்ற பாவத்தைப் போக்குவதற்காக, மணலால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார் ஸ்ரீராமர். இதனால், மூலவருக்கு ராமநாத சுவாமி என்றும் தலத்துக்கு ராமேஸ்வரம் என்றும் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது தல புராணம். 

இந்துக்களின் வாழ்க்கையில் காசி - ராமேஸ்வரம் யாத்திரை முக்கியத்துவம் வாய்ந்தது. காசி, ராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் முதலில் ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தத்தில் நீராடி, மணல் மற்றும் தீர்த்தம் எடுத்துக்கொண்டு காசிக்குச் சென்று, கங்கையில்  மணலை போட்டுவிட்டு, காசி விஸ்வநாதருக்கு அக்னி தீர்த்தத்தை அபிஷேகம் செய்யவேண்டும். பிறகு காசியிலிருது கங்கை தீர்த்தம் எடுத்து வந்து, ராமநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

இங்கு கோயில் கொண்டுள்ள அம்மன் பெயர் பர்வதவர்தினி அம்மன். பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்கரம் உள்ளது. அம்பிகைக்கு சித்திரைப் பிறப்பன்று மட்டும் சந்தனக் காப்பு அலங்காரம் செய்வது வழக்கம். அம்மன் சன்னதி பிரகாரத்தில் ஆதிசேசன் மீது பள்ளி கொண்ட கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார்.  

முதல் பிரகாரத்தில் சீதை அமைத்த மணல் லிங்கத்திற்கு ராமர் பூஜை செய்யும் சன்னதி அமைந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான ருத்ராட்சங்கள் சேர்த்து பின்னப்பட்ட பந்தலில் நடராஜர் காட்சி தருகிறார். யோகக் கலையில் தேர்ச்சி பெறவும், நாகதோஷ நிவர்த்திக்காகவும் இந்த சன்னதியில் நாகவடிவில் உள்ள பதஞ்சலி முனிவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

கர்ப்பகிரகத்தில் உள்ள ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கத்திற்கு தினமும் காலை 5 மணி முதல் 6 மணி முடிய சிறப்பு தரிசனம் நடைபெறும். இதனை விசேஷ தரிசனம் என்றுபோற்றுகிறார்கள் பக்தர்கள். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.