தேவ அமிர்தம் காப்பாற்றிய கூர்ம அவதாரம்

  கோமதி   | Last Modified : 11 Jul, 2018 01:36 am

the-kurma-incarnation-of-god-to-save-nectar

பத்து (தச ) அவதாரங்களில் பகவான் இரண்டாவது அவதாரமான  கூர்ம அவதாரம் எடுத்த நாள் ஆனி மாதம் தேய்பிறை துவாதசி. இந்த நாள் கூர்ம ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. கூர்ம அவதாரம் குறித்தும் கூர்ம அவதாரத் திருக்கோயில் பற்றியும் அறிந்து கொள்வோம்.
 திருமாலின் இரண்டாவது அவதாரமே கூர்மம். கூர்மம்  என்றால் ஆமை என்று பொருள். கிருத யுகத்தில் நடைபெற்ற இந்த அவதார புராணம் இதோ…..

இந்திரன் ஒருமுறை ஐராவதம் என்ற யானைமேல் பவனி வந்தான். எதிரே வந்த துர்வாச முனிவர், வைகுண்டத்தில் பிரசாதமாக பெற்ற மாலை ஒன்றை, இந்திரனிடம் அளித்தார். அதை வாங்கிய இந்திரன், அந்த மாலையை அலட்சியமாக யானையின் மத்தகத்தில் வைத்தான். அது, தும்பிக்கையால் மாலையை தூக்கி, காலில் போட்டு மிதித்து விட்டது.

இந்திரனின் இந்த அலட்சிய செயல், துர்வாச முனிவரைக் கோபப்படுத்தியது. ‘இந்திரனே, செல்வச் செருக்கால் தானே இப்படி செய்தாய்; இனி, செல்வ வளமின்றி தேவலோகம் நலிந்துபோகட்டும் என, சாபமிட்டார். இதனால் நடுங்கிப் போன இந்திரன், சாபவிமோசனம் கேட்டான். ‘திருமால் (ஆமை வடிவம் ) கூர்மவதாரம் எடுக்கும் காலத்தில், உனக்கு விமோசனம் கிடைக்கும்’ என்றார் துர்வாசர்.

தேவர்கள் வலிமை இழந்ததால், அசுரர்கள் ஆட்டம் அதிகமானது. அசுரர்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்ற வேண்டி திருமாலிடம் முறையிட்டனர்  . தங்களை பாதுகாக்கும்படி திருமாலை வேண்டினர், தேவர்கள். ‘பாற்கடலைக் கடைந்து, அமிர்தம் என்னும் மருந்தை பெற்று அருந்தினால், நிலையான வாழ்வு வாழலாம்’ என்றார் திருமால். அவரது திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று.

இந்த முயற்சியை தேவர்கள் தனியாக செய்ய முடியாது என்பதால், அசுரர்களிடம் நட்பு கொள்வது போல நடித்து, அவர்களையும் உதவிக்கு அழைத்தனர்.

தேவர்களும், அசுரர்களும் ,மந்தார மலையை மத்தாகவும் வாசுகி பாம்பைக் கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைந்தனர். மந்தார மலையின் கனம் காரணமாக அது பாற்கடலுக்குள் மூழ்குவதைக் கண்டு, தேவர்களும் அசுரர்களும் செய்வதறியாது திகைத்தனர். திருமால் ஆமையாக கூர்ம அவதாரம் செய்து பாற்கடலில் நீந்திய வண்ணம் மந்தார மலையை தம் முதுகின் மேல் தாங்கி பாற்கடலை கடைய துணைபுரிந்தார். பின் தேவ, அசுரர்கள் எளிதில் பாற்கடலை கடைந்தனர். அப்போது, வாசுகி பாம்பு, வலி தாளாமல் விஷத்தைக் கக்கவே, இருதரப்பினரும் மயக்கநிலையை அடைந்தனர்.

இதையறிந்த சிவன், அந்த விஷத்தை எடுத்து விழுங்கினார். அப்போது, விஷத்தின் ஒரு பகுதி கீழே சிதறியது. அந்த சிதறலில் இருந்து பாம்புகள், தேள்கள் உள்ளிட்ட விஷப்பூச்சிகளும், விஷச்செடி மற்றும் கொடிகளும் தோன்றின. தொடர்ந்து அனைவரும் கடலைக் கடையவே, திருமாலின் அம்சமான தன்வந்திரி, அமிர்த கலசத்துடன் வெளிப்பட்டார். அவரைத் தொடர்ந்து லட்சுமி தாயார் வெளிவந்தாள். இந்திரனும் இழந்த செல்வத்தை அடைந்தான்.

பகவான் தன்வந்திரி அமிர்த கலசத்துடன் தோன்றியபோது, அசுரர்கள் அவரிடமிருந்து அதனைப் பறித்துக் கொண்டு ஓடினர். பகவான் அப்போது மோகினி அவதாரம் எடுத்து அவர்களை மயக்கி அமிர்தத்தை தேவர்களுக்கு விநியோகித்தார். மந்தார மலையின் உச்சியில் விஷ்ணுவும் இருந்தார். இப்படி, கூர்மர், தன்வந்திரி, மோஹினி, விஷ்ணு என பகவானின் நான்கு ரூபங்கள் பாற்கடலைக் கடைந்து அமிர்தம் பெற்ற லீலையில் ஈடுபட்டனர் .

எங்கிருக்கிறது கூர்ம ஆலயம்

ஆந்திர மாநிலம்  ஸ்ரீகாகுளம் என்னும் ஊருக்கு அருகில் சுமார் 20கிமீ தொலைவில் ஸ்ரீகூர்மம் என்னுமிடத்தில் ஸ்ரீகூர்மநாதர் என்னும் பெயரில் கூர்ம அவதாரத்தில் அருள்புரிகிறார், பகவான் விஷ்ணு. முன்பு இந்த இடம் அழகான குன்றினைப் போல் காட்சியளித்ததால், ஸ்வேதாசலம் என போற்றப்படுகிறது. ஆதிசங்கரர், இராமானுஜர், மத்வாசாரியர் முதலிய ஆச்சாரியர்களும் பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவும் இத்திருத்தலத்திற்கு வருகை புரிந்துள்ளதால் கூர்ம க்ஷேத்திரம் வைஷ்ணவர்களின் மத்தியில் மிகச்சிறந்த தீர்த்த தலமாக விளங்குகிறது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.