ஏழு அடிகள்...ஏழு வாக்குறுதிகள் – உன்னதமான சப்தபதி சடங்கு

  கோமதி   | Last Modified : 09 Aug, 2018 09:42 am

seven-steps-seven-promises-the-great-sapthapathy-rituals

திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்பார்கள். ஒவ்வொரு மதம் மற்றும் சமுதாயத்தின் படி திருமண சடங்குகள் வேறுபட்டாலும், நமது இந்துமத சனாதன தர்மத்தின் படி ஒரு சில பொதுவான சடங்குகள் அனைவராலும் பின்பற்றப்படுகிறது . அதிலொன்றுதான் சப்தபதி எனும் சடங்கு. 

சப்தபதி என்றால் என்ன?

எல்லோரும் இதை சடங்காக மட்டுமே பின்பற்றாமல், அதன் பொருள் உணர்ந்து செய்ய வேண்டும். இந்த சடங்கில் கணவனும் மனைவியும் கைக்கோர்த்து அக்கினியை  சாட்சியாக வைத்து “ஏழு அடிகள்” வலம் வருவர். 
இந்து திருமண வைபவத்தில் அக்கினி ஜோதி வடிவான பரம்பொருளாகவே போற்றப்படுகிறது. ஒவ்வொரு திருமணத்திற்கும் இறைவனே அக்னியின் ரூபத்தில் சாட்சியாக அமைந்துள்ளார். எனவே, இந்த ஏழு வாக்குறுதிகளையும் கடைப்பிடிக்க வேண்டியது கணவன் மனைவியின் தர்மம் ஆகும்.

ஏழு வாக்குறுதிகள்    

1) கணவனும் மனைவியும் எப்போதும் தங்கள் வாழ்க்கையில் சுக துக்கங்களையும் குடும்ப சுமையையும் சரிசமமாக பகிர்ந்து கொள்ளவேண்டும்.

2) இருவரும் ஒரே மனதாக இணைந்திருந்து, இருவருக்கும் ஒப்புதலுடைய செயல்களையே செய்யவேண்டும்.

3) இருவரும் தங்களின் குடும்பத்தினரை மதித்து நடக்கவேண்டும்.

4) இருவரும் ஒன்றாக இருந்து அவர்களின் குழந்தைகளை வளர்த்து, குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து,அவர்கள் விரும்பும்  நிறைவான கல்வியை அளிக்கவேண்டும்.

5) இருவரும் குடும்ப பொருளாதாரத்தை சரிசமமாக கவனித்துக் கொள்ள வேண்டும்.

6) இருவரும் பதி-பதினி தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். பதி என்றால் தலைவன், பதினி என்றால் தலைவி. ஒரு குடும்பத்தின் தலைவன் கணவன், தலைவி மனைவி. கணவன் மனைவியை தவிர மற்ற பெண்களிடமும், மனைவி கணவனைத் தவிர மற்ற ஆண்களிடமும் தகாத உறவு வைத்துக் கொள்ள கூடாது. இதுவே பதி-பதினி தர்மம் ஆகும்.

7) கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் மனதாலும், வாக்காலும், செயலாலும் நோகடிக்க கூடாது. ஒருவருக்கொருவர் அன்பு, இனிமை, அரவணைப்பு ஆகியவற்றை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

திருமண சடங்குகள் மூலம் வாழ்வின் மிகப் பெரிய தத்துவங்களை போதிக்கும் நமது உன்னதமான இந்து மத தர்மத்தை போற்றி பின்பற்றுவது நமது கடமையாகும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close