திருவெள்ளியங்குடி: கண் நோய் உள்ளோர் வணங்க வேண்டிய திருத்தலம்!

  கோமதி   | Last Modified : 09 Jul, 2018 02:13 pm

eye-deficiency-peoples-should-regularly-worshipe-this-temple

திருவெள்ளியங்குடி வந்து தரிசித்தால், வாழ்வில் நல்ல திருப்பங்கள் நிச்சயம் என்பது ஐதீகம். பன்னிரு ஆழ்வார்களால் போற்றிப் பாடப் பெற்ற 108 திவ்ய தேசத் திருத்தலங்களுள் திருவெள்ளியங்குடியும் ஒன்று. விசேஷ பெருமை கொண்ட திருத்தலம். அதாவது, இந்த திவ்ய தேசத் திருத்தலம் ஒன்றைத் தரிசித்தாலே போதுமாம்... 108 திருத்தலங்களையும் தரிசித்த பலன் கிடைக்குமாம்.

கும்பகோணத்தில் இருந்து அணைக்கரை செல்லும் சாலையில், சோழபுரத்தில் இறங்கி, அங்கிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவு பயணித்தால் திருவெள்ளியங்குடி. சோழபுரத்தை அடுத்து வரும் திருப்பனந்தாளில் இறங்கினாலும் திருவெள்ளியங்குடிக்கு இதே 6 கி.மீ. தொலைவுதான். சோழபுரம் மற்றும் திருப்பனந்தாளில் இருந்து ஆட்டோ வசதிகள் இருக்கின்றன.

திருவெள்ளியங்குடி பெருமாளது புகழ் குறித்து பத்துப் பாசுரங்களில் திருமங்கை ஆழ்வார் உருகி உருகிப் பாடியிருக்கிறார். மயிலாடுதுறை திருஇந்தளூரில் பெருமாளின் சேவை தனக்குக் கிடைக்கத் தாமதம் ஆனதால், மனம் நொந்தார் திருமங்கை ஆழ்வார். இவரை சாந்தப்படுத்தும் விதமாக திருவெள்ளியங்குடி பெருமாளான க்ஷீராப்திநாதரே, தன் தலத்துக்குத் திருமங்கை ஆழ்வாரை அழைத்துத் தரிசனம் தந்ததாகக் கூறுவர். க்ஷீராப்திநாதரே இங்கு மூலவர் என்றாலும், ‘ஸ்ரீகோலவில்லி ராமர்’ என்கிற திருநாமமே மங்களாசாசனப் பெயர். எனவே, மூலவரையும் கோலவில்லி ராமர் என்றே அழைப்பது வழக்கத்தில் இருக்கிறது.

திருவெள்ளியங்குடி எனும் இந்தத் திருத்தலம் நான்கு யுகங்களிலும் புகழ் பெற்றதாகத் திகழ்ந்துள்ளது. கிருத யுகத்தில்- பிரம்ம புத்திரம் என்றும், திரேதா யுகத்தில்- பராசரம் என்றும், துவாபர யுகத்தில்- சைந்திர நகரம் என்றும், கலியுகத்தில்- பார்க்கவபுரம் என்றும் திருவெள்ளியங்குடி போற்றப்படுகிறது. சுக்கிரன் (இதனால் இது வைணவ சுக்கிரத் தலம் எனப்படுகிறது), பிரம்மன், பராசரர், இந்திரன், பிருகு முனிவர், அசுர சிற்பியான மயன், மார்க்கண்டேய மகரிஷி, பூமாதேவி முதலானோருக்கு பெருமாள் இங்கே காட்சி தந்து அருளி உள்ளார்.

திருவெள்ளியங்குடி வந்து பெருமாளைத் தரிசித்தால், வாழ்வில் நல்ல திருப்பங்கள் ஏற்படும் என்பது உறுதி! 

திருமங்கை ஆழ்வாருக்கு தரிசனம்! 

பிரம்மன், சிவபெருமான் மற்றும் இந்திரன் முதலான தேவாதி தேவர்கள் திரளாக வந்து, எம்பெருமானின் கல்யாண குணங்களில் ஈடுபட்டுப் போற்றிக் கொண்டாடும் தலம் திருவெள்ளியங்குடி! எனவே, மாங்கல்ய பிராப்தம் அமைய விரும்புவோர், திருமணம் தடைபடுவோர் இங்கு வந்து பிரார்த்தித்து உரிய வழிபாடுகளைச் செய்தால், விரைவிலேயே பலன் உண்டு. 
சுக்கிரனுக்குக் கண்பார்வை அருளிய தலம் என்பதால், கண் சம்பந்தமான குறைபாடு உள்ளோர் தவறாமல் வந்து வணங்க வேண்டிய திருத்தலம்! 

தல விருட்சமாக செவ்வாழையை கொண்ட தலம். ஆலயத்தின் பிராகாரத்தில் கருங்கல் தரையில் முளைத்துள்ள செவ்வாழை மரங்கள், பச்சைப் பசேலென்று கண்களுக்குக் குளிர்ச்சியாகக் காட்சி தருகின்றன! 

ஒவ்வொரு தலமாகத் தரிசித்தபடி சோழ நாட்டில் பயணித்துக் கொண்டிருந்தார் திருமங்கை ஆழ்வார். திருவெள்ளியங்குடிக்கு வந்தவர், மூலவர் க்ஷீராப்திநாதர் திருமேனியின் அழகில் சொக்கிப் போனார். திருஇந்தளூரில் பெருமாளின் தரிசனம் தனக்குக் கிடைக்காததால் மனம் வருந்திய  ஆழ்வாரை, இந்த ஊர் பெருமாள் வலிய அழைத்து அவருக்குத் தரிசனம் தந்தாராம். எனவே, அதுவரை க்ஷீராப்திநாதன் என்று அழைக்கப்பட்டு வந்த மூலவரை, ‘கோலவில்லி ராமர்’ என்று செல்லமாக அழைக்க ஆரம்பித்தார் திருமங்கை ஆழ்வார். பாசுரங்களிலும் இந்தத் திருநாமத்தைக் கொண்டே பாடினார். 

வீசுகின்ற பெரும் காற்றிலே இலவம் பஞ்சானது தன் அடையாளத்தை எங்கேயோ தொலைத்து அழிந்து போய் விடுகிறது. அதுபோல், அரக்கர்களுடைய கடல் போன்ற பெரும் படைகள் தோல்வியுற்று, அல்லலுற்று மெள்ள மெள்ள எமலோகம் சென்று சேர்கின்றன. இது எப்படி நிகழ்கிறது? தன்னிடம் உள்ள அழகிய வில்லில் - கொடிய அம்புகளைத் தொடுத்து இந்த அரக்கர் படைகளை அழித்தாராம் ஸ்ரீராமபிரான். இத்தகைய ஸ்ரீகோல வில்லிராமர் (அழகிய வில்லை உடைய ராமர் என்பது பொருள்) திருக்கோயில் கொண்டுள்ள இடம் திருவெள்ளியங்குடி ஆகும் என்கிறார் ஆழ்வார். 

பெருமைமிக்க, மகிமைகள் நிறைந்த திருவெள்ளியங்குடி பெருமாளை சேவிப்போம்! 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.