இந்தப் பெருமானை சேவிப்பர்களுக்கு நிச்சயம் வைகுண்ட பிராப்தி!

  கோமதி   | Last Modified : 29 Jul, 2018 06:41 am
this-greatness-is-guaranteed-to-the-devotees-for-the-service

திருமாலின் பல்வேறு நாமங்களில், கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன், திருவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன், பத்மநாபன் என்பதாகும். இந்த நாமங்களை கொண்ட பெருமாள் கோயில்களை அநேக ஊர்களில் தரிசிக்கலாம். வெண்ணெய் திருடும் குட்டிக் கண்ணன் மீது அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் குறைசொல்வதால் வேதனையடைந்த தாயார் யசோதா, ஒரு கயிற்றை எடுத்து அவனை கட்ட முயன்றிருக்கிறாள். பல போராட்டங்களுக்கு பிறகு உரல் ஒன்றில் கண்ணனை கட்டிப்போட்டாள் யசோதா. நமுட்டுச் சிரிப்பு சிரித்த மாலவன், உரலுடன் இரண்டு மரங்களுக்கிடையே புகுந்து தேவர்களுக்கு சாபவிமோசனம் அளித்தான். 

கயிற்றால் கட்டப்பட்டதால் கிருஷ்ணனின் வயிற்றில் வடு ஏற்பட்டது. அப்போதிலிருந்து கண்ணனுக்கு தாமோதரன் என்ற பெயர் ஏற்பட்டது. தாம் என்றால் கயிறு அல்லது தாம்பு என்று பொருள். உதரன் என்றால் வயிறு என்று பொருள். ஆக கயிற்றால் கட்டப்பட்ட வயிற்றை உடையவன் தாமோதரன். மாயவன் கண்ணனின் இந்த லீலையில் மனதை பறிகொடுத்த ரிஷிகள், இந்த பூவுலகில் அதே பெயருடன் எழுந்து பக்தர்களை ரட்சிக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தனர். பக்தர்களின் நாயகனான கிருஷ்ணன், அவர்களின் பிரா்த்தனையை ஏற்று மகாலட்சுமியுடன் காஞ்சிபுரம் அருகே உள்ள தாமல் என்ற திருத்தலத்தில் எழுந்தருளினான். யசோதையின் அன்புக்கு கட்டுப்பட்ட கண்ணன். 

மகரிஷிகளின் பிராத்தனைக்கும் கட்டுப்பட்டான். திருப்புட்குழி என்று அழைக்கப்படும் தாமல் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஆலயத்தில் மூலவர் தாமோதரர், வயிற்றில் தழும்புடன் காட்சியளிப்பதை காண கண்கோடி வேண்டும். திருமஞ்சன காலத்தில் அர்ச்சகர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். 108 வைணவ ஆலயங்களில் வேறு எங்கும் இல்லாமல் தாமோதரன் என்ற பெயருடன், இங்கு மட்டும் பெருமாள் காட்சயளிப்பது தனிச் சிறப்பாகும். மூலவர், உத்ஸவர், உபய நாச்சியார்களோடு காட்சயளிப்பது மட்டும் இல்லாமல், நெற்றியில் கஸ்துாரி திலகத்துடன் காட்சியளிக்கும் பெருமானை சேவிப்பர்களுக்கு வைகுண்ட பிராப்தி கிடைப்பது உறுதி. 

பொதுவாக வைணவத்தில் எம்பெருமாள்கள் சன்னதியில் திருமால் நெற்றியில் திருமண், ஸ்ரீ சூர்ணத்துடன்தான் காட்சியளிப்பார். ஆனால் இங்கு மட்டும் கஸ்துாரி பொட்டு ஏன் என்பதற்கு ஆலயத்தின் ஸ்தல புராணம் விடையளிக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வரை இந்த ஆலயம், உடுப்பி மத்வாச்சாரியாரை குரு பரம்பரையாக ஏற்றுக்கொண்ட மத்வ சம்பிரதாயக்காரர்களால் ஆராதனை செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

காலப்போக்கில் வைணவர்களுக்கு தானமாக வந்ததால் தானமல்லபுரம் என்ற பெயர் மருவி தாமல் என அழைக்கப்பட்டதாக தெரிகிறது. மாத்வர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் இன்றும் இங்கு பெருமாளுக்கு திருமண்ணுக்கு பதிலாக கஸ்துாரி திலகத்துடன் சேவை சாதிக்கிறார். மூலவர் தாமேதரன் பிரதி மாதம் ரோஹிணி நட்சத்திர தினத்தன்று, கஸ்துாரி திலகத்துடன், ராஜ அலங்காரத்துடன் காட்சியளிப்பது காணக் கண்கொள்ளா காட்சியாகும். 

புன் சிரிப்புடன் சற்றே குறும்புடன் காட்சி தரும் தாமோதரன் கால்களில் பளபளவென்று கொலுசு மின்னுகிறது. ஏன் கொலுசு, குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களுக்காக பெருமாள் கொலுசு அணிந்துக்கொள்கிறார். குழந்தை வரம் வேண்டும் பக்தர்கள், தாமோதரனுக்கு கொலுசு அணிவிப்பதாக மனம் உருகி பிரார்த்தனை மேற்கொண்டால் பத்தாவது மாதம் பகவான் தாமோதரனே குழந்தையாக வந்து பிறப்பான் என்கிறார்கள். முன்பே கொலுசு அணிவிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமெல்லாம் கிடையாது. பிரார்த்தனை நிறைவேறியதும் கொலுசு வாங்கி பெருமாளுக்கு சாற்றலாம். 4 திருக்கரங்களிலும், முறையே சங்கு சக்கரம், வரதஹஸ்தம், ஊறுஹஸ்தத்துடன் நின்றகோலத்தில் காட்சியளிக்கும் தாமோதரப் பெருமாளின் அழகிற்கு ஈடாக எதையும் கூற முடியாது. 

ஸ்ரீ திருமாலழகி என்ற திவ்யநாமத்துடன் நாச்சியார் மகாலட்சுமி திவ்ய தரிசனம் தருகிறாள். சென்னை வேலுார் நெடுஞ்சாலையில் காஞ்சிபுரத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் பாலுசெட்டி சத்திரம் என்ற ஊரிலிருந்து 3 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ளது தாமல் என்ற இந்த அழகிய கிராமம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close