ஷீரடி அற்புதங்கள் - பாபாவின் சொல் பலித்தது

  கோமதி   | Last Modified : 26 Jul, 2018 07:25 pm
shirdi-miracles-baba-s-word-comes-true

சாய் பந்துக்களுக்கு இன்று புனிதமான நாள்.வியாழன், சத்குரு சாயிநாதனுக்கு உகந்த நாள். ஷீரடியில் இருந்துக் கொண்டே ஏழு கடலுக்கு அப்பால் நடக்கும் விஷயங்களை அறிந்துக் கொண்டு வேண்டியவர்களுக்கு வேண்டும் வரம் அருளும் கருணாமூர்த்தி. அந்த ஷீரடி மகான் செய்த அற்புதங்களை தெரிந்துக் கொள்வோம்.

டாக்டர் பிள்ளை என்பவர் பாபாவின் மிக நெருங்கிய பக்தர்.  பாபா அவரை மிகவும் விரும்பினார்.  எப்போதும் அவரை பாவ் (சகோதரன்) என்று அழைத்தார்.  பாபா அவருடன் அடிக்கடி பேசினார்.  எல்லா விஷயங்களிலும் அவரைக் கலந்தாலோசித்தார்.  அவர் எப்போதும் தமதருகில் இருக்கவும் விரும்பினார்.  இந்த பிள்ளை ஒருமுறை நரம்புச் சிலந்தி நோய் வந்து மிகவும் அவதியுற்றார்.  அவர் காகா சாஹேப் தீஷித்திடம், "இந்த வலி உயிர்வதையாகவும், தாங்க முடியாததாகவும் இருக்கிறது.  அதைவிடச் சாவையே விரும்புகிறேன்.  முன் ஊழ்வினையால் இவ்வலி நேர்ந்தது என்பது எனக்குத் தெரியும்.  ஆனால் பாபாவிடம் சென்று வலியை நிறுத்தும்படியும், எனது முன் ஊழ்வினையை வரப்போகும் பத்து பிறப்புக்களுக்கும் மாற்றும்படியும் கூறுங்கள்" என்றார்.  தீஷித் பாபாவிடம் சென்று அவரின் வேண்டுகோளைத் தெரிவித்தார்.  பாபா அவரது வேண்டுகோளைக் கேட்டு மனமிரங்கி தீஷித்திடம் "பயப்படாதிருக்கும்படி அவரிடம் கூறுங்கள்.  ஏன் அவர் பத்து ஜன்மங்கள் கஷ்டப்படவேண்டும்.  பத்தே நாட்களில் அவர் தொல்லைகளையும், முன்னைய ஊழ்வினைகளையும் உழைத்து நிறைவேற்ற முடியும்.  அவருக்கு இகபர நலன்களை அளிக்க நான் இவ்விடத்தில் இருக்கும்போது அவர் ஏன் சாவதற்கு வேண்டிக்கொள்ள வேண்டும்?!  யார் முதுகிலாவது அவரை இவ்விடம் கொண்டுவாருங்கள்.  நாம் வேலை செய்து அவர்தம் தொல்லைகளை அடியோடு களைந்துவிடலாம்" என்றார்.

டாக்டர் அந்நிலையில் கொண்டுவரப்பட்டார்.  பாபாவின் வலப்புறத்தில் ஃபக்கிர் பாபா எப்போதும் அமரும் இடத்தில் அமரச்செயவிக்கப்பட்டார்.  பாபா தமது திண்டையே அவருக்கு அளித்து, "இங்கேயே அமைதியாக படுத்து ஆசுவாசப்படுத்திக்கொள்.  உண்மையான சிகிச்சை யாதெனில் முன் வினைகளின் பலனை அனுபவித்துத் தீர்ப்பதேயாம்.  நமது கர்மங்களின் விளைவே இன்ப-துன்பங்கள்.  எனவே, உனக்கு நேரிடும் அனைத்தையும் பொறுத்துக்கொள்.  அல்லாவே தீர்ப்பவர்.  காப்பவர்.  அவரையே எப்போதும் நினை.  அவர் உன்னைக் கவனித்துக்கொள்வார்.  உனது உடலால், உள்ளத்தால், செல்வத்தால், வாக்கால் அவரைச் சரணடை.  அதாவது முழுவதுமாக, பின்னர் அவர் என்ன செய்கிறார் என்பதைக் கவனி!" என்றார்.  நானா சாஹேப்  ஒரு பாண்டேஜ் போட்டிருப்பதாகவும், ஆயினும் அவர் எவ்வித நிவாரணத்தையும் உணரவில்லை என்றும் டாக்டர் பிள்ளை பதில் கூறினார்.  "நானா ஒரு மடையன்" என்றார் பாபா.  "பாண்டேஜை எடுத்துவிடு.  இல்லாவிடில் செத்துவிடுவாய்.  இப்போது ஒரு காக்கை வந்து உன்னைக் கொத்தும்.  அதன்பின் நீ குணமடைவாய்" என்றார்.  

இவ்வுரையாடல் நிகழ்ந்து கொண்டிருக்கும்போது எப்போதும் விளக்குகளை ஒழுங்குபடுத்தி மசூதியைச் சுத்தப்படுத்தும் அப்துல் என்பவர் வந்தார்.  அவர் தனது சீர்செய்யும் வேலையை கவனித்துக்கொண்டிருக்கையில் தற்செயலாக அவரது பாதம் டாக்டர் பிள்ளையின் நீட்டப்பட்ட கால்களின்மீது பட்டுவிட்டது.(அதாவது மிதித்துவிட்டார்)  கால் ஏற்கனவே வீங்கியிருந்தது.  அப்துலின் கால்வேறு மிதித்துவிட்டதால் ஏழு சிலந்திப் புழுக்களும் (Guinea worms) வெளியே தள்ளப்பட்டன.  வலி தாங்க முடியாமல் டாக்டர் பிள்ளை பெருங்கூச்சலில் அலறினார்.  சில சமயத்தில் அவர் அமைதியடைந்து மாறிமாறிப் பாடவும், அழவும் தொடங்கினார்.  பாபா அப்போது, "பார், நமது சகோதரன் இப்போது சௌக்கியமாகிப் பாடிக்கொண்டிருக்கிறார்!" என்றார்.  அப்போது பிள்ளை "காக்கை எப்போது வரும்?  கொத்தும்" என்று கேட்டார்.  பாபா "காக்கையை நீ காணவில்லையா?  அவன் மீண்டும் வரமாட்டான்.  அப்துல்தான் காக்கை என்றார்.  இப்போது வாதாவுக்குப் போய் ஓய்வெடுத்துக்கொள், விரைவில் நீ குணமடைவாய்" என்றார்.

உதியைத் தடவியும் அதைத் தண்ணீருடன் உட்கொண்டும் வேறு எவ்வித சிகிச்சையும், மருந்தும் இல்லாமலேயே பாபா முன்னரே கூறியபடி பத்தே நாட்களில் வியாதி பூரண குணமாக்கப்பட்டது.
ஒம் ஸ்ரீ சாய் ராம்
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close