ஆறு தல மூர்த்திகள் முன் நின்று நடத்தும் நந்தி கல்யாணம்

  கோமதி   | Last Modified : 18 Aug, 2018 04:02 pm

nandhi-marriage-in-front-of-the-six-deities

காவிரி கரையின் இருமருங்கிலும் அமைந்துள்ள திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர்,திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய ஏழு தலங்களும் சப்த ஸ்தானத் தலங்கள் எனப்படுகின்றன. சைவ பெருமக்களால் கொண்டாடப்படும் திருவிழாக்களில், சித்திரா பௌர்ணமியை அடுத்து வரும் விசாக நட்சத்திரத்தன்று, திருவையாற்றில் நடைபெறும் சப்தஸ்தானம் எனப்படும் ஏழூர்த்திருவிழாவும் ஒன்று.ஏழூர்த்திருவிழாவைப் பற்றி தெரிந்துக் கொள்வதற்கு முன் இதன் பின்னணியில் உள்ள புராணக் கதையைப் பார்ப்போம்.

திருவையாற்றில் அருள்பாலிக்கும் ஈசன் ஐயாறப்பர் மீது மிகுந்த பக்தி கொண்டவர் சிலாத முனிவர். அவருக்கு திருமணமாகிப் பல ஆண்டுகள் கடந்தும் குழந்தைப் பேறு இல்லை என மனம் வருந்தி , மனமுருகி ஐயாறப்பரை வழிபட்டார்.முனிவரின் தவத்துக்கிரங்கிய ஈசன், "சிலாதனே, நீ புத்திர காமேஷ்டி யாகம் செய்வாயாக. அதன் பின் யாகபூமியை உழும்பொழுது,பெட்டகம் ஒன்று தோன்றும். அப்பெட்டகத்தில் ஒரு புத்திரன் காணப்படுவான். அவனை எடுத்துக்கொள். அவனுக்கு ஆயுள் 16ஆண்டுகள் மட்டுமே' என்று அசரீரி வாக்காகக் கூறினார்.ஈசன் கூறியபடியே யாகபூமியிலிருந்து ஒரு பெட்டகம் வெளிப்பட்டது. அதற்குள் நான்கு தோள்களும், மூன்று கண்களும்,பிறையணிந்த முடியும் கொண்ட ஒரு மூர்த்தியைக் கண்டார். அம்மூர்த்தியை வணங்கினார். மீண்டும் ஐயாறப்பர்அசரீரியாய் "பெட்டியை மூடித்திற' என்றார். அவ்வாறே சிலாதர் பெட்டியை மூடித்திறந்ததும், பெட்டிக்குள் அழகிய குழந்தையொன்று காணப்பட்டது. அதைக்கண்ட முனிவரும், அவரது மனைவியும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.

குழந்தைக்கு செப்பேசன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்கள். செப்பேசர் 14 வயதுக்குள் சகலகலைகளையும் கற்று வல்லவராயினார். இன்னும் இரண்டு ஆண்டுகளில் தனது ஆயுள் முடிந்து விடும் என்று பெற்றோர் வருந்துவதைக் கண்ட செப்பேசர் அவர்களுக்கு ஆறுதல் கூறி, ஐயாறப்பர் கோவிலுக்குச் சென்று ஈசனை வணங்கி, அங்குள்ள அயனரி தீர்த்தத்தில் நீராடி, கால்மேல் காலையூன்றிக் கடுந்தவம் மேற்கொண்டார். அவருடைய நீண்ட தவத்தில்,நீர்வாழ் உயிர்கள் அவரது உடலை அரித்துத் தின்றன. சற்றும் மனந்தளராத செப்பேசர் பலநாள் தவமிருந்தார்.அவரது பக்திக்கு இரங்கிய இறைவன் செப்பேசருக்கு தீர்க்காயுளையும் 16 பேறுகளையும் தந்தருளினார். தவத்தின் போது புண்பட்ட செப்பேசரின் உடலை நலமுறச் செய்ய மனங்கொண்ட ஈசன் கங்கை நீர், பிரம்மன் கமண்டல நீர், அம்மையின் கொங்கைப்பால்,கொண்டல் (மேகம்) நீர், இடப நந்தியின் வாய்நுரை நீர் என்னும் ஐந்து நீரினாலும் தாமே அபிஷேகம் செய்தார். செப்பேசரின் புண்கள் நீங்கி,உடல் பிரகாசம் கொண்டது. செப்பேசர் ஐயாறப்பரிடம் உபதேசம் பெற்று கயிலையில் சிவகணங்களுக்குத் தலைவராகும் பதவியையும், சிவபெருமானுக்கு வாயில் காப்போனாகும் பதவியையும், சைவாச்சார்யார்களுள் முதல் குரு என்ற தன்மையையும் பெற்றார். இத்தகைய பெரும் பேறுகளைப் பெற்ற செப்பேசர் தான்  திருநந்தியெம்பெருமான் என்று அழைக்கப்படுகிறார்.

ஈசன் அருள்பெற்ற செப்பேசருக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்தார் சிலாதர். அதன்படி வசிஷ்ட முனிவரின் பௌத்ரியான சுயம் பிரகாசையை செப்பேசருக்கு பங்குனி மாத புனர்பூச நட்சத்திரத்தில் திருமணம் செய்து வைத்தார். திருமழபாடியில் திருமண விழாவும், திருமண ஊர்வலமும் மிகச்சிறப்பாக நடந்தேறின

திருமணத்திற்காக திருவையாற்றைச் சுற்றியுள்ள தலங்களான திருவேதிக்குடியிலிருந்து வேதியர்களும், திருப்பூந்துருத்தியிலிருந்து பூக்களும், திருப்பழனத்திலிருந்து பழங்களும், திருச்சோற்றுத் துறையிலிருந்து உணவு வகைகளும், திருநெய்த்தானத்திலிருந்து நெய்யும், திருக்கண்டியூரிலிருந்து செப்பேசருக்கான நகைகளும் வரவழைக்கப்பட்டன.நந்திதேவர் திருமணத்திற்கு உதவி செய்த ஆறு தலத்து மூர்த்திகளுக்கும் நன்றி தெரிவிக்கும்பொருட்டு ஐயாறப்பரும் அறம்வளர்ந்த நாயகியும் கண்ணாடிப் பல்லக்கிலும் நந்தியெம்பெருமான் வெட்டிவேர் பல்லக்கிலும் ஆறு தலங்களுக்கும் எழுந்தருள்வர். இவ்விழாவை திருநந்தி தேவர் திருமண ஊர்வலம் என்பர்.

நந்திதேவருக்கும் சுயம் பிரகாசைக்கும் நடந்த திருமண நிகழ்வு திருமழபாடியில் ஆண்டுதோறும் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.