திருமண தோஷம் போக்குவாள் தில்லைக் காளி

  கோமதி   | Last Modified : 07 Jul, 2018 11:18 pm

wedding-dhosham-will-be-cleared-by-thillai-kali

தில்லையம்பதியில் அதாவது சிதம்பரத்தில் உள்ள தில்லைக்காளி சிவபெருமானுடன் போட்டி போட்டு ஆடிய காளிதேவி. சிவனாருக்கும் உமையவளுக்கும் நடனத்தில் போட்டி நிகழ்ந்ததை அறிவோம்தானே. சிவனார் வலது கையைச் சுழற்றி ஆட, உமையவளும் அவ்விதமே ஆடினாள். அவர் இடது காலைச் சுழற்றி ஆட, அவளும் அதேபோல் ஆடினாள். சபையில் இருந்தவர்கள் வியந்து நிற்கும் வேளையில், சட்டென்று தனது காதிலிருந்து குண்டலத்தை விழச் செய்தார் சிவபெருமான். 

தனது கால் விரல்களால் பற்றி எடுத்த நடன நாயகன், அப்படியே காலை உயர்த்தி, காது வரைக்கும் தூக்கினார்; காலாலேயே குண்டலத்தைக் காதில் அணிந்தார். இதைக் கண்டு விக்கித்து நின்றாள் உமையவள்! தனது ஆட்டத்தை நிறுத்தினாள். ‘சபையில் அனைவரும் கூடியிருக்கும் வேளையில், ஒரு பெண்ணானவள் இப்படிக் காலைத் தூக்கி ஆடுவது எப்படிச் சாத்தியம்?’ என்று யோசித்தவளாக, அவமானத்துடன் தலைகுனிந்து நின்றாள் தேவி.  

அந்த வெட்கமும் தலைக்குனிவும் அவளுள் கோபத்தைத் தூண்டின. உக்கிரமானாள் தேவி. மகா காளியின் உருவெடுத்து நின்றாள். விறுவிறுவென வனத்தின் எல்லைக்குச் சென்றாள். இன்றைக்கும் எல்லைக்காளியாக, தில்லைக் காளியாக கோயில்கொண்டபடி, அருள்பாலித்து வருகிறாள். தில்லை மரங்கள் சூழ்ந்த அந்தப் பகுதி தில்லை வனம் எனப்பட்டது. தற்போது சிதம்பரம் என அழைக்கப்படுகிறது. சிவனாரும் தேவியும் ஆடிய அந்த இடம் பொற்சபை எனப் போற்றப்படுகிறது.

இன்றைக்கும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, சிதம்பரம் தலத்தையும் ஆடல்வல்லான் ஸ்ரீநடராஜரையும் தரிசிக்கின்றனர். முன்னதாக, தனிக்கோயிலில் எழுந்தருளும் ஸ்ரீதில்லைக்காளியை  தரிசித்துவிட்டுத்தான், ஸ்ரீநடராஜரை தரிசிக்கவேண்டும் என்பது ஐதீகம்! 

சிதம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது தில்லைக்காளியம்மன் திருக்கோயில். மன்னன் கோப்பெருஞ்சோழன், காளிதேவியின் பெருமையை அறிந்து, இங்கே கோயில் கட்டி, தேவியை வழிபட்டு, போர்களில் வெற்றி வாகை சூடினான் என்கிறது ஸ்தல வரலாறு.

எட்டுத் திருக்கரங்கள். கரங்களில் ஆயுதங்கள் ஏந்தியபடி, ஒருகாலைத் தூக்கிய நிலையில், கடும் உக்கிரமாகக் காட்சி தருகிறாள் தில்லைக்காளி. அற்புதமான ஆலயம். உள்ளே, மேற்குப் பார்த்தபடி சாந்த முகத்துடன் தில்லையம்மனும், கிழக்குப் பார்த்தபடி உக்கிரமாக தில்லைக் காளியும் தனிச் சந்நிதிகளில் தரிசனம் தருகின்றனர்.

திருமண தோஷத்தால் தவிப்பவர்கள், பிள்ளை பாக்கியம் இல்லையே என கலங்குபவர்கள், செய்வினை மற்றும் பில்லி சூனியத்தால் அவதிப்படுபவர்கள், கடன் தொல்லையிலிருந்து மீளமுடியவில்லையே என வருந்துபவர்கள், எதிரிகள் தரும் இன்னல்களிலிருந்து விடுபட வழி தெரியாமல் தவிப்பவர்கள் ஆடி மாதத்தின் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள், அமாவாசை மற்றும் பௌர்ணமி என ஆடி மாதம் முழுவதும் எந்த நாளிலேனும் இங்கு வந்து ஸ்ரீதில்லைக்காளியம்மனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, வெள்ளை நிற வஸ்திரம் சார்த்தி, குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால், நிம்மதியும் சந்தோஷமுமாக வாழலாம் என்கின்றனர் பெண்கள்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.