ஆன்மீக கதை – கிருஷ்ணனுக்கு என்ன ஆயிற்று?

  கோமதி   | Last Modified : 15 Sep, 2018 04:25 pm

spiritual-story-what-happened-to-krishna

லீலைகள் செய்வதில் வல்லவனான ஸ்ரீ கிருஷ்ணர் ஒருசமயம், தனக்கு தலைவலி வந்தது போல நடித்தார். அவரது மனைவி சத்யபாமாவுக்கு விஷயம் தெரிந்து மருந்துடன் ஓடோடி வந்தாள். அடுத்து ருக்மணி வந்தாள். அவர்கள் தங்களால் ஆன வைத்தியத்தை எல்லாம் செய்து பார்த்தார்கள். வலியால் துடிப்பது போல நடித்தார்.

அந்த சமயத்தில் நாரதர் அங்கு வந்தார். உண்மையிலேயே, சுவாமிக்கு தலைவலி தான் போலும் என்று நம்பிவிட்டார். இதற்கான மருந்தை அந்த பரந்தாமனைத் தவிர வேறு யாரால் சொல்ல முடியும் என நினைத்து,""ஐயனே! எங்களைப் போன்ற ஜடங்களுக்கு வியாதி வந்தால் வைத்தியர் மருந்தளிப்பார். நீயே உலகம். உனக்கு ஒன்று என்றால், அதற்கு மருந்தும் உன்னிடம் தானே இருக்கும். என்ன மருந்து என சொல். வரவழைக்க ஏற்பாடு செய்கிறேன்,'' என்றார்.

கிருஷ்ணர் அவரிடம், “என் மீது அதிக பக்திகொண்டவன் யாரோ, அவனது பாதத்தில் படிந்த மணலை உதிர்த்து தண்ணீரில் கலக்கிக் கொண்டு வாருங்கள். அந்த ‘பாததூளி தீர்த்தம்' என்னைக் குணமாக்கி விடும்,’என்றார். நாரதரும் எங்கெங்கோ ,எப்படியெல்லாமோ தேடிப்பார்த்தார். யாரும் சிக்கவில்லை. எல்லாரும் தங்கள் பக்தியில் ஏதோ ஒரு குறை இருப்பதாகவே கூறினர்.கிருஷ்ணரிடமே திரும்பிய நாரதர்,“ மருந்தைச் சொன்ன நீ மருந்து எங்குள்ளது என்பதையும் சொல்லி விடு,'என்று தோல்வியை ஒப்புக் கொண்டு சரணடைந்தார்.அதற்கு, கிருஷ்ணர் சொன்ன பதிலைக் கேட்டு, நாரதர் சிரித்துவிட்டார். “கிருஷ்ணா! கோபியர்களின் கால் தூசைக் கொண்டு வரச்சொல்கிறாயே! எங்களைப் போன்றவர்கள் யாகம், பூஜைகளால் உன்னை ஆராதிக்கிறோம்.அப்படிப்பட்ட நாங்களே எங்கள் பாத தூசை தருவதற்கு யோசிக்கிறோம்.கல்வியறிவற்ற கோகுலத்துப் பெண்களின் கால் தூசை கேட்கிறாயே!என்ன விளையாட்டு இது,'' என்றார்.

“சொன்னதைச் செய்”என்றார் கிருஷ்ணர்.நாரதர் கோகுலம் சென்றார்.“கோபியரே! கிருஷ்ணனுக்கு உடல்நிலைசரியில்லை,''என்று தான் சொன்னார்.இதைக் கேட்ட மாத்திரத்திலேயே பல கோபிகைகள் மயங்கி விழுந்து விட்டனர். சிலர் அரைகுறை மயக்கத்தில்,“கண்ணா! உனக்கு என்னாயிற்று! கிருஷ்ணா! நீ பிழைக்காவிட்டால் நாங்களும் பிழையோம். இந்த உலகில் வாழமாட்டோம்,'' என்று உயிர்போகும் நிலைக்கு ஆளாகிவிட்டனர். சிலர், பித்துப் பிடித்ததைப் போல தயிர் பானைகளை கீழே போட்டு விட்டு அங்குமிங்குமாக ஓடினர்.“கிருஷ்ணா! உனக்கு என்னாயிற்று? இப்போதே உன்னைப் பார்க்க வேண்டும்!'' என்று அரற்றினர். அவர்களின் பக்தியைப் பார்த்து நாரதர் அசந்து போனார்.

தேவலோகத்திற்கு போய்,“கிருஷ்ணனுக்கு உடல்நிலை சரியில்லை, உங்களில் பக்தி மிக்கவர் பாதத்தூளியைக் கொடுங்கள் என்ற போது, "நாங்கள் ஒன்றும் அவர் நினைக்குமளவு பக்தி செலுத்தவில்லையே!'' என்றார்களே தவிர, ஒருவராவது இப்படி வருத்தப்பட்டார்களா! ஏன்! நராயணா! நாராயணா! என்று அவன் திருநாமத்தை எந்நேரமும் உச்சரிக்கும் நான் கூட அப்படி ஒரு நிலையை அடையவில்லையே! இந்தக் கோபிகைகளோ, "கிருஷ்ணனின் உடல்நிலை சரியில்லை” எனக் கேட்டதுமே கலங்கித் துடிக்கிறார்களே.உயிரையே விடுமளவுபக்தி செலுத்துகிறார்களே! இவர்களின் பாதத்தூளியே கிருஷ்ணரின் வியாதியைக் குணப்படுத்தும்' என்று நினைத்த நாரதர், அவர்கள் பாதம்பட்ட கோகுலத்து மண்ணில் சிறிதளவு நீரில் கரைத்து கொடுத்தார். கிருஷ்ணருக்கு சுகமாகி விட்டது.தங்களை விட கிருஷ்ணனிடம் வேறு யாரும் அன்பு செலுத்த முடியாது என்று அது நாள் வரை கர்வம் கொண்டிருந்த நாரதருக்கும், வானவர்களுக்கும் கிருஷ்ணர் இந்த சம்பவத்தின் மூலம் பாடம் கற்பித்து விட்டார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.