நாளை சூரிய கிரகணம் –எந்த நட்சத்திரங்களுக்கு பரிகாரம் செய்ய வேண்டும்

  கோமதி   | Last Modified : 10 Aug, 2018 05:50 pm

tomorrow-solar-eclipse-stars-that-need-to-do-remedy

2018ம் ஆண்டின் பகுதி சூரிய கிரகணம் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி சனிக்கிழமையன்று - இந்திய நேரப்படி மதியம் 1.32 மணிக்கு தொடங்கி மாலை 5.02 வரை நீடிக்கிறது. பூகோளத்தின் வடக்கு மண்டலங்களில் இது தெரியும். ஆனால் இந்தியாவில் இது தெரிவதற்கான வாய்ப்புகள் இல்லை. 

சூரியன் - சந்திரன் - பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது கிரகணம் என்பது ஏற்படும். அறிவியல்படி சந்திரனானது சூரியனுக்கும் பூமிக்கும் இடையே வரும் போது சந்திரனால் சூரியன் மறைக்கப்படுவதால் பூமியில் உள்ள நம் கண்களுக்கு சூரியன் தெரியாமல் போகின்றது. இதையே சூரிய கிரகணம் என்கிறோம். கிரகணம் என்றால் பற்றுவது என்று பொருளாகும். அமாவாசையன்றுதான் இந்த சூரிய கிரகணம் நிகழும். 

முழு சூரிய கிரகணத்திற்கும் பகுதி சூரிய கிரகணத்திற்கும் என்ன வித்தியாசம்?

முழுவதுமாக சூரியனை சந்திரன் மறைக்கும் போது பூமி இருளாகும். வெப்பநிலையிலும் கூட கடும் மாறுபாடு ஏற்படும். அதனால்தான் சந்திர கிரகணத்தை விட சூரிய கிரகணத்திற்கு அதிக முக்கியத்துவமும் அளிக்கப்படுகிறது. பல பேர் பயப்படுவதும் அதற்குத்தான். பகுதி சூரிய கிரகணம் என்பது சந்திரன் சூரியனுடைய ஒரு பகுதியை மட்டும் மறைக்கும் போது ஏற்படுவது. இந்த கிரகணமானது பூகோளத்தில் வடக்கு மண்டலங்களிலும் சைபீரிய தீவுகளிலும் காண முடியும். இந்தியாவில் இல்லை. 

ஜோதிட ரீதியாக:

ஜோதிட ரீதியாக ராகு அல்லது கேதுவின் பாகையில் சூரியன் - சந்திரன் இணையும் போது சூரிய கிரகணம் ஏற்படும். சூரியன் சந்திரன் ஒரே பாகையில் இருக்கும் போது அமாவாசையாகும்.
அதே போல் சூரியனும் சந்திரனும் நேர்கோட்டில் பயணிக்கும் போது ராகுவையோ அல்லது கேதுவையோ தொடும் போது சந்திர கிரகணம் ஏற்படும். சூரியனும் சந்திரனும் நேர்கோட்டில் அதாவது 180 டிகிரியில் இருப்பது பௌர்ணமியாகும்.
உதாரணம்:
தற்போது ராகுவின் சாரம் பூசம் 3ம் பாதத்தில் நிற்க - ஆகஸ்ட் 11ம் தேதி அமாவாசையன்று சூரியனும் சந்திரனும் இணைந்து பூசம் 4ம் பாதத்தில் சந்திக்கும் போது கிரகணம் ஏற்படுகிறது.

விதிகள்:

இந்த விதிகளானது எந்த காலத்திலும் பின்பற்ற வேண்டியவை:

[1] வெறும் கண்களால் கிரகணத்தை பார்க்க கூடாது

[2] அதற்கென இருக்கக்கூடிய கண்ணாடிகளைக் கொண்டு பார்க்கலாம்

[3] கர்ப்பிணிகள் கிரகண சமயத்தில் வெளியில் செல்லக்கூடாது

[4] கிரகண நேரத்தில் உணவு சாப்பிடக்கூடாது

[5] முடிந்தவரை குலதெய்வத்தையும் - முன்னோர்களையும் - இஷ்ட தெய்வத்தையும் வணங்குதல் நலம்

[6] 1 வயதிற்கு குறைவான குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்லக்கூடாது

[7] கிரகணம் முடிந்தவுடன் வீட்டினை கோமியம் - மஞ்சள் பொடி கலந்த நீரினால் சுத்தம் செய்வது நன்மை தரும்

[8] கிரகணத்திற்கு பிறகு எந்தெந்த நக்ஷத்ரகாரர்களுக்கு பிடித்திருக்கிறதோ அவர்கள் சாந்தி பரிகாரம் செய்து கொள்வது அவசியம்

[9] கிரகணம் நடக்கும் போது உணவு பொருட்களில் தர்ப்பை புல் போட்டு வைத்திருப்பது நலம் பயக்கும்

கிரகண தோஷங்கள்:

[1] ஜெனன கால ஜாதகத்தில் ராகு கேது இருக்கும் அதே ராசிகளில் கிரகண தோஷம் ஏற்பட்டால் தோஷம் ஏற்படும். உதாரணமாக தற்போது ராகு கடக ராசியிலும் கேது மகர ராசியிலும் சஞ்சரிக்கிறார்கள். யாருக்கெல்லாம் பிறக்கும் போது ஜெனன கால ஜாதகத்தில் கடகம் அல்லது மகரத்தில் ராகுவோ கேதுவோ இருந்தால் கிரகண தோஷம் ஏற்படும். 

[2] கிரகணம் ஏற்படும் மாதங்களில் பிறந்தவர்களுக்கும் தோஷம் ஏற்படும். உதாரணமாக தற்போது கிரகணம் ஏற்படுவது ஆடி மாதத்தில். எனவே யாரெல்லாம் ஆடி மாதத்தில் பிறந்திருக்கிறார்களோ அவர்களுக்கு தோஷம் ஏற்படும்.

[3] கிரகணம் ஏற்படும் ராசிகளில் பிறந்தவர்களுக்கு தோஷம் ஏற்படும். உதாரணமாக தற்போது கிரகணம் ஏற்படுவது பூச நக்ஷத்திரத்தில். எனவே கடக ராசியில் பிறந்தவர்களுக்கு தோஷம் ஏற்படும்.

[4] இதைத் தவிர கிரகணம் ஏற்படும் நட்சத்ரத்திங்களில் பிறந்தவர்களுக்கும் அந்த நட்சத்திரத்தின் ஜென்மாதி ஜென்ம மற்றும் அனுஜென்ம நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் தோஷம் ஏற்படும். உதாரணமாக ஆகஸ்ட் 11ம் தேதி நிகழக்கூடிய பகுதி சூரிய கிரகணமானது பூசம் 4ம் பாதத்திலும் ஆயில்யம் 1ம் பாதத்திலும் நிகழ்கிறது. எனவே பூசம் - அனுஷம் - உத்திரட்டாதி மற்றும் ஆயில்யம் - கேட்டை - ரேவதி ஆகிய நட்சத்திரகாரர்களுக்கு தோஷம் ஏற்படும். எனவே இந்த நட்சத்திரகாரர்கள் பரிகாரம் செய்துக் கொள்வது நலம்.

சொல்ல வேண்டிய மந்திரம்:

சூரியனுடைய மந்திரமான ஆதித்யஹ்ருதயம் மற்றும் சிவனுடைய தோத்திரங்கள் - சிவபுராணம் - ருத்ரம் ஆகியவை சொல்லலாம். முடியாதவர்கள் ஓம் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை சொல்லலாம். மேலும் அபிராமி அந்தாதியும் சொல்லலாம்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.