கோலாகல வாழ்வளிப்பாள் மயிலை கோலவிழி அம்மன்

  கோமதி   | Last Modified : 21 Jul, 2018 09:15 am
mayilai-kolavizhi-amman-will-give-happy-life


மயிலாப்பூர் நகரின் எல்லைகளைக் காத்தருளும் காவல் தெய்வமாக விளங்குகிறாள் அன்னை கோலவிழி அம்மன்.  கபாலீஸ்வரர் ஆலயத்திற்கு இணையான வரலாற்று பெருமையும்,தொன்மைச் சிறப்பு வாய்ந்தது கோலவிழி அம்மன் கோவில். இது விக்கிரமாதித்தன் காலத்துக் கோவில் என்றும்,சுமார்  600 ஆண்டுகளுக்கு முன்பு அகோரிகள் வழிபட்ட ஆலயம் எனவும்  சித்தர் வாக்கின் மூலம் தெரிந்துக் கொள்ள முடிகிறது. 

வடக்கு திசை நோக்கிய எளிய நுழைவு வாயிலுடன் அமைந்துள்ளது ஆலயம்.கோவிலுக்குள்  ஆஞ்சநேயர் சன்னிதி, அரசடி விநாயகர், சப்தமாதர்கள், கருவறை முன்புறம் விநாயகர், பாலமுருகன் ஆகியோரை தரிசிக்கலாம்.  
கருவறையின் வெளியே காணப்படும் ஆமை புடைப்புச் சிற்பத்திற்கு  இளநீர் அபிஷேகம் செய்து, அர்ச்சனை, ஆராதனை செய்தால் நாம் விரும்பிய அனைத்தும் கிடைக்கும் என்கிறார்கள் அன்னையின் பக்தர்கள்.

அம்மனின் எழில் மிகு  கோலம் 

அம்மனுக்கு நேர் எதிரே பலிபீடம், அவளின் சிம்ம வாகனம் ஆகியவை காட்சி தருகின்றன. வடக்கு நோக்கிய கருவறைக்குள் முன்புறம் சிறிய வடிவிலான அம்மனும், பின்புறம் பிரமாண்ட கோலத்தில் சுதைச் சிற்பமாக கம்பீரமாக அமர்ந்த திருக் கோலத்தில் கோலவிழி அம்மனும்  காட்சி தருகின்றனர். நித்ய அபிஷேக ஆராதனைகள் சிறிய அம்மனுக்கும், அலங்கார ஆராதனைகள் பெரிய அம்மனுக்கும் நடத்தப்படுகின்றன.

அமர்ந்த கோலத்தில், இடது காலடியில் அசுரனின் தலையை அழுத்தி, வலது காலை மடக்கிய கோலத்தில் காட்சி தருகிறாள் அன்னை கோலவிழி அம்மன். வரங்கள் நல்கும் வலது எண் கரங்களில், சூலம், வாள், உடுக்கை, வேதாளம் ஏந்தியும், இடது எண் கரங்களில் கேடயம், அங்குசம், மணி, கபாலம் ஏந்தியும் அன்னை காட்சி தருகின்றாள். சிரசில் உள்ள தீ ஜூவாலைகளில் பதினைந்து இதழ்கள், அதன் நடுவே சீறும் நாகம், திருமுடியின் இடதுபுறம் சந்திரன், கங்கை, வலதுபுறம் நாகம், காதணி அணிந்து, சிவசக்தி சொரூபமாக காட்சி தரும் அன்னையை காண்பவர்கள் உடலெங்கும் ஒரு தெய்வீக அலை பரவுவதை உணர முடியும். பத்ரகாளியான இவள், வேண்டுவோருக்கு வேண்டுவதை அளிக்கும் வரப்பிரசாதி.காளி என்பதால் ஏவல் பில்லி சூனிய பிரச்சனைகளை தீர்க்க  இவளிடம் கோரிக்கையாக வைக்க,நம்மை காத்து நிற்பாள் காளி. 

மேலும் தங்களுடைய பிரச்சனைகளை தீர்க்க அம்மனை வேண்டிக் கொண்டு கோவில் வளாகத்தில் உள்ள வேலியில் ஒரு பூட்டினை பூட்டி,சாவியினை அம்மன் திருவடியில் வைத்திட எப்படிப்பட்ட பிரச்சனையும் தீர்ந்துவிடும் என்பது மக்களின் நம்பிக்கை.
இங்குள்ள வராகியை வழிபடுபவர்களுக்கு ராகு தோஷம் நிவர்தியாகும் என்று சொல்லப்படுகிறது.

தன்னை நாடி வருவோருக்கு மங்களங்களை அள்ளித் தருபவளாகத் திகழ்வதால், இத்தல அம்மன் பத்ரகாளி என போற்றப்படுகிறாள். வைத்த கண் வாங்காமல் பார்க்கத் தூண்டும் அன்னையின் கோல விழிகள்தான் தான் அவளின் தனி சிறப்பம்சமாகும். காளியானாலும் அவளின் கருணை ததும்பும் அந்த விழிகள் தான் மக்களை அவள்பால் ஈர்த்து வருகிறது என்றால் அது மிகையில்லை.

அன்னைக்கு எடுக்கப்படும் விழாக்கள்

சித்திராப் பவுர்ணமியில் பூச்சொரிதல் விழா, ஆடிப்பூர விழா, தீச்சட்டி ஏந்தும் விழா, புரட்டாசியில் நவராத்திரி விழா மற்றும் 10–ம் நாள் சூரனை வதம் செய்யும் விழா, மாசியில் மூன்றாம் ஞாயிறன்று பால் குடப்பெருவிழா ஆகியவை இந்த ஆலயத்தில் நடைபெறும் குறிப்பிடத்தக்க விழாக்கள் ஆகும். 

கோவில் திறந்திருக்கும் நேரம் 

இந்தக் கோவில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

கோலவிழி அம்மனை இந்த ஆடி வெள்ளிக் கிழமையில் தரிசித்து அவள் அருளால் கோலாகல வாழ்வு அடைவோம். 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close