பக்தர்களின் இடர்களை முன்கூட்டியே அறிந்து காக்கும் கருணைக் கடல்

  கோமதி   | Last Modified : 09 Aug, 2018 10:00 am

the-merciful-sea-is-the-forerunner-his-devotees

மஹா பெரியவா,அந்த ஈசனின் மறு உருவமே என்பது அவரின் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அதனை நிரூபிக்கும் விதமாக தனது அடியவர்களின் நிழலாகவே இருந்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதுடன்,அவர்கள் நினைக்காத துன்பம் வந்து அவர்களை சேரும் போது,அவர்களை காத்து ரட்சிக்கும் கருணை பெருங்கடல் அவர். 

ஒரு முறை காஞ்சி மகானைக் காண ஒரு மூதாட்டி, கூட்டத்தில் நின்று கொண்டிருந்தார். மகானின் சேவை முடிந்ததும்,ஒரு தட்டில் சில பழங்களை வைத்து, அந்த அம்மையாரை எடுத்துக்கொள்ளச் சொல்கிறார்.

பகவானை சேவித்த சந்தோஷத்துடன்,மிகவும் திருப்தியாகப் பழங்களை எடுத்துக்கொண்ட அந்த அம்மையார் பழத்தோடு சேர்ந்து வந்த மெல்லிய மரிக்கொழுந்து காம்பு ஒன்றை எடுத்துக் கீழே போட்டு விட்டு பழங்களை மட்டும் எடுத்துப் பையில் போட்டுக் கொண்டார்!

"அதையேன் கீழே போட்டுட்டே? அதுவும் உபயோகமாக இருக்கும்.எடுத்துக்கோ!" என்றார் மகான் சிரித்தவாறே.

பெரியவா சொல்லிவிட்டாரே...அவரின் பேச்சுக்கு மறு பேச்சு உண்டா? அந்த அம்மையாரும் மரிக்கொழுந்துக் காம்பை எடுத்துத் தனது பையில் போட்டு பத்திரப்படுத்திக் கொண்டார்.

"ஏன் இதை பத்திரமாக எடுத்துக்கொண்டு போகச் சொன்னார்?" என்றெல்லாம் அந்த அம்மாள் அப்போது யோசிக்கவில்லை .மகானிடம் கேட்கவும் இல்லை.

தன் ஊருக்குப் போக அம்மையார் பஸ்ஸில் ஏறி அமர்ந்துவிட்டார். பஸ் புறப்பட்டதும் அப்படியொரு தூக்கம். அருகில் அமர்ந்து இருந்த பெண், தூங்கும் அம்மையாரின் பையிலிருந்த பணப்பையைத் திருடிக் கொண்டாள்.

கண்டக்டர் வந்தார்.டிக்கெட் எடுக்க வேண்டுமல்லவா? குரல் கேட்டு விழித்தெழுந்த அம்மையார்,பையில் பணப்பையைத் தேடினார். அது அங்கே இல்லை! பக்கத்தில் இருந்த பெண்ணின் கையில் இருந்தது.

"அது என் பர்ஸ்!" என்று இந்த அம்மையார் பதற்றத்தில் கதற..."இல்லை, இல்லை...இது என்னுடையதுதான்!" என்று பக்கத்திலிருந்த பெண் சொல்ல, அங்கே களேபரம் ஆகி விட்டது!

பர்ஸில் இவ்வளவு பணம்தான் இருக்கிறது என்று கச்சிதமாகச் சொல்கிறாள் எடுத்தவளும்.கண்டக்டரோ, யாரை நம்புவது என்று தெரியாமல் தத்தளிக்கிறார்.

அப்போதுதான் அந்த அம்மையாருக்குப் பெரியவா மரிக்கொழுந்து காம்பைப் பத்திரமா எடுத்துக்கொண்டு போகச் சொன்னது 'பளிச்'சென்று ஞாபகத்துக்கு வந்தது.

"கண்டக்டர் சார்...அந்த பர்ஸில் வேறொரு வஸ்து இருக்கிறது.அது என்னவென்று இந்தப் பெண்ணைச் சொல்லச் சொல்லுங்கள்.

திருடியவளிடமிருந்து இதற்கு எப்படிப் பதில் வரும்?.

"நான் சொல்கிறேன்....மரிக்கொழுந்தின் சிறிய காம்பு ஒன்று உள்ளே இருக்கிறது. வாசனை உள்ளது மரிக்கொழுந்து. வேண்டுமானால் அந்த பர்ஸைத் திறந்து பாருங்கள்..தெரியும்!" என்றார் அம்மையார். கண்டக்டர் புதியவளிடமிருந்து பர்ஸை வாங்கிப் பார்க்க..உள்ளே, அந்த மரிக்கொழுந்து காம்பு பத்திரமா இருந்திருக்கிறது.

பிறகென்ன -திருடியவள் தன் தவறை ஒப்புக்கொண்டாள். அம்மையாரின் வேண்டுகோளுக்கிணங்க அவள் மன்னித்து விடப்பட்டாள்.

தன் பக்தர்களுக்கு இடர் வருவதை முன்கூட்டியே அறிந்து அதற்கான நிவர்த்தியுடன் அனுப்பும் அந்த மகானின் கருணை உள்ளத்தை நினைக்கும் போதே நம் உடலும் உள்ளமும் சிலிர்க்கின்றது அல்லவா?.
ஹர ஹர சங்கரா.....  ஜெய ஜெய சங்கரா...

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.