வரும் குரு பெயர்ச்சிக்கு, இந்த தலம் செல்வோமே....

  கோமதி   | Last Modified : 01 Oct, 2018 04:45 pm
for-this-guru-peyarchi-let-us-go-to-this-temple

குருவின் அருளோடு, திருவும் குறைவிலா வாழ்க்கை அளிக்கும் குருவித்துறை சித்திரவல்லபப் பெருமாள் கோவில் மதுரை சோழவந்தான் தென்கரையில் உள்ளது. இங்குள்ள பெருமாள், குருபகவானின் மகனான ‘கசபனுக்கு’ சாபவிமோசனம் அளித்துக் காத்த சிறப்பு பெற்றவர்.மதுரையிலிருந்து சுமார் 32கி.மீ தொலைவில் உள்ளது குருவித்துறை என்னும் திருதலம். குரு தவம் செய்த இடம் என்பதால், குரு வீற்றிருந்த துறை என்ற பெயர் மாறி தற்போது இது குருவித்துறை என அழைக்கப்படுகிறது. 

குருபகவானுக்கு உரிய சிறந்த பிரார்த்தனைத் தலம் என்பதால், இங்கு வியாழக்கிழமை மிகவும் விசேஷம். அன்று குருவையும், சக்கரத்தாழ்வாரையும், தலத்து பெருமாளையும்  வணங்கினால் சகல நன்மைகளும், புத்திரப்பேறும் கிடைக்கும் என்பது ஐதீகம்.இங்குள்ள மூலவர்,சித்திர ரதவல்லபப் பெருமாள். சுமார் 10அடி உயரத்தில், ஆஜானுபாகனாக, சங்கு சக்கரதாரியாக, ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சியளிக்கிறார். இவர் சந்தன மரத்தாலான திருமேனி, என்பதால், மூன்று மாதத்திற்கு ஒரு முறை தைலக்காப்பு மட்டும் தான்,அபிஷேகம் கிடையாது. இங்கு இவரை வணங்கினால், குருபகவானின் அருளுடன்,புத்திர பாக்யமும், சகல சௌபாக்யமும் வந்து சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தாயார் செண்பகவல்லி. காண்போர் மனத்தைக் குளிர வைக்கும் அழகுடன் பக்தர்களுக்கு அருளாசி வழங்கிக் கொண்டிருக்கிறாள். பிராகாரத்தில் யோக நரசிம்மரும், பன்னிரு ஆழ்வார்களும் கோவில் கொண்டு அருள் பாலித்து வருகிறார்கள். மேலும் ஒரு பெரிய வேப்ப மரமும் உள்ளது.குழந்தைப்பேறு வேண்டுவோர், ஒரு சிறிய துணியில் தூளிபோல் செய்து, மரத்தின் கிளையில் கட்டிவிட்டால், அன்னையிடம் அவர்கள் விரைவில் தாய்மை அடைவார்கள் என்பது, அசைக்க முடியாத நம்பிக்கை. 

தல வரலாறு

அசுர்களின் குரு சுக்ராசாரியார் ‘மிருத சஞ்சீவினி’ என்னும் மந்திரம் கற்றவர். அசுரர்கள் போரில் மாண்டால், இந்த மந்திரத்தின் மூலம் உயிர்பெற்று எழச் செய்வார். அதனால் அசுரர்கள் கூட்டம் மிகவும் பெருகியது.தங்களின் பலத்தைப் பெருக்கவும், அசுரர்களின் கூட்டத்தைக் குறைக்கவும், ‘மிருத சஞ்சீவினி’ மந்திரத்தை தேவர்களும் அறிய விரும்பினர். இந்த மந்திரத்தைக் கற்றுவர தேவர்களின் குருவான குருபகவானின் மகனும், யாவரும் கண்டு வியக்கும் அழகுடைய இளைஞனுமான கசனை அனுப்பிவைத்தனர்.கசபன் சுக்ராசாரியாரின் ஆஸ்ரமத்துக்குச் சென்றபோது, அவர் மகளான தேவயானியைச் சந்தித்தான். இருவரும் ஒருவருக்கொருவர் காதல் வயப்பட்டனர். சுக்ராசாரியாரைச் சந்தித்து, அவர் அன்பையும், நம்பிக்கையையும் பெற்று அவரிடமிருந்து ‘மிருத சஞ்சீவினி’ மந்திரத்தை உபதேசம் பெற்றான்.

இதை அறிந்த அசுரர்கள், கசன் உயிருடன் இருந்தால் தங்கள் குலத்துக்கு அழிவுகாலம் ஏற்படும் என்பதால், குருவுக்கும் தெரியாமல் அவனைக் கொன்று அவன் உடலைக் கொளுத்தி குரு அறியாவண்ணம் அந்தச் சாம்பலை சுக்ராசாரியார் அருந்தும் பானத்தில் கலந்து கொடுத்துவிட்டனர்.இந்த விவரம் அறியாத சுக்ராசாரியார் பானத்தைக் குடித்துவிட்டார்.கசன் பலதினங்களாக வராமலிருக்கவே தேவயானி கலக்கமுற்றாள்.தன் தந்தையிடம் கசன் இருக்கும் இடத்தைப் பற்றி அறிந்து சொல்லும்படி வேண்டினாள்.தன் ஞான திருஷ்டி மூலம் கசன் தன் வயிற்றில் இருக்கிற விவரம் அறிந்து அதிர்ச்சியடைந்தார். 

இதைக் கேட்ட தேவயானி மிகவும் வேதனை அடைந்து, அழுதும் புலம்பியும் நின்றாள். இதைக் காண இயலாத சுக்ராசாரியார் தன் மகளுக்காக, மிருத சஞ்சீவினி மந்திரத்தை உச்சரித்து கசனை உயிருடன் வெளிக்கொணர்ந்தார்.அந்த மந்திரத்தை கசன் பிரயோகிக்க சுக்ராசாரியாரும் உயிர் பிழைத்தார்.கசனைக் கண்டதும் தேவயானி,தன் தந்தையிடம் கசனுக்குத் தன்னை மணம் செய்து வைக்க வேண்டினாள்.ஆனால் கசனோ, தான் சுக்ராசாரியாரின் வயிற்றிலிருந்து உயிர் பெற்று வந்ததால் அவர் தனக்குத் தந்தை முறையாகும் என்றும் தேவயானி சகோதரி முறையாகும் என்றும் அவள் கோரிக்கையை ஏற்க முடியாதென்று கூறி தன்னை மன்னிக்கும்படி கோரினான்.

இதனால் தேவயானி மிகவும் வெகுண்டு, ஆத்திரம் மேலிட கசனின் கை, கால்களை செயலிழந்து போகும்படி சாபமிட்டாள். இந்த விவரம் அனைத்தும் அறிந்த கசனின் தந்தை வியாழபகவான் (குருபகவான்) நாரத முனிவரின் ஆலோசனைப்படி, பூலோகத்துக்கு வந்து வைகையாற்றின் கரையில் அமர்ந்து திருமாலைக் குறித்து தவம் மேற்கொண்டார்.திருமால் குருவின் தவத்துக்கு மெச்சி, அவரின் வேண்டுகோளின்படி தரிசனம் அளித்தும் கசனின் கால்களில் ஏற்பட்ட நோயை, தன் சுதர்சன சக்கரம் மூலம் நன்முறையில் குணப்படுத்தினார்.

குருவின் வேண்டுகோளின்படி ,திருமால் அங்கு கோவில் கொண்டு மக்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கிறர். அன்று முதல் சுதர்சன ஆழ்வாரும், குருபகவானும் தன் எதிரே குடிகொண்டுள்ள பெருமாளைச் சேவித்தவாறு அமர்ந்துக்கொண்டு அடியவர்களுக்கு  அருள் பாலிக்கிறார்கள். இவர்களை வழிபட்டால் நினைத்தது அனைத்தும் நடக்கும் என்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் குருபெயர்ச்சியின் போது இங்கு வந்து கூடும் மக்கள் வெள்ளமே சாட்சி.

வருகிற குரு பெயர்ச்சியின் போது குருவும் திருவும் அருள்புரியும் இத்தலத்துக்குச் சென்று ஆசியைப் பெற்று மேன்மை அடையலாம்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close