சீரடி அற்புதங்கள் - பக்தர்களின் பசியை போக்கிய சீரடி சாய்பாபா

  கோமதி   | Last Modified : 20 Sep, 2018 01:36 pm

shirdi-miracles-shirdi-saibaba-who-get-rid-the-hunger-of-devotees

சீரடி சாய்பாபா மக்களுக்கு வலியுறுத்திய விஷயங்களில் மிகவும் முக்கியமானது அன்னதானம். பசித்தவருக்கு உணவு கொடுப்பவர்களை பாபா மிகவும் விரும்புகிறாராம். பாபாவுக்கு உகந்த வியாழக்கிழமைகளில் பெரும்பாலான எல்லா சாய்பாபா தலங்களிலும்  அன்னதானம் சிறப்பாக நடத்தப்படும். ஏனென்றால் பசித்த உயிர்களுக்கு உணவளிப்பது,பாபாவுக்கே அளிப்பது போன்றதாகும். பொதுவாகவே பக்தர்கள் பட்டினி கிடந்து, தங்கள் உடலையும், உள்ளத்தையும் வருத்திக் கொண்டு தன்னை வழிபட வேண்டாம் என்று சாய்பாபா அறிவுறுத்தி உள்ளார். 

சாய்பாபா, தனக்கான உணவு பற்றி ஒரு போதும் கவலைப்பட்டதே இல்லை. சீரடியில் உள்ள 5 பேரின் வீடுகளில் சென்று யாசகம் கேட்டு உணவு பெறுவதை தம் கடைசி காலம் வரை வழக்கத்தில் வைத்திருந்தார். அப்படி 5 வீடுகளில் வாங்கி வரும் உணவை ஒரு பெரிய சட்டியில் கொட்டுவார். சோறு, குழம்பு எல்லாவற்றையும் மொத்தமாக கலந்து விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் கொடுப்பார்.

பிறகு, தான் கொஞ்சம் சாப்பிடுவார். மற்றவற்றை பக்தர்களுக்கு கொடுத்து விடுவார். அவர் கையால் பிசையப்பட்ட உணவை வாங்கி சாப்பிட்டவர்கள், மிகப்பெரிய புண்ணியம் செய்தவர்கள். நாளடைவில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாபாவிடம் ஆசி பெற சீரடிக்கு படையெடுக்கத் தொடங்கினார்கள். இதைத் தொடர்ந்தே அந்த பக்தர்களுக்கு உணவூட்டுவதற்கு சாய்பாபா முடிவு செய்தார்.

பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் நாட்களில் சாய்பாபா தம் கையால் சமைத்து உணவு கொடுப்பார். சீரடி தலத்தில் பல தடவை இந்த அற்புதம் நடந்துள்ளது.சமையலுக்கான பொருட்கள் தயாரானதும் பிறகு மசூதி எதிரில் உள்ள அகன்ற மைதானத்தில் சமையலை தொடங்குவார். சமைப்பதற்கு 2 பெரிய பாத்திரங்களை சாய்பாபா வைத்திருந்தார்.அவர் சமைக்கும் ‘மிட்டா சாவல்’ எனப்படும் சர்க்கரைப் பொங்கல் மிக, மிக ருசியாக இருக்கும். அவரைக்காயைப் பயன்படுத்தி அவர் ‘வரண்’எனும் சூப் தயாரிப்பார்.அந்த சூப்பில் கோதுமை மாவை சிறு, சிறு உருண்டைகளாகப் பிடித்து போட்டு பாபா மிதக்க விடுவார். அல்லது கோதுமையை தட்டை ரொட்டிகளாக தயாரித்து மிதக்க விடுவார்.

உணவு தயாரிக்கும் போது பக்தர்கள் மெய்சிலிர்க்கும் வகையில் ஒரு அற்புதத்தையும் பாபா அடிக்கடி நிகழ்த்தி காட்டுவார். பாத்திரத்தில் போடப்பட்டுள்ள உணவு சரியான பக்குவத்துக்கு வந்து விட்டதா என்பதை அறிய, பாபா தனது கையையே உணவு கொதித்துக் கொண்டிருக்கும் பாத்திரத்தக்குள் விட்டு கலக்குவார். தொடவே முடியாத அந்த பாத்திரத்தின் சூட்டை மீறி உணவை கையால் கிளறி விடுவார். பாத்திரத்தின் அடிப்பாகத்தில் இருந்து உணவை எடுத்துப் பார்ப்பார். 

உணவு சமைத்து முடித்ததும், பாத்திரங்கள் அனைத்தும் மசூதிக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கு அதை கடவுளுக்கு படைத்து பூஜைகள் நடத்தப்படும்.பிறகு உணவில் ஒரு பகுதியை எடுத்து தனது முதன்மை சீடர்களான மகல்சாபதிக்கும், தத்யா பாட்டீலுக்கும் கொடுத்து அனுப்புவார். இதைத் தொடர்ந்து விருந்து நடைபெறும். பக்தர்களை வரிசையாக உட்கார வைத்து, உணவு பரிமாறப்படும். பாபாவே தம் கைப்பட உணவுகளை எடுத்து வைப்பார்.ஏழை எளியவர்கள்,ருசித்து சாப்பிடுவதை பாபா கண் இமைக்காமல் பார்ப்பார். ஏழைகள் வயிறு நிறைந்து விட்டது என்பதை குறிப்பால் உணரும் போது பாபா மிகவும் மகிழ்ச்சி அடைவார்.

சிலருக்கு அவர் தம் கையால் உணவை எடுத்து ஊட்டி விட்டதும் உண்டு. ஒரு தடவை ஒரு பக்தர், “நான் சைவ உணவு சாப்பிட மாட்டேன். அசைவ உணவுதான் வேண்டும்” என்று கேட்டார். அதைக் கேட்டு பாபா கோபப்படவில்லை. அசைவ உணவு தயாரிக்க இயலாது என்று சொல்லவில்லை. அந்த பக்தனின் ஆசையை நிறைவேற்றும் வகையில் மாமிசம் வாங்கி வரச் செய்தார். அந்த மாமிசத்துண்டுகளை சுத்தம் செய்து அசைவ உணவை தம் கைப்பட தயாரித்துக் கொடுத்தார். அவர் தயாரித்த அசைவ உணவும் பக்தர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தது.

சாப்பிடும் விஷயத்தில் பாபா எந்த பக்தருக்கும் எந்த கட்டுப்பாடும் விதித்ததே இல்லை. என்ன வகை உணவு பிடிக்கிறதோ, அதை கேட்டு வாங்கி சாப்பிடுங்கள் என்று பக்தர்களிடம் கூறுவார். சாய்பாபா தொடங்கி வைத்த உணவு வழங்கும் பழக்கம் சீரடியில் இன்றும் நடைமுறையில் உள்ளது. சீரடிக்கு வரும் ஏழை-எளியவர்கள் அந்த உணவை பாபாவே தருவதாக நம்புகிறர்கள்.

சாய் ராம்....

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.