திருமணம் மற்றும் புத்திர பாக்கியம் பெற திருவீழிமிழலை மூலவரை வழிபடுவோம்!

  ஹரிணி விஜயன்   | Last Modified : 02 Oct, 2018 03:43 pm

are-you-suffering-of-vision-problems-marriage-delay-still-no-kid-property-problem-visit-this-temple-to-get-all-solutions

கும்பகோணத்திலிருந்து சுமார் 26 கிலோமீட்டர் தொலைவில் திருவீழிமிழலை என்னும் ஊரில் அமைந்துள்ள இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயத்தில் காட்சியளித்து வரும்  சிவபெருமானை தரிசனம் செய்தால், கண்ணில் ஏற்பட்ட நோய்கள் குணமாகிவிடும், திருமணம் வாய்ப்பு தள்ளிச் செல்கிறவர்களுக்கு, திருமணம் விரைந்து நிகழும், புத்திர பாக்கியம் அமையப்பெறாதவர்களுக்கு குழந்தைபேறு அமையும், பொருளாதார மற்றும் சொத்துப் பிரச்சனைகள் நீங்கும் என்பது ஹிந்துக்களின் தொன்மையான நம்பிக்கையாகத் திகழ்ந்து வருகிறது.

இத்திருத்தல மூலவர் கல்யாண சுந்தரேஸ்வரர் என்ற திருநாமத்தை கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மேலும், இந்த  ஆலயத்தில் மட்டுமே சிவ பெருமான், பார்வதி அம்மையுடன் மானுட ரூபம் கொண்டு, திருக்கல்யாண கோலத்தில் காட்சியளித்து வருகிறார். இந்த திருக்கோவில் சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கூறப்படுகிறது.

இந்த ஆலயம் மற்றும் மூர்த்தி குறித்து அப்பர், சுந்தரர் மற்றும் திருஞானசம்பந்தர் ஆகிய நாயன்மார்கள் தேவாரப் பாடல்கள் பாடியுள்ளனர்.

ஸ்தல வரலாறு என்ன தெரியுமா?

காத்யாயன முனிவரும், அவர் மனைவி சுமங்களையும் புத்திர பாக்கியம் வேண்டி, தவம் இருந்தனர். அவர்களின் தவத்தை கண்டு மகிழ்ந்த உமையவளான பார்வதி தேவி, அவளே குழந்தையாக காத்யாயினி என்ற பெயரில் காத்யாயன ரிஷி தம்பதியருக்கு புத்ரியாக பிறந்து வளர்ந்தாள். காத்யாயினி திருமண வயதை அடைந்தபோது, அவளுக்கு நல்லதொரு மணமகன் அமையவேண்டி, காத்யாயன மகரிஷி சிவபெருமானை  வேண்டி வணங்கினார். அதைத்தொடர்ந்து உமையவளின் அப்போதைய அவதாரமான கார்த்தியாயினியை மணமுடிக்க சிவபெருமான் அவரது தெய்வக் கோலத்திலேயே மணமகனாக காட்சி தந்து அவளை மணம் முடித்தார். அதிலிருந்து இத்தலத்தில் குடிகொண்டிருக்கும் மூலவர் சிவபெருமான், மாப்பிள்ளை ஸ்வாமி என்று அழைக்கப்படுகிறார்.

கல்யாண மண்டபம் போலவே காட்சியளிக்கும் இத்திருக்கோவிலில் அமைந்துள்ள இரண்டு கலைநயமிக்க தூண்கள் பந்தக்கால் மற்றும் அரசானிக்கால் என அழைக்கப்படுகின்றன. சிவன் கோவிலில் பிரதான கோபுரம் தேரைப் போல அமைந்து, அதில் இந்திரன் அமர்ந்து செலுத்துவது போல செதுக்கப்பட்டுள்ளது.

மேலும் திருமணம் ஆகாதோர், குழந்தை பாக்கியம் இல்லாதோர் இத்திருத்தலத்தில் அமைந்துள்ள மூலவரை நேரில் வந்து வழிபட்டால் அவர்களுக்கு விரைந்து திருமணம் மற்றும் புத்திர பாக்கியம் அமையும் என்பது ஹிந்துக்கள் மத்தியில் ஆண்டாண்டு காலமாக நிலவி வரும் நம்பிக்கையாகத் திகழ்ந்து வருகிறது.

மற்றொரு வரலாறு என்னவெனில், மஹாவிஷ்ணு அவரது இழந்த சக்ராயுதத்தை இங்கு தான் மீண்டும் பெற்றதாகக் கூறப்படுகிறது. முன்பொரு தருணத்தில் ததீசி முனிவரோடு மஹாவிஷ்ணு யுத்தத்தில் ஈடுபட்டபோது, அவரது சக்ராயுதத்தை இழந்து விட்டார். அதனை மீண்டும் பெற, இந்த திருத்தலத்தில் அமைந்து சிவ பெருமானுக்கு 1000 தாமரை மலர்கள் கொண்டு வழிபாடு செய்தார். வழிபாட்டின் இறுதியில் ஒரு மலர் குறைவாக இருந்ததை கண்ட மஹா விஷ்ணு, சிவபெருமானின் திருவிளையாடல் என்பதை உணர்ந்து, தன் கண்ணை எடுத்து தாமரை மலராக பாவித்து அவருக்கு அர்ச்சனை செய்து விட்டார். இதையடுத்தே இங்குள்ள சிவபெருமான், நேத்ரார்பணேஷ்வரர் என்ற திருநாமத்திலும் கூட அழைக்கப்படுகிறார்.

எனவே தான், கண்ணில் எதேனும் உபாதைகள் இருந்தால், இந்த ஈஸ்வரனின் தரிசனத்தால் அவை சீராகிவிடும் என்று கூறப்படுகிறது. மஹா விஷ்ணுவின் கண்ணை சிவபெருமானின் பாதத்தில் இன்றும் காணலாம்.

அப்பரும் சம்பந்தரும் சில நாட்கள் இத்திருத்தலத்தில் தங்கினர். அப்போது கடும் பஞ்சம் நிலவியது. எனவே சிவபெருமானிடம் வேண்டினர். அவர் விநாயகரிடம் தினமும் இருவருக்கும் பொற்காசு கொடுக்கச் சொல்லி ஆணையிட்டார். அதன் மூலம் அவர்கள் உணவு வழங்கி பஞ்சத்திலிருந்து மக்களை காப்பாற்றினர். ஆனால், சம்பந்தருக்கு வழங்கிய பொற்காசின் தரம் குறைவாக இருந்தது. சிவபெருமானிடம் இதைப் பற்றி கேட்ட போது, அப்பர் தான் மக்களின் கஷ்டத்தை உணர்ந்து சேவை புரிகிறார். எனவே தான் அவருடைய பொற்காசின் தரம் அதிகமாக உள்ளது என்று பதிலளித்து இருக்கிறார்.
இதனைக் கேட்ட சம்பந்தர், "பசி தீரவே காசு நல்குவீர்" என ஒரு திருப்பதிகம் பாடியதைக் கேட்ட சிவபெருமான், அவருக்கும் அதே தரத்தில் காசு வழங்கச் சொல்லி விநாயகரிடம் கூறினார். இதனால், அங்கிருக்கும் விநாயகப் பெருமான் "படிகாசு விநாயகர்" என அழைக்கப்படுகிறார். 
சொத்துப் பிரச்சனை, பணப் பிரச்சனை எல்லாம் நன்றே முடிவடைய இக்கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யுங்கள்.

மேலும் பல ஆச்சரியமான விஷயங்கள் இக்கோவிலில் உள்ளது. மூலவரின் சந்நிதிக்கு பின்னால் ஒரு சின்ன துவாரம் உள்ளது. "அதன் வழியாக கிளிகள் தினமும் சென்று சிவனின் ஆவுடையார் மீது அமர்ந்து தரிசனம் செய்து விட்டு செல்லும்," என்கிறார் அக்கோவிலின் குருக்கள் மஹாலிங்கம். 

பொதுவாக அனைத்து தக்ஷிணாமூர்த்தி சன்னிதிகளிலும் அபஸ்மாரா என்ற அரக்கனை மிதிப்பதாகவே வீற்றிருப்பார். ஆனால், இங்குள்ள தக்ஷிணாமூர்த்தியின் பாதத்தில் அந்த அரக்கனின் உருவம் இருக்காது. 

ஸ்வேதகேது என்ற வடநாட்டு அரசனை, யமனிடம் இந்த சிவபெருமான் காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது. எனவே மரண தோஷம் உள்ளவர்களும் இங்கு வந்து வழிபட்டால் மரண பயம் நீங்கி, நீண்ட ஆயுள் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. 

பூமிக்கு கீழே பாதாள நந்தி என்ற நந்தி தேவரின் சந்நிதி உள்ளது. இது கடந்த யுகத்தை சேர்ந்த சிலை என்று கூறப்படுகிறது. இத்திருத்தலத்தின் ஸ்தல விருக்ஷம் பலாமரம். 

வழிபாடு செய்ய செல்வோர், விளாம்பழமும் தாமரை மலரும் வாங்கி செல்வது விசேஷம்.

கோவில் திறந்திருக்கும் நேரம்: 
காலை 8 மணி முதல் 12 மணி வரை 
மாலை 5 மணி முதல் 8 மணி வரை 

வழி: 
கும்பகோணத்திலிருந்து பூந்தோட்டம் சென்று, அங்கிருந்து திருவீழிமிழலைக்கு செல்ல வேண்டும்

newstm.in                                                   

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.