எதிரிகளின் ஏவல் செய்வினை போக்கும் மடப்புரம் பத்ரகாளியம்மன்.

  கோமதி   | Last Modified : 25 Sep, 2018 12:58 pm

madapuram-bathrakaliyamman-who-protects-us-from-evils

ஆக்ரோஷமாக  அன்னை பத்ரகாளி சிவகங்கை  திருப்புவனத்துக்கு அருகிலிருக்கும் மடப்புரத்தில் காட்சி தருகிறாள்.ஆக்ரோஷ வடிவில் காணப்பட்டாலும் கருணைத் தெய்வமாக தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு பேரருள் புரிந்து காத்து ரட்சிக்கிறாள் அன்னை பத்ரகாளி. அன்னை இத்திருத்தலத்தில் வீற்றிருந்து அருள்பாலிப்பதன் தலபுராணம் இதோ.

ஒரு  காலத்தில் மதுரை மாநகரை வெள்ளம் சூழ்ந்தபோது மதுரையை ஆட்சி செய்த மீனாட்சி, மதுரையின் எல்லையைக் காட்டச் சொல்லி சிவனை வேண்டினார். அப்போது ஆதிசிவன் பாம்பு வடிவில் தோன்றி மதுரையின் நான்கு புறத்தையும் தன் உடலால் வளைத்துக் கட்டினார். அப்போது பாம்பின் படமும் அதன் வாலும் ஒன்றையன்று தொட்டுக்கொண்டு நின்ற இடம்தான் படப்புரம் எனப்பட்டது. இதுவே மருவி மடப்புரமாக ஆனது

காசியில் நீராடுவதை காட்டிலும் புண்ணியம்

ஒருமுறை பார்வதியை அழைத்துக்கொண்டு வேட்டைக்குக் கிளம்பிய சிவபெருமான், மடப்புரம் பகுதிக்கு வந்தார். காடு மிகப் பரந்து கிடக்கிறது. இதற்குமேல் உன்னால் வரமுடியாது தேவி.அதனால் நீ இங்கேயே இரு. நான் மட்டும் வேட்டையாடிவிட்டு வருகிறேன் என்று பார்வதியிடம் சொன்னாராம். ‘இந்த அடர்ந்த காட்டுப் பகுதியில் நான் மட்டும் தனியே இருப்பது எப்படி?’ என்று பார்வதி கேள்வி எழுப்ப, அய்யனாரை அழைத்து பார்வதிக்குத் துணையாக வைத்துவிட்டுப் போனார் சிவபெருமான். அப்போது பார்வதி, இந்த இடத்தில் நான் இருப்பதால் இந்த ஸ்தலத்துக்கு ஏதாவது சிறப்பைக் கொடுக்கவேண்டும் என்று கேட்க, இந்த இடத்திலிருந்து மூன்று மைல் தொலைவில் இருக்கும் வைகையாற்றில் நீராடுபவர்களுக்கு காசியில் நீராடியதைக் காட்டிலும் கூடுதலான புண்ணியம் கிடைக்கும்! என்று வரம் கொடுத்தாராம் சிவபெருமான்.

சிவபெருமானின் வரத்தால் மகிழ்ந்த அன்னை , மடப்புரத்தில் காளிவடிவில் தங்கினாள் .காளிக்குத் துணையாக இருந்த அய்யனார் அடைக்கலம் காத்த அய்யனாராக இங்கே ஆட்சி செலுத்தினாலும், சக்தியின் வடிவமாக நின்றுகொண்டிருக்கும் பத்ரகாளிக்குத்தான் பிரதான வழிபாடு.சிவபெருமான் அருளிய வரத்தின்படி மடப்புரத்திலிருந்து மூன்று மைல் தொலைவுக்குள் வைகையில் நீராடுபவர்களுக்கு காசியில் நீராடியதைக் காட்டிலும் கூடுதலான புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்றும் தொடர்கிறது.

பொருட்செலவு செய்து காசிக்குப் போக முடியாதவர்கள் மடப்புரத்தை ஒட்டியுள்ள திருப்புவனத்துக்கு வந்து தங்களின் முன்னோர்களுக்குக் காரியங்கள் செய்து புண்ணியம் சேர்த்துக்கொண்டு செல்கின்றனர்.கோயில் வளாகத்துக்குள் வெட்டவெளியில் கூரைகூட இல்லாமல் நாக்கைத் துருத்தியபடி ஆக்ரோஷமாக நிற்கிறாள் பத்ரகாளி. காளியின் இரண்டு பக்கமும் பிரமாண்டமாக இரண்டு பூதங்கள். பதின்மூன்றடி உயரம் கொண்ட காளியின் தலைக்குமேல் ராட்சதக் குதிரை ஒன்று தாவியபடி நிற்கிறது.

காளியை மனமுருகி வேண்டி நின்ற பக்தர் ஒருவர் எந்த நேரமும் உனக்குப் பக்கத்திலேயே இருக்க எனக்கு வரம் கொடுக்கவேண்டும் என்றாராம். அவரது பக்தியை மெச்சிய காளி அவரைக் குதிரையாக மாற்றி, தனக்கு நிழல்தரும் குடையாக வைத்துக்கொண்டாராம். தன்னை நாடிவரும் பக்தர்களைத் தாமதமின்றிக் காப்பாற்ற ஆயத்த நிலையில் காளியின் வலதுகையில் திரிசூலம். அநீதியை அழிக்கத் திரிசூலம் ஏந்திநிற்கும் காளி, அழித்தவற்றை மீண்டும் எழவிடாமல் எரித்துச் சாம்பலாக்குவதற்காகத் தலையில் அக்னி கிரீடத்தைச் சுமந்து நிற்கிறாள்.

பகைவர்களை அழிக்கும் பத்ரகாளியம்மன்

தன்னை நாடி வேண்டி வரும் பக்தர்களின் மீது ஏவப்பட்ட செய்வினை பில்லி சூனியம் அகற்றி பகைவர்களை வெல்லும் சக்தியையும் அருள் பாலிக்கிறார் அன்னை பத்ரகாளியம்மன்.காளிக்கு எதிரே உள்ள மண்டபத்தில் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டுவந்தால் நினைத்த காரியம் கைகூடி வரும். காளிக்குப் பிடித்தமான காணிக்கைப்பொருள் எலுமிச்சம்பழ மாலைதான். காளிக்கு மட்டும் போடக்கூடிய மாலையில் நூற்றியோரு பழங்கள் கோர்க்கிறார்கள். குதிரைக்கும் சேர்த்து மாலை போடுவதென்றால் ஆயிரத்தோரு பழங்களைக் கோர்க்கவேண்டியிருக்கும்.

காளிக்குப் பின்னால் பிராகாரத்தில் வேப்பமரம் ஒன்று உண்டு. இதற்கும் தெய்வசக்தி இருக்கிறது. நீண்டநாட்களாகத் திருமணம் தடைப்பட்டு நிற்கும் பெண்கள் இந்த மரத்தின் மடியில் மஞ்சள் தாலியைக் கட்டி வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்குகின்றன. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தங்களின் முந்தானையைக் கிழித்து வேப்பமரக்கிளையில் தொட்டில் கட்டி விட்டால் தாமதிக்காமல் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.எல்லா நாட்களும் காலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை திருக்கோயில் திறந்திருக்கிறது.

மடப்புரம் அன்னை பத்திரகாளியை தரிசிக்க நோய் நொடிகள் நீங்கி, எதிரிகள் உதிரிகள் ஆகிறார்கள்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.