பிறந்தாச்சு புரட்டாசி

  கோமதி   | Last Modified : 17 Sep, 2018 03:44 pm

purattasi-started

ஒன்பது கோள்களில் மகாவிஷ்ணுவின் அம்சமாக உருவான புத பகவான் உச்ச பலம் பெறுவது கன்னி ராசியில். இதன் காரணமாக தான், சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் புரட்டாசி, பெருமாளுக்கு உரிய மாதமாக நம் முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள். பிதுர்களுக்குரிய விடுதலை மாதமான இந்தக் காலக்கட்டத்தில்,  மறைந்த நம் முன்னோர்கள், பிதுர் லோகத்தில் இருந்து தங்கள் உறவுகளை நாடி, பூமிக்கு வருவதாக ஐதீகம்.

புரட்டாசி வளர்பிறை பிரதமையில் இருந்து இருந்து அமாவாசை வரையான, 15 நாட்கள் அவர்கள் பூமியில் தங்கும் காலமான ‘மகாளய பட்சம்’ எனப்படுகிறது. இந்த நாட்களில் நாம் தினமும் தர்ப்பணம் செய்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும். தான தர்மங்களும் அன்னதானங்களும்  செய்தால் அவர்களின் ஆசியைப் பெறலாம். இந்த பட்சத்தில் வரும் பரணி, "மகாபரணி' என்றும், அஷ்டமியை, "மத்யாஷ்டமி' என்றும், திரயோ தசியை "கஜச்சாயை' என்றும் சிறப்பு பெறுகிறது. இந்த மூன்று நாட்களுமே, பிதுர் வழிபாட்டுக்கு உகந்தவை. புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசையில் செய்யப்படும் பிதுர் பூஜை மற்ற அமாவாசைகளைக் காட்டிலும் அதிக பலனைத் தரக் கூடியது. 

புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்து, அசைவத்தை தவிர்த்து, விஷ்ணுவின் நாமத்தை பாராயணம் செய்ய வேண்டும். திருப்பதி வெங்கடாசலபதியைக் குலதெய்வமாகக் கொண்டுள்ள குடும்பங்களில் மாவிளக்கு ஏற்றி திருவாராதனம் செய்வது வழக்கம். பொதுவாக சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம். புரட்டாசி மாத சனிக்கிழமையில் விரதம் இருப்பது கூடுதல் சிறப்பாக சொல்லப்படுகிறது.  புரட்டாசி  சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார் என்பதால், அன்று விரதம் அனுஷ்டித்தால், அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறையும் என்பது நம்பிக்கை.  ஜாதக அமைப்பின்படி சனி, புதன் திசை நடப்பவர்கள் எள் நல்லெண்ணெய் தீபம் போட்டு வழிபட தடைகள் அனைத்தும் நீங்கும். பாவங்கள் நீங்கி புண்ணியமும் சுபயோக சுபங்களும் கூடி வரும்.

திருப்பதி சீனிவாச பெருமளுக்கு, புகழ்பெற்ற பிரம்மோற்சவ நிகழ்ச்சி புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.அம்பாளுக்கு உகந்த நவராத்திரி பூஜையும்  இம்மாதத்தில் தான் கொண்டாடப்படுகிறது. ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த  இந்த புரட்டாசி மாதம் முழுவதும் வழிபாடுகள் செய்தும், விரதங்கள் இருந்தும், தெய்வங்கள் மற்றும் நம்மை வழிநடத்தும் முன்னோர்களின் அருளோடு, நல்லாசியும் பெறுவோம். 

புரட்டாசி மாத ராசி பலன்கள் மற்றும் பரிகாரங்களைத் தெரிந்துகொள்ள கிளிக் செய்யுங்கள்!

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.