காசி, ராமேஸ்வரமகூட வேண்டாம்... இங்கே நேர்த்திக்கடன் செலுத்தினாலே போதும்!

  கோமதி   | Last Modified : 22 Jul, 2018 06:25 am
those-who-can-not-go-to-kasi-and-rameswaram-can-come-here

ஒரே கோயிலில் 108 லிங்கங்கள், மூலவர்களாக அருள்பாலிக்கும் அற்புத தரிசனத்தைக் காண தஞ்சாவூர் அருகிலுள்ள பாபநாசம் ராமலிங்கசுவாமி கோயிலுக்கு வாருங்கள். இந்த கோவிலுக்கு இது மட்டும் விசேஷம் அன்று. வழக்கமான சிவாலயம் போன்று இல்லாமல், சிவசன்னதிக்கு எதிரே நந்தியோடு காமதேனு பசுவையும் காணமுடியும். அகத்தியரே இதற்கு பிரதோஷ பூஜை செய்ததாக தல வரலாறு கூறுகிறது. 

ராமபிரானின் பாவம் நீங்கப்பெற்றதால் இத்தலத்திற்கு ‘பாபநாசம்' என்ற பெயர் ஏற்பட்டது. இக்கோவிலுக்கு கீழ்ராமேஸ்வரம் என்ற பெயரும் உண்டு. சிவாலயங்களுள் இது மேற்கு நோக்கிய கோயில் என்பதால், எத்தகைய வேண்டுதல் வைத்தாலும் உடனே நிறைவேறும் என்பது நம்பிக்கை.மூலவரோடு இங்குள்ள 108 லிங்கங்களும் மேற்கு நோக்கியே இருப்பது விசேஷமாகும். ராமலிங்க சுவாமி சன்னதிக்கு வலப்புறமுள்ள மண்டபம் போன்ற அமைப்பிலுள்ள சன்னதியில் 3 வரிசையில் 106 லிங்கங்கள் உள்ளன.

அனுமந்த லிங்கம் சன்னதி, கோயிலுக்கு வெளியே உள்ளது. மூலஸ்தானலிங்கம் தவிர, மற்ற 107 லிங்கங்களுக்கும் பக்தர்கள் தாங்களே பூ தூவி வணங்கலாம் என்பது இந்தக் கோவிலின் மற்றுமொரு விசேஷமாகும். பிரதோஷம் அன்று மதியம் 107 லிங்கங்களுக்கும் விசேஷ பூஜை நடக்கும். சிவராத்திரி திருவிழா இங்கு விசேஷமாக நடக்கும். சிவராத்திரியன்று 108 லிங்கங்களுக்கும் ருத்ர மந்திரம் சொல்லி ,நான்கு கால பூஜை நடைபெறும். ராமலிங்க சுவாமிக்கு சிறப்பு ருத்ராபிஷேகம் நடக்கும் அன்றைய இரவில், பக்தர்கள் கோயிலை 108 முறை வலம் வருவர். ஐப்பசி பவுர்ணமியன்று 108 லிங்கங்களுக்கும் அன்னாபிஷேகம் நடக்கும்.

தல வரலாறு: 

இலங்கையில் ராவண வதத்திற்குப் பின், சீதையை மீட்ட, ராமபிரான் ராமேஸ்வரத்தில் தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க சிவபூஜை செய்து, அயோத்தி திரும்பினார். ஆனாலும், ராவணனின் சகோதரர்கள் கரண், தூஷணன் ஆகியோரைக் கொன்ற தோஷம், தங்களைப் பின்தொடர்வதை உணர்ந்த அவர், தோஷம் நீங்க 107சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்தார்.

ஆஞ்சநேயர் காசியில் இருந்து, கொண்டு வந்த லிங்கத்தையும் சேர்த்து 108 லிங்கங்களைப் பூஜித்த ராமபிரான், தோஷம் நீங்கப்பெற்றார். பிரதான சிவனுக்கு, ராமரின் பெயரால் ‘ராமலிங்கசுவாமி’என்ற பெயர் ஏற்பட்டது. அனுமன் கொண்டு வந்த லிங்கம் அவரது பெயரால் ‘அனுமந்தலிங்கம்' என்ற பெயரில் உள்ளது. இங்குள்ள அம்பிகைக்கு பர்வதவர்த்தினி என்று பெயர்.

ராமலிங்கசுவாமி சன்னதி விமானம் ராமேஸ்வரம் கோயில் அமைப்பிலும்,அனுமந்தலிங்க சன்னதி விமானம் காசி விஸ்வநாதர் கோயில் அமைப்பிலும் உள்ளதால், காசி,ராமேஸ்வரம் செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து வழிபட்டு நேர்த்திக்கடன்களை நிறைவேற்றலாம். அறியாமல் செய்த பாவம், பிதுர்தோஷம் நீங்க சுவாமிக்கு தேன் மற்றும் பால் அபிஷேகம் செய்யலாம். 

சனீஸ்வரர், சூரியபகவான் ஆகியோர் இக்கோவிலில் இணைந்து காட்சி தருவதால், சனிதோஷம் உள்ளவர்கள் இந்த சன்னதியை வழிபட்டு நலம் பெறலாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close