தேவர்கள் கலந்துக் கொள்ளும் திருப்பதி பிரம்மோற்சவம்

  கோமதி   | Last Modified : 20 Sep, 2018 12:58 pm
participation-of-devas-in-tirupati-bramotsavam

வாழ்வில் பல திருப்பங்களை தரும் திருமலை திருப்பதியில் தினமுமே உற்சவம்தான்.. கோலாகலம் தான். குறிப்பாக புரட்டாசி மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவம் மிகவும்  முக்கியமான நிகழ்வாக போற்றப்படுகிறது. இந்த உற்சவத்தின் போது நம்மால் திருப்பதிக்கு போக முடியவில்லையே என்று வருத்தப்படுபவர்களுக்காக இந்த பதிவு. இந்த ஒன்பது நாள் உற்சவத்தின் போது மலையப்ப ஸ்வாமி ஸ்ரீதேவி பூதேவி சகிதமாய் என்னென்ன வாகனங்களில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார் என்பதை பார்ப்போம்.இந்தப் பதிவினைப் படிக்கும் போதே நம் மனக் கண்களால் அந்த திவ்ய காட்சியினை கண்டு மகிழ்வோம். 

மும்மூர்த்திகளில் படைக்கும் தொழிலை செய்யும் பிரம்மாவால் முதன் முதலாக இந்த உற்சவம் கொண்டாடப்பட்டது. 9-நாட்கள் நடைபெறும் இவ்விழா, அவரது பெயராலேயே பிரமோற்சவம் என அழைக்கப்படுகிறது.தான் படைக்கும் உயிர்களை வெங்கடேசப்பெருமாள் சிறப்பாகப் பாதுகாப்பதற்கு நன்றி கூறும் விதமாக பிரம்மா இந்த  உற்சவத்தை  நடத்தினார் என்கிறது புராணங்கள். 

பிரம்மோற்சவம் முதல் நாள்:

துவஜரோகணம்: இது முதல் நாள் காலையில் நடைப்பெறும் வைபவம். இங்குள்ள துவஜ ஸ்தம்பத்தில் கருடன் உருவம் பதித்த கொடியேற்றப்படும். விஷ்ணுவின் வாகனமாகிய கருடன் தேவலோகம் சென்று அனைத்து தேவர்களையும் பிரம்மோற்சவத்திற்கு அழைத்து வர செல்கிறார் என்பதை குறிக்கும் விதமாக செய்யப்படுகிறது.

பெத்த சேஷ வாகனம்: முதல் நாள் மாலை எம் பெருமானுக்கு நாகங்களின் தலைவனான ஆதிசேஷன் வாகனமாக இருப்பார். 

பிரம்மோற்சவம் 2-ம் நாள்:

சின்ன சேஷ வாகனம்: இரண்டாம் நாள் காலை நடைபெறும் வாகனம் இது. பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் நாகங்களில் நான் வாசுகியாக இருப்பேன் என்று சொல்லியிருக்கிறார். அந்த வாசுகி தான் இரண்டாம் நாள், வெங்கடேசப்பெருமாளை தாங்கி செல்லும் வாகனம்.

மாலை ஹம்ச வாகனம்: ஹம்சம் என்றால் அன்னம். அன்னம் நல்லது கெட்டதைப் பிரித்தெடுக்கும் வல்லமை கொண்டது.அது போல் நாமும் வாழ்வில் இறைவன் துணையால் பகுத்தறிந்து வாழ தெரிந்துக் கொள்ள வேண்டும். 

பிரம்மோற்சவம் 3-ம் நாள்:

 

சிம்ம வாகனம்: 3-ம் நாள் காலை சுவாமி சிம்ம வாகனத்தில் புறப்பாடு நடக்கும். விலங்குகளில் வலியது சிங்கம். ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் விலங்குகளில் நான் சிம்மமாக இருப்பேன் என்பார். பாதி மனிதன், பாதி சிங்கம் உருவம் தான் நரசிம்ம அவதாரம்.

முத்யால பல்லக்கி வாகனம்: 3-ம் நாள் மாலை எம்பெருமான் தம் மனைவியர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் முத்து பல்லக்கு வாகனத்தில்,வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் வழங்குவார்.  

பிரம்மோற்சவம் 4-ம் நாள்:

கல்பவிருஷ வாகனம்: 4-ம் நாள் காலை கல்ப விருஷ வாகனப் புறப்பாடு. கேட்டதைக் கொடுக்கும் தேவதரு கல்பவிருஷம். ஸ்ரீமன் நாராயணனும் தன்னை வணங்கும்  மக்களுக்கு அனைத்து வரங்களையும்,வளங்களையும் அள்ளித்தருபவர் என்பதை குறிக்கும் வாகனம் இது.

சர்வ பூபாள வாகனம்: 4-ம் மாலைபுறப்பாட்டின் வாகனம் இது. வெங்கடேசப் பெருமாளே கடவுளுக்கெல்லாம் கடவுள் என்பதை இது குறிக்கும்.

பிரம்மோற்சவம் 5-ம் நாள்:

மோகினி அலங்காரம்: 5-ம் நாள் காலையில் எம் பெருமான் மோகினி அலங்காரத்தில் வலம் வருவார். அசுரர்களிடமிருந்து தேவர்களை காக்க மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்தார். மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களில் பெண் அவதாரம் மோகினி அவதாரம் ஒன்று தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

கருடவாகனம்: 5-ம் நாள் மாலை தனது சொந்த வாகனமான கருட வாகனத்தில் பவனி வருகிறார் ஸ்ரீனிவாச பெருமாள். 

பிரம்மோற்சவம் 6-ம் நாள்:

அனுமந்த வாகனம்: ராமாவதாரத்தின் போது அனுமான் ஆற்றிய தன்னலமற்ற சேவைக்கு  மரியாதை செலுத்தும் விதமாக 6-ம் நாள் காலை அனுமந்த வாகனத்தில் பெருமாள் பவனி நடைபெறும். 

ஸ்வர்ண ரதோற்சவம், கஜ வாகனம்: கஜேந்திர மோட்சத்தில் யானை ஒன்றின் அபயக்குரல் கேட்டு உதவிக்கு ஒடிவந்த எம்பெருமான் ஸ்ரீமன்நாராயணனை 6-ம் நாள் மாலை தாங்கி வருகிறது யானை வாகனம்.

பிரம்மோற்சவம் 7-ம் நாள்:

சூர்ய பிரபை: சூரியன் மகாவிஷ்ணுவின் கண்ணிலிருந்து தோன்றியவர். மேலும் சூரியன் மகாவிஷ்ணுவின் அம்சங்களில் ஒன்று. இத்தகைய பெருமை வாய்ந்த கதிரவனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக 7-ம் நாள் காலை சூர்ய பிரபை கொண்டாடப்படுகிறது.

சந்திர பிரபை: சூரியன் மகாவிஷ்ணுவின் கண்ணிலிருந்து தோன்றியது போல சந்திரன் மகாவிஷ்ணுவின் சிந்தனையிலிருந்து தோன்றியதாக நம்பப்படுகிறது. ஒரு நாளுக்கு பகலும், இரவும் எவ்வளவு முக்கியம் என்பதை குறிக்கும் வாகனம் சூரிய மற்றும் சந்திர பிரபை வாகனங்கள். பிரம்மோற்சவம்

பிரம்மோற்சவம் 8-ம் நாள்:

ரதோற்சவம்: 8-ம் நாள் காலை மிக அழகாக அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் தனது மனைவியாருடன் வலம் வரும் எம்பெருமனை சேவிப்பவர்களுக்கு மறுப்பிறப்பே கிடையாது என நம்பிக்கை.

அஸ்வ வாகனம்: 8-ம் நாள் மாலை பகவான் குதிரை வாகனத்தில் புறப்படுகிறார். வெங்கடேசப் பெருமாள் அடுத்து எடுக்கப்போகும் கல்கி அவதாரத்திற்கு முன்னோட்டமாகவும், ஏற்கனவே எடுத்த ஹயக்ரீவ அவதாரத்தில் குதிரை முகத்துடன் அவதரித்ததை நினைவுகூறும் வகையிலும் அஸ்வ வாகனம் நடைபெறுகிறது.

பிரம்மோற்சவம் 9-ம் நாள்:

சக்ர ஸ்நானம்: 9-ம் நாள் காலை வராக சுவாமி ஆலயத்தில் ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கும், ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுவதுடன், விஷ்ணு ஏந்தியிருக்கும் ஆயுதமான சக்கரத்தை புஷ்கரணியில் முக்கி எடுப்பர். அதே சமயத்தில் ஏராளமான பக்தர்கள் புஷ்கரணியில் முங்கி எழுவர். அதன் மூலம் பாபங்கள் அனைத்தும் விலகுவதாக நம்பப்படுகிறது

துவஜரோகணம்: 9-ம் நாள் மாலை பிரம்மோற்சவம் முடிந்து விட்டதற்கு அறிகுறியாக கருடன் கொடி கீழிறக்கப்படும்.

ஓம் நமோ நாராயணாய.....

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close