சீரடி அற்புதங்கள் - உலகின் எல்லா உயிரிலும் வியாபித்து அருளும் சாயி நாதன்

  கோமதி   | Last Modified : 23 Aug, 2018 02:39 pm

shirdi-miracles-sai-nathan-who-lives-in-the-world-s-all-living-creature

பாபா மனிதர்களிடம் மட்டுமின்றி உலக உயிர்கள் அனைத்தின் மேலும் கருணை கொண்டவர். பசித்திருக்கும் ஜீவன் எதுவாக இருப்பினும் அவற்றின் பசியைப் போக்குவதையே விரும்புபவர். மேலும் பாபா, தனக்கு வேண்டிக்கொண்டபடி,யார் ஒருவர் நைவேத்தியம் படைக்காவிட்டாலும், தானம் செய்யாவிட்டாலும் அதை ஏதாவது ஒரு வகையில் உணர்த்தி விடுவார். 
மும்பையைச் சேர்ந்த பாபா சாகேப் தர்கட் என்பவர் பாபாவின் மீது மிகுந்த பக்தி கொண்டவர். அவரது மனைவி, மகனும் பாபாவிடம் தீவிர பற்று கொண்டிருந்தனர்.

தர்கட் தினமும் பாபாவுக்கு நைவேத்தியம் படைத்து வழிபடுவதை பழக்கமாக வைத்திருந்தார். ஒரு தடவை அவரது மனைவி, மகன் இருவரும் சீரடிக்கு பாபாவை தரிசனம் செய்ய வந்தனர். முக்கிய வேலை இருந்ததால் தர்கட் மட்டும் வரவில்லை.

மனைவி, மகன் வீட்டில் இல்லாததால் முதல் இரு நாட்கள் கல்கண்டை மட்டும் நைவேத்தியமாக வைத்து பாபாவை தர்கட் வழிபட்டார். மூன்றாவது நாள் பாபாவுக்கு பூஜைகள் செய்த தர்கட் அவசரமாக வெளியில் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் பாபாவுக்கு எதுவுமே நைவேத்தியம் படைத்து வழிபடாமல் சென்று விட்டார்.

இதனால் தர்கட் மனம் வேதனைப்பட்டது. பாபா படம் முன்பு நின்று மன்னிப்புக் கேட்டார். பிறகு அவர் சீரடியில் இருக்கும் தன் மகனுக்கு இது தொடர்பாக கடிதம் எழுதினார். பாபாவுக்கு நைவேத்தியம் படைக்க முடியாமல் போனதற்காக பாபாவிடம் பொறுத்தருளுமாறு வேண்டிக் கொள்ள அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அதே நேரத்தில் சீரடியில் அவரது மனைவி, மகனிடம் சாய்பாபா மனம் விட்டு பேசிக் கொண்டிருந்தார். அவர் தர்கட் மனைவியைப் பார்த்து, “அம்மா... இன்று உன் வீட்டுக்கு சென்றிருந்தேன். கதவு பூட்டப்பட்டிருந்தது. நான் உள்ளே நுழைந்து சென்று பூஜை அறையில் பார்த்தேன். நான் சாப்பிட்டு பசியாற உன் கணவர் எனக்கு எதையுமே வைக்கவில்லை. எனவே நான் பசியோடு திரும்பி வந்து விட்டேன்” என்றார்.

பாபா இவ்வாறு சொன்னதும் தர்கட்டின் மனைவி, மகன் இருவருக்கும் தங்கள் வீட்டில் பாபாவுக்கு செய்யப்பட்ட பூஜையில் ஏதோ தவறு நடந்து இருக்கிறது என்பது மட்டும் புரிந்தது. இதனால் தர்கட்டின் மகன் உடனே மும்பைக்கு புறப்பட்டு செல்ல முடிவு செய்தார். பாபாவிடம் அவர் விடை பெற அனுமதி கேட்டார்.

ஆனால் சீரடியில் இருந்து இப்போது புறப்படக்கூடாது என்று பாபா தடை விதித்து விட்டார். இதனால் தர்க்கட்டுக்கு அவரது மகன் ஒரு கடிதம் எழுதி போட்டார்.

மறுநாள் இரு கடிதங்களும் அவரவர் கைகளில் கிடைத்தன. அப்போதுதான் தர்கட்டுக்கும் அவரது மகனுக்கும் அனைத்தும் தெரிய வந்தன.

பாபாவின் உண்மையான பக்தர்கள், இந்த உலகின் எந்த நாட்டில், எந்த மூலையில் இருந்தாலும், அவர்களது அன்பையும், அன்புடன் அவர்கள் தரும் நைவேத்தியத்தையும் பாபா ஏற்றுக் கொள்வார் என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர். பாபா சீரடிக்கு வந்த போது, தொடக்க காலத்தில் அவருக்கு லட்சுமிபாய் என்ற பெண்மனிதான் தேடி, தேடி உணவு கொடுத்தார் என்பது உங்களுக்குத் தெரிந்து இருக்கலாம். பாபா சாப்பிடாமல் லட்சுமிபாய் சாப்பிட மாட்டார். பாபா எங்கு சென்றாலும் அவரைத்தேடி கண்டுபிடித்து உணவு வழங்குவார்.

ஒருநாள் பாபா, லட்சுமிபாயிடம் எனக்கு மிகவும் பசிக்கிறது என்றார். உடனே லட்சுமிபாய் அவசரம் அவசரமாக ரொட்டி தயாரித்து எடுத்து வந்து பாபாவிடம் கொடுத்தார். பாபா அந்த ரொட்டித் துண்டுகளை வாங்கி, சிறிது சிறிதாக பிய்த்து அருகில் நின்ற நாய்க்கு போட்டார். எல்லா ரொட்டிகளையும் நாய் சாப்பிட்டு விட்டது.

இதை கவனித்த லட்சுமிபாய், “என்ன பாபா... இந்த உணவை நான் உங்களுக்காகத்தானே எடுத்து வந்தேன். நீங்கள் நாய்க்கு போட்டு விட்டீர்களே” என்றார் வேதனையுடன். அப்போது பாபா, “நாயின் பசியைப் போக்குவது என்பது என் பசியைப் போக்குவது போன்றதே” என்றார். அப்போதுதான் பாபா, இந்த உலகில் எல்லா உயிரிலும் வியாபித்து இருப்பது புரிந்தது.நாயின் பசியை தம் பசியாக நினைத்த பாபா,அதன் பசியை உடனே போக்கினார். இதுவே ஜீவ காருண்யம்.நாமும் நம்மால் முடிந்த அளவிற்கு, பாபாவுக்கு மிகவும் பிடித்தமான அன்னதானம் செய்து பிறரின் பசிப்பிணியைப் போக்குவோம்.

ஓம் சாய் ராம்

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.