இந்த இடங்களில் திருமகளைப் பார்க்கலாம்.

  கோமதி   | Last Modified : 21 Sep, 2018 01:26 pm

you-can-see-goddess-lakshmi-in-these-places

ஸ்ரீதேவியை விரும்பாதவர்கள் யார்?. பொன்,பொருளை மட்டுமே இங்கு குறிப்பிடவில்லை. இல்லமும் நம் உள்ளமும் தூய்மையாக இருக்கும் போது தான், அது இறைவனின் உறைவிடமாக மாறுகிறது. சகல சம்பத்துகளுடன், சந்தோஷமாக இருக்கும் இல்லமே அன்னை மகாலட்சுமி இருக்கும் இடங்களாகும். ஆனால் அந்த அன்னை எந்த மாதிரியான இடங்களை விரும்புவாள் என்பதை தெரிந்துக் கொண்டால் தானே, அன்னையின் திருவருளைப் பெறலாம்.

திருமால் மார்பு

திருமாலை விட்டு எள்ளளவும் அகலாதவள் மஹால‌ட்சுமி. திருமகள் திருமாலின் மார்பில் உறைகிறாள். ஆதனால் தான்,திருவுறைமார்பன், ஸ்ரீநிவாசன் என்று திருமாலுக்குப் பெயர். திருமகளின் அருளைப் பெற மிகவும் எளிமையான வழி,திருமாலையும் வழிபட வேண்டும். திருமாலை விடுத்துத் திருமகளை மட்டும் வணங்கக் கூடாது என்பார்கள். 

பசுவின் பின்புறம்

பசுவின் உடலில் ஒவ்வொரு பாகத்திலும் ஒரு தெய்வம் இருக்கிறார்கள் என்றாலும்,பசுவின் பின்புறத்தில் தான் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். காலையில் எழுந்ததும் பசுவின் பின் பக்கத்தை காண நேர்ந்தால், புண்ணியமாகும். 

யானையின் மத்தகம்

யானையின் மத்தகம் பிரணவம் போன்றது. அங்கே திருமகள் வீற்றிருக்கிறாள்.

தாமரை

செல்வத்தின் சின்னமான தாமரை, மலர்களில் சிறந்தது. திருமகள் தாமரை மலரில் உறைபவள்.  

திருவிளக்கு

நம்முடைய இந்து மத தர்மத்தில், எல்லாத் தெய்வங்களும் விளக்கில் இருப்பதாக வணங்கப்பட்டாலும்,விளக்கை லட்சுமியாகவே கருதுவது நம்முடைய மரபு.

சந்தனம்

தெய்வங்களுக்குரிய சோடச உபசரணையில் சந்தனம் அணிவிப்பதும் ஒன்று. அத்தகைய மங்கலப்பொருளான சந்தனத்தில் மகாலட்சுமி உறைகிறாள். 

தாம்பூலம்

சுபகாரியங்களிலும், பூஜையிலும் மங்களகரமானதாக கருதப்படும் தாம்பூலத்திலும் தேவி இருக்கிறாள். 

கோமயம்

பசுவிடமிருந்து வெளிப்படும் கோஜலம், கோமயம் (சாணம்) பால், தயிர், நெய் ஆகிய ஐந்தும் இறைவனுக்கு உகந்தவை. இதனைப் பஞ்சகவ்யம் என்பர். வாயிலில் சாணம் தெளித்தால், வீட்டைச் சாணத்தால் மெழுகினால், லட்சுமி விருப்பமுடன் வருவாள். பரம ஒளஷதமான பஞ்சகவ்யம் பருகினால் நோய்கள் நம்மை அண்டாது. 

கன்னிப்பெண்கள்

தூய கன்னியர்களிடத்து லட்சுமி கடாட்சம் உண்டு. 

உள்ளங்கை

நம்முடைய உள்ளங்கையில் லட்சுமி உள்ளாள். அதனால் காலையில் எழுந்ததும் கையைப் பார்ப்பது நன்மைப் பயக்கும். 

பசுமாட்டின் கால் தூசு

தேவர்களின் அம்சமான பசுவின் கால் தூசு பட்ட இடத்தில் செல்வம் கொழிக்கும். 

வேள்விப்புகை

வேள்விப் புகையிலும் திருமகள் காணப்படுகிறாள். உயிர் காக்கும் வேள்விப்புகை ஆரோக்கியம் தரும். 

சங்கு

சங்கும் அதன் ஒலியும் மங்களகரமானவை. 

வில்வமரம்

வில்வ மரத்தடியில் ரைவத மன்வந்திரத்தில் மகாலட்சுமி தோன்றினாள் என்கிறது புராணங்கள். வில்வத்தை விட சிறந்த பத்திரம் ஒன்றும் இல்லை எனலாம்.வில்வ மரத்தடியில் செல்வதிற்கு அதிபதியான லட்சுமி வசிக்கிறாள்.

நெல்லி மரம்

திருமாலின் அருள் பெற்ற ஹரிபலம் என்னும்  நெல்லி மரத்தினடியில் மகாலட்சுமி உறைகிறாள். நெல்லிக்கனி இருக்கும் வீட்டில் லட்சுமி இருப்பாள் என்பது நம்பிக்கை. 

இவை தவிர தர்ம சிந்தனை உடையாரின் உள்ளம்,வெண்ணிற மாடப் புறாக்கள் வாழும் இடம், கலகமில்லாத மகளிர் வாழும் இடம், தானியக் குவியல்,கல்லும் உமியும் இல்லாத அரிசிக் குவியல்,பணிவுடைமையும் இன்சொல்லும் உடையவர்,பகிர்ந்துண்டு வாழும் மனிதர்,நாவடக்கம் உள்ளவர்,மிதமாக உண்பவர்,பெண்களைத் தெய்வமாக மதிப்பவர். தூய்மையான ஆடை அணிகிறவர் ஆகிய இடங்களிலும் ,மனிதர்களிடத்தும் மகாலட்சுமி எப்போதும் இருக்கிறாள்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.