கோவில் வாயிலுக்கு முதுகை காட்டி நிற்கும் குட்டிக் கிருஷ்ணன்

  கோமதி   | Last Modified : 01 Aug, 2018 04:13 pm
tiny-krishnan-standing-behind-the-temple-gate

சந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தில் இருந்து  விமோசனம் பெற தனது 27 நட்சத்திரங்களுடன் சேர்ந்து கிருஷ்ணரை வழிபட்ட தலம் தான்  உடுப்பி. `உடு’ என்றால் நட்சத்திரம்; `பா’ என்றால் தலைவர். நட்சத்திரங்களின் தலைவர் சந்திரன். ’உடுபா’ என்று சந்திரனைக் குறிக்கும் சொல்லே உடுப்பி என அழைக்கப்படுகிறது.

வேறு எங்கும் இல்லாத சிறப்பாக இக்கோவிலில் கடவுளின் சிலை வாயில் பக்கம் நோக்கி இல்லாமல், ஜன்னல் பக்கம் நோக்கி இருக்கிறது. இங்கு வாயிலுக்கு முதுகுப் பக்கத்தைக் காட்டி நிற்கிறார் பகவான் கிருஷ்ணர். ஒன்பது வெள்ளியினால் செய்த ஜன்னல்கள் மூலமே பகவான் கிருஷ்ணரை தரிசிக்க முடியும். 

ஒரு முறை கனகதாசர் என்கிற மகான் உடுப்பிக்கு வந்தபோது,அவர்  தாழ்ந்த வகுப்பினரைச் சேர்ந்தவர் என்பதால்,அவருக்குக் கோயிலுக்கு உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. அவர் மனமுருகி கிருஷ்ணரை வேண்டினார். பகவானும் அவருக்கு அருள்புரிய விரும்பி கருவறையின் பின்புறம் துளையை உண்டாக்கி, அந்தத் துளையின் பக்கம், தான் திரும்பி நின்று கனகதாசர் வழிபடும்படி செய்தார். இந்தத்துளையே `கனகனகிண்டி’ என அழைக்கப்படுகிறது. கிருஷ்ணரின் 24 வகையான நிலைகள் படங்களாக இந்தக் கோயிலில் வைக்கப்பட்டுள்ளன.

உடுப்பி கிருஷ்ணரின் கருவறையின் கிழக்குப் பக்கக் கதவு விஜய தசமியன்று மட்டுமே திறக்கப்படுகிறது.

இங்கே இருக்கும் கிருஷ்ணர் விக்கிரகம், மத்வாசாரியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஒரு முறை கடலில் புயலில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த கப்பலில் கிருஷ்ண விக்கிரகம் இருப்பதைத் தமது ஞானதிருஷ்டியால் தெரிந்துக் கொண்டார் மத்வாசாரியார். அந்த விக்கிரகத்தை மீட்டு இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. இந்த கிருஷ்ண விக்கிரகம், ருக்மணி பிராட்டியார் வழிபட்ட சாளக்கிராமத்தால் ஆனது எனவும் சொல்லப்படுகிறது.மத்வாசாரியரால் இயற்றப்பட்ட துவாதச பாசுரம் இன்றும் இந்த ஆலயத்தில் பகவானுக்கு சேவிக்கப்படுவதை வழக்கமாகியிருக்கிறது.

மத்வாசாரியார், பேஜாவரா, புட்டிகே, பாலிமார், அதமார், சோதே, கன்னியூர், சிறூர் மற்றும் கிருஷ்ணபுரா என எட்டு மடங்களை நிறுவி,அதற்கு பீடாதிபதிகளையும் நியமித்து, உடுப்பி ஸ்ரீகிருஷ்ணரை பூஜிக்கும்படி ஒரு நியதியை ஏற்படுத்தினார். ஒவ்வொரு மடத்தின் பீடாதிபதியும் தனித்தோ அல்லது தன்னுடன் இளைய பீடாதிபதியை இணைத்துக் கொண்டோ பூஜை செய்வார். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை பீடாதிபதி மாறுவார்கள். இப்படி மாறும் வைபவம் `பரியாயம்’ என்று அழைக்கப்படுகிறது.

இக்கோவிலின் தீர்த்த மண்டபத்தில் அருளும் கருடபகவான், அயோத்தியிலிருந்து வாதிராஜ தீர்த்தரால் கொண்டு வரப்பட்டது. மேலும்  இங்குள்ள மாதவ புஷ்கரணிக்கு வருடத்துக்கு ஒரு முறை புனித கங்கை வருவதாக நம்பிக்கை. 

ரத ஸப்தமி, மாத்வ நவமி, ஹனுமத் ஜெயந்தி, ஸ்ரீகிருஷ்ண ஜன்மாஷ்டமி, நவராத்திரி மஹோத்சவம்,  விஜய தசமி, நரக சதுர்த்தசி, தீபாவளி, கீதா ஜயந்தி முதலிய விழாக்கள் இங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. 

மூன்று தேர்களுடன் கோலாகலமாக நடத்தப்படும் ரத யாத்திரையின் போது,பக்தர்கள் பசு தானம் மற்றும்  துலாபாரக் காணிக்கை தருகிறார்கள். 

வாருங்கள் நாமும் அந்த குட்டிக் கிருஷ்ணனை தரிசித்து வரலாம். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close