திங்கள்கிழமை இரவில் மட்டுமே சிவ தரிசனம் - சிவராத்திரி, திருக்கார்த்திகை, அன்னாபிஷேகம் இங்கு இல்லை

  கோமதி   | Last Modified : 30 Aug, 2018 05:21 pm

shiva-darshan-only-on-monday-night-no-shivarathri-thirukarthigai-annapishasekam

பரக்கலக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த ஊரில்  ஆவுடையார் கோவில் இருக்கிறது. இத்திருத்தலம் தனிச்சிறப்பு வாய்ந்தது.அனைத்து ஆலயங்களும் காலையிலே நடை திறந்து இரவில் நடை அடைக்கப்படும். ஆனால் இத்திருத்தலம் மட்டுமே, வாரம் தோறும் திங்கள்கிழமை இரவு மட்டும் திறக்கும் அதிசிய கோவில் ஆகும்.இந்த திருத்தலத்தில் சிவபெருமான்,  வெள்ளால மரத்தின் வடிவில் அருள் செய்கிறார். 

தென்னாடுடைய சிவன் தில்லையம்பதியில் நடராஜப் பெருமானாக எழுந்தருளி, அருள்பாலித்து வருகிறார். இவர் சிதம்பரத்தில் அர்த்த ஜாம பூஜையை முடித்துக் கொண்டு, தென்திசை நோக்கி வந்தபோது சோமவார தினத்தில் நள்ளிரவில் இரண்டு முனிவர்களிடையே இல்லறம் சிறந்ததா? துறவறம் சிறந்ததா? என்ற வழக்கு நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. 
தென் சிதம்பரம் என்றழைக்கப்படும் பரக்கலக்கோட்டையில் இல்லறம், துறவறம் இரண்டுமே சிறந்ததுதான் என ஈசன் மத்தியஸ்தம் செய்து வைத்தார். அதனால் இங்கு அவருக்கு மத்தியபுரீசுவரர் எனறும், ஈசன் முனிவர்களுக்கிடையே உண்மை பொருளை இங்கு உணர்த்தியதால் பொது ஆவுடையார் என்றும் அழைக்கப்படுகிறார். இங்கிருந்தபடி பக்தர்களுக்கும் அருள வேண்டும் என்ற முனிவர்களின்  வேண்டுகோளுக்கு ஏற்ப ஈசனும்  அங்கிருந்த வெள்ளால மரத்திலேயே ஐக்கியமானார். இந்தக் கோயிலில் ஈசன் வெள்ளால மரத்தில் எழுந்தருளி இருப்பதால், அந்த மரத்தின் இலை பிரசாதமாக கருதப்படுகிறது. இந்த மரத்தின்  இலையை பறித்துச் சென்று, வீட்டு பூஜையறை, பணப் பெட்டி, ஆகியவற்றில் வைத்து வழிபட்டால்,ஐஷ்வர்யம் பெருகும் என்பது  ஐதீகம். முனிவர்களுக்கு கார்த்திகை மாத சோம வாரத்தில்  திருக்காட்சி தந்து உபதேசித்ததால், ஒவ்வொரு திங்கட்கிழமையும் இங்கே சிறப்பு பூஜை நடைபெறுகிறது. 

அதுவும்  சிதம்பரத்தில் அர்த்தஜாம பூஜை முடிந்ததும் நடராஜர் அங்கிருந்து இங்கே வந்ததால், ஒவ்வொரு திங்கட்கிழமையும் இங்கு இரவு 10.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நள்ளிரவு 12 மணிக்கு பூஜைகள் நடைபெறுகிறது.கோயில் திறக்கப்படும்போது, வெள்ளால மரத்தின் முன்பக்கத்தில் ஒரு பகுதியில் மட்டும் சந்தன காப்பு சாத்தி, வஸ்திரங்கள் அணிவித்து சிவலிங்கமாக அலங்காரம் செய்கின்றனர். அப்போது சன்னதிக்குள் மரத்தை காண முடியாதபடி சுற்றிலும் வெண்ணிற துணியால் மறைத்து விடுகிறார்கள். நமக்கு லிங்க சொரூபமாக காட்சியளிக்கிறது .

மூலஸ்தானத்திற்குள் ஆலமரத்திற்கு முன்பாக சிவனின் பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. முனிவர்களுக்கு சிவபெருமான்  காட்சி தந்ததன் அடையாளமாக பாதம் வைக்கப்பட்டிருக்கிறது.

 இந்த திருக்கோயிலின் தனிச்சிறப்பு, இந்த கோயில் பகலில் நடை திறப்பது கிடையாது. ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று மட்டும் இரவில் நடை திறக்கப்படுகிறது. அப்போதுதான் சுவாமியை தரிசிக்க முடியும். அன்றிரவில் 10 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 11 மணிக்கு சுவாமிக்கு அலங்காரமும், பூஜைகளும் நடக்கிறது.
அப்போது சுவாமியை தரிசிக்க முடியாதபடி திரையிடப்படுகிறது. அதன்பின் 11.30க்கு மீண்டும் நடை அடைக்கப்பட்டு நந்தி, விநாயகர், பெத்த பெருமாள், மகாகோபர், வான்கோபர் சன்னதிகளில் பூஜை நடத்திவிட்டு, பின்பு நள்ளிரவு 12 மணிக்கு மீண்டும் சுவாமி சன்னதி திறக்கப்படுகிறது.

அப்போதுதான் சுவாமியை தரிசிக்க முடியும். பக்தர்களின் தரிசனம் முடிந்தபின்பு, சூரிய உதயத்திற்கு முன்பாகவே நடை சாத்திவிடுகின்றனர் .தைப்பொங்கலன்று ஒருநாள் மட்டும் அதிகாலையில் இருந்து, மாலை 7 மணி வரையில் நாள் முழுதும் நடை திறக்கப்படுகிறது.

தைத்திருநாளில் இறைவனின்  மேனியில் சூரிய ஒளி விழுவது சிறப்பம்சம். இதுதவிர, சிவனுக்குரிய சிவராத்திரி, திருக்கார்த்திகை, அன்னாபிஷேகம் என எந்த பண்டிகையும் இங்கு கொண்டாடப்படுவதில்லை.
இங்கு  நடை அடைக்கப்பட்டிருக்கும் நேரத்தில், சுவாமி சன்னதி கதவிற்கே பூஜைகள் நடத்தப்படுகிறது. பக்தர்கள் அப்போது சன்னதி கதவையே சுவாமியாக பாவித்து மாலைகள் சாத்தி வழிபட்டு, பிரகாரத்தில் இருந்து ஆலமரத்தை தரிசித்துவிட்டு செல்கிறார்கள்.
திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் இம்மரத்தில் தாலி, தொட்டில் கட்டி வேண்டிக்கொள்கிறார்கள்.

கார்த்திகை மாத நான்கு சோமவார நிகழ்ச்சியின் போதும் நள்ளிரவு இரண்டாம் ஜாமத்தில் பொது ஆவுடையாருக்கு சிறப்பு பூஜை நடத்தப்படும். மற்ற கோயில்களில் நடைசாற்றப்படும் நேரத்தில் இக்கோயிலில் நடை திறக்கப்பட்டு அதிகாலை நடைசாற்றப்படும். சோமாவார நாள் தவிர மற்ற நாட்களில் கதவு மூடப்பட்டு, கதவுகளுக்கு பூக்கள் சூடி பூஜைகள் நடத்தப்படும்.ஒவ்வொரு வருடமும் கடைசி சோமவார தினத்தில் நள்ளிரவு சரியாக 12 மணியளவில் விசேஷ பூஜைகள் செய்து நடை திறக்கப்பட்டு. தொடர்ந்து பொதுஆவுடையாருக்கு  மிக விமரிசையாக அபிஷேக, ஆராதனை செய்யப்படுகிறது. நமது வாழ்க்கையில்  நல்ல திருப்பங்கள் ஏற்பட ஆலமர ஈசனை வணங்கி தெளிவுப் பெறுவோம்.

ஓம் நமச்சிவாய !
 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.