களைகட்டிய சங்கரன்கோவில்...உலகப்பெற்ற ஆடித்தபசு திருவிழா!

  முத்துமாரி   | Last Modified : 27 Jul, 2018 09:35 am
sankarankovil-aadithabasu-function-held-on-tomorrow

'அரியும் சிவனும் ஒண்ணு, அறியாத வாயில மண்ணு' என்று ஒரு சொல்வார்கள். இதனை நிரூபிக்கும் வகையில் நடந்த ஒரு அரிய நிகழ்வு நடந்த இடம் தான் சங்கரன்கோவில். சிவனும், விஷ்ணுவும் ஒன்று தான் என பார்வதி இந்த உலகிற்கு உணர்த்திய நாள் ஆடி பவுர்ணமி தினம். இந்த நாளே சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. கோவிலின் பெயரில் ஊர் பெயரும் இருப்பதும் இந்நகரின் சிறப்பு.

திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய கோவில் நகரங்களில் ஒன்று சங்கரன்கோவில். இங்கு சிவன் - பார்வதி,  சங்கரலிங்கம்- கோமதி அம்பாளாக எழுந்தருளியுள்ளனர். ஒரு காலத்தில் சிவன் பெரியவரா? விஷ்ணு பெரியவரா? என தேவருலகில் சண்டை நிலவி வந்தது. இதனால் சிவனை வழிபாடும் சைவர்களுக்கு, விஷ்ணுவை வழிபாடும் வைஷ்ணவர்களுக்கும் பெரும் வாய்ப்போரே உருவானது. இதற்கு தீர்வு காண வேண்டும் என பார்வதி அம்பாள் சிவனை நோக்கி தவமிருந்தாள். ஆடி மாதம் பவுர்ணமி தினத்துக்கு 10 நாட்களுக்கு முன்பாக அம்பாள் தனது தவத்தை தொடங்கினாள். தவத்தில் உருகிய சிவபெருமான், 11வது நாள் அன்று அம்பாளுக்கு தனது உடம்பில் பாதி அரியும், பாதி சிவனுமாக "சங்கர நாராயணராக" காட்சியளித்தார். அதன்பின்னர்  அம்பாளின் வேண்டுகோளுக்கு இணங்க, சங்கரலிங்கமாவும் காட்சி தருவார். 

ஆடி  பவுர்ணமி தினம் உத்ராடம் நட்சத்திரத்தன்று இந்த நிகழ்வு நடந்தது. அதுமுதல் ஒவ்வொரு ஆண்டும் இதேபோன்று 12 நாட்கள் சங்கரன்கோவிலில் இதனை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். முதல் நாள் அம்பாள் சன்னதியில் கொடியேற்றத்துடன் தொடங்கும் விழா, முதல் 10 நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோலத்தில் எழுந்தருளுகிறார். 11ம் நாள் மாலை 6 மணிக்கு சிவன்,  சங்கர நாராயணராக அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து 12ம் நாள் இறுதி நாளாக கோமதி அம்பாள், சங்கரலிங்கம் ஆகிய இருவரும் சேர்ந்து காட்சி தருகிறார்கள். 

இந்த வருடம் கடந்த 17ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. 11ம் நாள் நடைபெறும் ஆடித்தபசு நாளை (ஜூலை 27) அன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. தபசு மண்டபத்தில் அம்பாள் தவக்கோலத்தில் இருப்பாள். மாலை 5 மணிக்கு சங்கரநாராயணராகவும், இரவு 10 மணிக்கு வெள்ளி யானை வாகனத்தில் சங்கரலிங்க சுவாமியாகவும் காட்சியளிக்கிறார். இந்தாண்டு ஆடித்தபசு நடைபெறும் ஜூலை 27 அன்று கிரகணம் என்பதால் விழா நிகழ்வு முன்கூட்டியே நடைபெறுகிறது. 

திருநெல்வேலி மாவட்டம் என்றில்லாமல் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இருந்தும் மக்கள், அன்றைய தினம் சங்கரன்கோவிலுக்கு படையெடுக்கின்றனர். அன்றைய தினம் திருநெல்வேலி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும், சங்கரன்கோவிலில் மக்கள் தங்குவதற்கு, உணவு அருந்துவதற்கு என அனைத்து திருமண மண்டபங்களும் திறந்திருக்கும். ஒவ்வொரு ஆண்டும் ஆடித்தபசு நாளன்று வரும் வெளியூர் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே இந்தாண்டும் மக்களின் வருகைக்கு ஏற்றவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close