ஆன்மீக கதை - குருவிடம் மறைக்கலாமா...?

  கோமதி   | Last Modified : 25 Sep, 2018 02:21 pm
spiritual-story-can-you-hide-from-guru

தேவசர்மா முனிவரிடம், விபுலன் என்ற சீடன் வேதம் கற்று வந்தான். முனிவரின் மனைவி ரிசி. அழகுப்பதுமை. ஒரு சந்தர்ப்பத்தில் வேள்வி நடத்துவதற்காக தேவசர்மா வெளியூர் செல்ல நேர்ந்தது. அப்போது அவர் சீடனிடம்,“விபுலா! ரிசியைப் பார்த்துக் கொள்ளவேண்டியது உன் பொறுப்பு!'' என்று கட்டளையிட்டார்.

விபுலனும் குருநாதரின் உத்தரவை சிரமேற்கொண்டு நடந்து வந்தான். அப்போது, ரிசியின் மனதை கலைத்து அவளை அடையும் நோக்கில், தேவேந்திரன் மாறுவேடத்தில் வந்துவிட்டான். இந்திரனின் திட்டத்தை அறிந்த விபுலன்,ரிசியைக் காப்பாற்றுவதற்காக, கூடுவிட்டு கூடு பாயும் வித்தை மூலம் அவளது உடலில் புகுந்தான். திட்டமிட்டபடி இந்திரன் வந்தான். ரிசியின் அழகு உலகில் எந்தப் பெண்ணிடமும் இல்லாத ஒன்று என்று புகழ்ந்தான். தன்னை வர்ணித்த இந்திரனை ரிசியின் உடலுக்குள் புகுந்த விபுலனும் விரும்புவது போல் நடித்தான்.இந்திரன் ரிசியை தொட முயன்ற போது, அவளது உடலில் இருந்து வெளிப்பட்டான். இந்திரன் அவமானத்தால் தலைகுனிந்து ஓடி மறைந்தான்.இந்நிலையில் வேள்வியை முடித்துவிட்டு, குரு வீட்டுக்குத் திரும்பினார். தவறான எண்ணத்துடன் வந்த இந்திரனை விரட்டி விட்டதைக் கூறினான். ஆனால், ரிசியின் உடலில் புகுந்ததைப் பற்றிக் கூறாமல் மறைத்து விட்டான்.

ஒருமுறை தேவசர்மா தெய்வப்பெண் ஒருத்தியிடம் அதிசயமலர் ஒன்றைப் பெற்றார். அதை தன் மனைவி ரிசியிடம் கொடுத்தார். அங்கிருந்த ரிசியின் தங்கை அம்மலரின் மணத்தையும், அழகையும் கண்டு ஆசை கொண்டாள்.தனக்கும் ஒருமலர் வேண்டும் என்று தேவசர்மாவிடம் கேட்டாள். அவர், விபுலனை அழைத்து, தெய்வப்பெண்ணிடம் இன்னொரு மலர் பெற்று வரும்படி அனுப்பி வைத்தார். விபுலனும் குருவின் கட்டளையை ஏற்று தேவலோகம் சென்று மலரைப் பெற்று வந்தான். வரும்வழியில் அவன் கண்ட காட்சி அவனைத் திகைக்க வைத்தது.

ஒருவீட்டின் திண்ணையில் இரு அந்தணர்கள் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தனர். அதில் ஒருவர் மற்றொருவரிடம், "நம்மில் யாருடைய கருத்து தவறானதோ, அவர் விபுலன் அடையும் கதியை அடையட்டும்'' என்றார். அதைக் கேட்டதும் விபுலனுக்கு திக்கென்றது."நான் ஒருபாவமும் செய்யவில்லையே! என்னை உதாரணம் காட்டி இவர்கள் பேசுவானேன்!'' என்று எண்ணியபடியே நடந்தான். அதே வீதியில் இன்னொரு வீட்டின் திண்ணையில் ஆறுபேர் பரமபதம் ஆடிக் கொண்டிருந்தனர். அவர்களில் சோளிகளை உருட்டிய ஒருவன், "யார் இந்த ஆட்டத்தில் ஏமாற்றி விளையாடுகிறரோ, அவர் விபுலன் அடைய இருக்கும் கதியைத் தான் அடைவார்'' என்று சத்தமாகக் கூறினான்.

இதைக் கேட்டதும் விபுலனுக்கு நடுக்கமே வந்து விட்டது. “குருபத்தினியின் உடம்பில் புகுந்து பெரும் பாவத்தை அல்லவா தேடிக் கொண்டு விட்டோம்,'' என புலம்பினான். அதேநேரம், தன் மனதிற்குள் குருபத்தினியைப் பாதுகாக்கவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தானே இதைச் செய்தோம் என்ற எண்ணம் ஆறுதல் தந்தது. மலரை குருவிடம் ஒப்படைத்து வணங்கினான்.அவனுடைய வாடிய முகத்தைக் கண்ட தேவசர்மா, “வழியில் யாரைக் கண்டாய்? ஏனப்பா இப்படி வாட்டத்துடன் இருக்கிறாய்?'' என்று அன்போடு கேட்டார்.

குருபத்னியின் உடம்பில் மறைந்திருந்து அவளைக் காப்பாற்றியதையும், தான் வழியில் கண்ட விபரங்களையும் குருவிடம் தெரிவித்தான்.விபுலனைப் பார்த்து,“விபுலா! நீ சத்தியவான்! தர்மம் தவறாதவன். இருந்தாலும் ரிசியின் உடம்பில் ஒளிந்ததைச் சொல்லாமல் மறைத்தது தவறு. வழியில் நீ கண்ட காட்சிகள் உன்னைத் திருத்துவதற்காகவே நடந்தன. முதலில் சந்தித்த இருஅந்தணர்கள் இரவும் பகலும் என்ற சமயங்கள் ஆவர். பரமபதம் விளையாடிய ஆறுபேரும் ஆறு பருவங்கள். காலம் என்னும் அரியசக்தியிடம் எதையும் நாம் மறைக்க முடியாது,'' என்றார்.சத்தியத்தின் உயர்வையும், காலத்தின் அருமையையும் உணர்ந்த விபுலன், குருவின் திருவடிகளில் விழுந்து பணிந்தான். முனிவரும் அவனை மன்னித்தார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close