சீரடி அற்புதங்கள் - பாபாவின் வாக்கு உண்மையானது

  கோமதி   | Last Modified : 27 Sep, 2018 11:06 am

shirdi-miracles-baba-s-word-is-true

“சீரடி என்பது உன் வீடு. இங்கே நீ எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் தங்கலாம். உன்னை யாரும் கேள்விக் கேட்க முடியாது. உன்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது- எதற்கும் நீ கவலைப்படாதே. என் மீது முழு நம்பிக்கை வை. நான் பார்த்துக் கொள்கிறேன்”- சாய்பாபா.

இது வெறும் வார்த்தைகள் இல்லை. சத்குரு சாய் பாபாவின் வாக்குறுதி. அனேக சாய் பக்தர்கள் வாழ்வில் பாபா நடத்திக் காட்டிய அற்புதம். அப்படியான ஒரு அற்புதம்,1907-ம் ஆண்டு ஒரு பெண்ணுக்கு ஏற்பட்டது. அந்த பெண் பாபாவின் தீவிர பக்தை ஆவார். பாபா உயிரோடு இருந்தபோது அவரது மனம் கவர்ந்த பக்தர்களில் ஒருவராக ரத்தன் ஜங்கர் என்ற பக்தரின் உறவினரான அந்த பெண், நேரில் பாபாவை பார்க்காமலே அவர் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார்.

சீரடிக்கு சென்று பாபாவை தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்தபோதிலும், சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவளை சீரடிக்கு செல்ல விடாமல் தடுத்துக் கொண்டிருந்தன. இத்தனைக்கும் அவள் வசித்த கிராமம் சீரடிக்கு அருகில் உள்ள கிராமம்தான்.ஒருநாள் திடீரென அவள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டாள். படுத்த படுக்கையான அவளை பரிசோதித்த டாக்டர், “இனி இவள் பிழைக்க மாட்டாள். இன்னும் ஓரிரு நாட்களில் இறந்து விடுவாள்” என்றார். அவள் குடும்பத்தினர் கண்ணீர் விட்டுக் கதறினார்கள். ஆனால் அந்த பெண் மனதில் மட்டும் எந்த சலனமும் இல்லை.

அவள் தன் உறவினர்களிடம், “எனக்கு சீரடி சென்று பாபாவை தரிசிக்க வேண்டும் என்று மிகவும் ஆசையாக உள்ளது. ஒரே ஒரு தடவை என் கண் குளிர பாபாவை பார்த்து விட்டால், நிம்மதியாக உயிரை விட்டு விடுவேன்” என்றாள். அவளது கடைசி ஆசையை நிறைவேற்ற உறவினர்கள் முடிவு செய்தனர். நார்க் கட்டிலில் அவளைப் படுக்க வைத்து சீரடிக்கு தூக்கி வந்தனர்.வழக்கம் போல பாபா துவாரகமாயி மசூதியில் அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார்.கட்டிலைத் தூக்கி வந்தவர்கள், அந்த பெண் பற்றியும், அவளுக்கு ஏற்பட்டுள்ள நோய் பற்றியும், அவளது கடைசி ஆசை பற்றியும் விளக்கமாக கூறினார்கள். பாபா அவளைப் பார்த்தார்.

பாபாவைப் பார்த்தும் அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. அவர் அந்த பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒருவர்,“பாபா… அவள் ஓரிரு நாளில் இறந்து விடுவாள் என்று எங்கள் எல்லோருக்கும் தெரியும். அவளுக்கும் தெரியும்.ஆனால் அவள் அதற்குள் உங்களை தரிசிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால் தான் இங்கே தூக்கிக் கொண்டு வந்தோம். அவள் உங்களை தரிசித்து விட்டாள். அவளது கடைசி ஆசை நிறைவேறி விட்டது. இனி கவலை இல்லை. இப்போதே நாங்கள் அவளை எங்கள் கிராமத்துக்கு தூக்கிக் கொண்டு சென்று விடுகிறோம்“ என்றார். அதற்கு பாபா, “இப்போது வேண்டாம். நான் எப்போது அனுமதி கொடுக்கிறேனோ அப்போது நீங்கள் சீரடியில் இருந்து புறப்படலாம்” என்றார்.

பிறகு, “இந்த பெண்ணை கட்டிலில் இருந்து இறக்கி படுக்கை விரிப்பில் படுக்க வையுங்கள்” என்றார். அதன்படி அந்த பெண் துணி விரிப்பில் படுக்க வைக்கப்பட்டாள். அவள் மீது உதியை தூவிய பாபா, “இவளை அருகில் உள்ள கூடாரத்தில் வைத்திருங்கள். இவளுக்கு குடிக்க தண்ணீர் மட்டும் கொடுங்கள். வேறு எதுவும் கொடுக்க வேண்டாம்“ என்றார்.

பாபா சொன்னது போல அந்த பெண்ணுக்கு தண்ணீர் மட்டும் கொடுக்கப்பட்டது. ஒரு வாரம் உருண்டோடிய நிலையில், அந்த பெண் சற்றுத் தெம்பானாள். அவள் உயிர் பிழைத்துக் கொள்வாள் என்று உறவினர்கள் அனைவரிடமும் நம்பிக்கை ஏற்பட்டது.ஆனால் நடந்ததோ வேறு. அவள் 8-வது நாள் தண்ணீர் குடிக்கவில்லை. படுத்த படுக்கையிலேயே அவள் உயிர் பிரிந்து விட்டது. உறவினர்கள் கதறி அழுதனர். அந்த பெண்ணை சீரடியிலேயே புதைத்து விட்டு செல்ல முடிவு செய்தனர். இதுபற்றி மற்ற உறவினர்கள் அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இறுதிச் சடங்கு கள் நடந்து கொண்டிருந்தது. அதே சமயம் சாவடியில் இருந்த பாபா, படுக்கையில் இருந்து எழுந்து வராமல் இருந்தார். அதிகாலையிலேயே கண் விழித்து பணிகளைத் தொடங்கி விடும் பாபா ஏன் இன்னும் படுக்கையில் இருந்து எழுந்திருக்காமல் உள்ளார் என்று பக்தர்கள் ஆச்சரியத்துடன் பேசிக் கொண்டிருந்தனர்.

அதே நேரத்தில், சற்றுத் தொலைவில் கூடாரத்தில் பிணமாக கிடந்த அந்த பெண் உடம்பில் லேசான அசைவு காணப்பட்டது. உறவினர்கள் அதிர்ச்சியுடன் பார்க்க, அவர்கள் கண் முன்பு அந்த அதிசயம் நடந்தது. செத்துப் போனதாக கருதப்பட்ட அந்த பெண் கண் விழித்தாள். சுற்றும் முற்றும் பார்த்தாள். அடுத்த நிமிடம் எழுந்து உட்கார்ந்தாள்.உறவினர்களுக்கு நம்ப முடியவில்லை. அந்த பெண் பேசத் தொடங்கினாள்,“நான் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது, கருப்பாக ஒரு உருவம் வந்து என்னைப் பிடித்தது. அது என்னை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு போனது. நான் எவ்வளவோ அழுதும், அந்த கருப்பு உருவம் என்னை விடவில்லை. இதனால்தான் எனக்கு உடல் நலம் இல்லாமல் போய் விட்டது.

சீரடிக்கு வந்ததும் அந்த உருவம் என்னை நெருங்க பயப்பட்டது. எப்படியோ அந்த உருவம் நேற்று என்னை மீண்டும் பிடித்துக் கொண்டது. என்னை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்ல முயன்றது. அப்போது பாபா அங்கு வந்தார். அந்த கருப்பு உருவத்தை அடித்து விட்டினார். இவளை விட்டுவிடு என்று சொல்லி திரும்ப, திரும்ப அடித்தார்.பாபாவின் அடியை தாங்க முடியாத அந்த உருவம் என்னை விட்டு விட்டது. பிறகு இங்கிருந்தே ஓடி விட்டது. என்னை யாரோ சிலர் இங்கே அழைத்து வந்தனர். பாபாதான் என்னைக் காப்பாற்றி என் உயிரை மீட்டுக் கொடுத்துள்ளார்.

இவ்வாறு கூறி விட்டு அவள் கண்ணீர் விட்டு கதறினாள். அதே நேரத்தில் சாவடியில் இருந்த பாபா கண் விழித்தார். வெளியில் வந்த அவர்,அந்த பெண்ணுக்கு ஆசீர்வாதம் செய்தார்.“உன் விதி மாற்றப்பட்டு விட்டது. இனி நீ எப்போது வேண்டுமானாலும் சீரடியில் இருந்து புறப்பட்டுச் செல்லலாம்“ என்றார். அதை கேட்டு பரவசத்தால் கண்ணீர் விட்ட அந்த பெண் பாபா காலடியில் விழுந்து வணங்கினாள். அவளோடு அவள் உறவினர்கள் அனைவரும் பாபா காலடியில் விழுந்தனர். சாவின் விளிம்பில் இருந்தும் என் பக்தனைக் காப்பாற்றுவேன் என்ற பாபாவின் வாக்கு உண்மையானது.

ஓம் சாய் ராம் ...

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close