சூடி கொடுத்த சுடர்கொடி ஆண்டாள் அருளாசி தரும் ஸ்ரீவில்லிப்புத்தூர்

  கோமதி   | Last Modified : 13 Aug, 2018 04:10 pm

we-can-get-the-blessings-of-sudi-kodutha-sudarkodi-andal-in-srivilliputhur

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி, கோதை நாச்சியார் என்று வைணவ அன்பர்களால் கொண்டாடப்படும் "ஆண்டாள் நாச்சியார்" அவதரித்த திருநாள் இன்று.

பெரியாழ்வார் பெற்றெடுக்காத மண்மகள் ஆண்டாள். சூடி சுடர் கொடுத்த ஆண்டாள் அருளாசிகளை அள்ளித் தரும் அற்புதத் திருத்தலம் ஸ்ரீவில்லிப்புத்தூர்.பெரியாழ்வார், நாச்சியார் பிறந்த இடம். பெரியாழ்வார் பெருமாளுக்கு பல்லாண்டு பாடிய திருத்தலம். 108 திவ்ய தேசங்களில் 90 வது திவ்ய இந்தத் திருக்கோயில் கோபுரம்  தமிழக அரசின் சின்னமாக அமைந்துள்ளது  இத்தலத்தில் மூலவர் வடபத்ரசாயி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் மட்டுமே ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார் ஆகிய மூவரும் ஒரே ஸ்தானத்தில் காட்சியளிக்கிறார்கள். 

வருடந்தோறும்  திருப்பதி  பெருமாளுக்கு புரட்டாசி 3 வது சனிக்கிழமை பிரம்மோற்சவத்துக்கு ஆண்டாளுக்கு சூட்டிய மாலை அணிவிக்கப்படுகிறது. இங்கு ஆண்டாள் திருக்கல்யாணத்துக்கு திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலிலிருந்து திருமணப் பட்டுப் புடவை வருகிறது. மதுரையில் சித்திரைத் திருவிழா அழகர் எதிர் சேவையின் போது ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை கள்ளழகர் அணிகிறார். கருடாழ்வாரின் அவதாரமான பெரியாழ்வார்  தனது மகளை, திருமாலுக்கு திருமணம் செய்து கொடுத்த போது, மாப்பிள்ளைக்கு அருகில் நின்றுகொண்டாராம். இதன் அடிப்படையில் இத்தலத்தில் சுவாமிக்கு அருகில் கருடாழ்வார் இருக்கிறார்.

ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள், தான் அணிந்திருக்கும் மாலையில் 108 திவ்யதேசங்களில் அருளும் பெருமாள்களை மாலையாக அணிந்திருக்கிறார் என்பது ஐதீகம். ஆண்டாள் கோயில் கருவறையைச் சுற்றி முதல் பிரகார சுவர்களில் 108 திவ்யதேச பெருமாளின் உருவங்கள் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தில் திருப்பாற்கடல், வைகுண்டம் பெருமாள் உட்பட அனைத்து பெருமாளையும் தரிசிக்கலாம்.ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள், பெரியாழ்வார், வடபத்ரசாய் ஆகிய மூன்று பேர் அவதரித்த தலம் என்பதால் “முப்புரிஊட்டியதலம்” என அழைக்கப்படுகிறது. ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பெருமாளை வேண்டி திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய பிரபந்தங்களை பாடினாள். இதில் திருப்பாவை 30 பாசுரங்களும், நாச்சியார்திருமொழி 143 பாசுரங்களும் கொண்டுள்ளது.ஸ்ரீனிவாசபெருமாளுக்கு திருப்பாவை என்ற பாசுரத்தால் பாமாலை பாடியபூமாலை சூடிக்கொடுத்ததால் “சூடிக்கொடுத்த நாச்சியார்” என்ற பெயரும் உண்டு.ஸ்ரீவில்லிப்புத்தூரின் மற்றொரு அதிசயம் ஆடிப்பூரம் அன்று இழுக்கப்படும் அழகிய தேர் ஆகும். 

தல வரலாறு : முன்னொரு காலத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நிலப்பகுதிகள் ராணி மல்லி என்பவரின் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்த ராணிக்கு வில்லி மற்றும் கண்டன் என்ற இரு மகன்கள் இருந்தனர். ஒரு நாள், அவர்கள் காட்டில் வேட்டையாடிய போது, கண்டன் ஒரு புலியால் கொல்லப்பட்டார். இந்த உண்மை தெரியாமல், வில்லி, அவரது சகோதரர் என்ன ஆனார் என்று காட்டில் தேடிக் கொண்டு இருந்தார்.வெகுநேரம் காட்டில் தேடிய பின்னர் களைத்துப் போய் சிறிது நேரம் தூங்கினார். அவரது கனவில், கடவுள் அவரது சகோதரருக்கு என்ன ஆயிற்று என்பதை அவருக்கு விளக்கினார். உண்மை புரிந்ததும், தெய்வீக உத்தரவின் பேரில் வில்லி அந்த காடுகளைத் திருத்தி அமைக்க, ஒரு அழகான நகரம் உருவாக்கப்பட்டது. இந்த காரணத்திற்காக, இந்த நகரம், வில்லிப்புத்தூர் என்ற பெயர் பெற்றது. இங்கே தான் ஆண்டாள் பிறந்து வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

பெரியாழ்வாரின் மகளாக பிறந்த ஆண்டாள், பெருமாளுக்கு சாற்றப்படும் பூவை, அவள் ஒவ்வொரு முறையும் அவள் தலையில் வைத்து அழகு பார்த்ததற்கு பின் கொடுத்திருக்கிறாள். இதனை அறியாத பெரியாழ்வார் பெருமாளுக்கு பூவை போட்டிருக்கிறார். ஒருமுறை பூவில் தலைமுடி இருப்பது கண்டு பெரியாழ்வார் அஞ்சி, அதை தவிர்த்து வேறு பூவை சூட்டினார். உடனே இறைவன், “ஆழ்வார்! கோதையின் கூந்தலில் சூட்டிய பூவையே நான் விரும்புகிறேன். அதையே எனக்கு சூட்டு” என்றார். இன்றளவும் ஆண்டாளுக்குச் சாத்தப்படும் மாலை, மறு நாள் காலையில் வடபெருங்கோயில் உடையவருக்கு சாத்தப்படுகிறது. நாச்சியாரின் அவதார நட்சத்திரம் ஆடி மாதம் பூரம் என்பதால், ஆடிப்பூர திருவிழா  இந்த திருக்கோயிலில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஆண்டாள் திருவடி சரணம்
 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.