சுதர்சனத்தை வணங்குங்கள் ஹரி ஹரனின் அருளைப் பெறலாம்.

  கோமதி   | Last Modified : 02 Oct, 2018 04:25 pm
worship-sudarsana-get-hari-haran-s-blessings

திருமாலைக் கண் முன்னே கொண்டு வந்தால், அவருடைய திவ்ய அலங்காரத்துடன் சங்கு சக்கரதாரியாக தான் தோன்றுவார். பெருமாள் கையில் உள்ள சுதர்சனச் சக்கரம் அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்டக் கூடியது. தன்னுடைய அடியவர்களின் துயர் துடைக்க, அவர் தம் பகைவர்களை சிரம் அறுக்க எப்போதும் திருமாலின் கையில் இருப்பது தான் மகத்துவம் வாய்ந்த சுதர்சனம். தன் பக்தர்களுக்கு எதிராகச் செயல்படும் மந்திரம், தந்திரம், யந்திரம், அஸ்திரம், சஸ்திரம் ஆகிய அனைத்தையும் அழித்து, நல்லோரைத் துயர்களில் இருந்து காக்கவல்லது மகா சுதர்சனச் சக்கரம். 

இத்தனை மகிமைப் பொருந்திய சுதர்சன சக்கரம் எப்போது எங்கே தோன்றியது?

ஒருமுறை சிவபெருமானை தரிசிக்க, இந்திரன் திருக்கயிலாயத்துக்குச் சென்று கொண்டிருந்தான். இந்திரனை சோதிக்கத் திருவுளம் கொண்டார் ஈஸ்வரன். மகா ருத்ர சொரூபத்துடன் இந்திரனுக்கு முன்னே காட்சி தந்தார். அதை உணராத இந்திரன், தன்னை மறித்து நிற்பது அரக்கன் என்றெண்ணி, ருத்ரன் மீது தன் கையில் உள்ள வஜ்ராயுதத்தை எறிந்தான். அந்த ஆயுதம் ருத்ரன் மீது பட்டதும், கோபாக்னி உண்டாகி, வியர்வைத் துளிகளாக மாறி, கடலில் சிதறி விழுந்தன. கடலில் விழுந்த ருத்ரனின் வியர்வைத் துளிகள் ஒன்று சேர்ந்து அரக்கனாக வடிவெடுத்தது. பிரம்மதேவனால் ஆசீர்வதிக்கப்பட்டு, சமுத்திரராஜனால் வளர்க்கப்பட்ட அந்த அசுரன், ஜலந்தரன் என அழைக்கப்பட்டான். ருத்ரனின் வியர்வைத் துளியில் இருந்து தோன்றியவன், பிரம்மாவின் வரம் பெற்றவன் என்பதால், தன்னை எவராலும் அழிக்கமுடியாது என இறுமாப்புடன் இருந்தான் ஜலந்தரன். மூவுலகையும் வென்று, தேவர்களை அடிமைப்படுத்தினான். நாளாக ஆக, அவனது ஆணவமும் அதிகரித்தது.

பிரம்மாவையும் திருமாலையும் வெற்றி கொண்ட அவனுக்கு,ஈஸ்வரனைவிட தான் உயர்ந்தவன் என கர்வம் ஏற்பட,சிவனாரை அடிபணியச் செய்யும் முயற்சியாக, திருக்கயிலாயம் புறப்பட்டான். வழியில், வேதியர் வடிவில் அவனுக்கு முன்னே தோன்றினார், சிவனார். சிவனாருக்கு அடுத்த ஸ்தானத்தில் நான் இருக்கிறேன்.முதலில் என்னால் நிர்மாணிக்கப்படும் சக்தி வாய்ந்த ஆயுதம் ஒன்றை அழிக்கும் சக்தி உனக்கு இருக்கிறதா என்று பார்ப்போம் எனச் சவால் விட்டார் சிவனார். அதனை ஏற்றான் ஜலந்தரன். வேதியராக வந்த சிவனார், தன் பாத விரல்களால் பூமியைக் கிளறி, மகா சுதர்சன சக்கரத்தை வரிவடிவமாக உருவாக்கினார். முடிந்தால், இந்த மகா சுதர்சனச் சக்கரத்தை எடுத்து, உன் சிரசில் வைத்துக்கொள், பார்ப்போம்! என்றார் ஜலந்தரனிடம். உடனே அவன், அந்தச் சுதர்சனச் சக்கரத்தை அப்படியே பெயர்த்தெடுத்தான்; தன் சிரசின் மீது வைத்துக்கொண்டான். ஆணவமும் காமமும் மிகுந்த அவனது உடல், இருகூறாகப் பிளந்தது. ஜலந்தரனின் உடல் அழிந்தது. ஆனாலும், அழியா வரம் பெற்ற அவனது ருத்ர சக்தி, சுதர்சனச் சக்கரத்தில் ஒன்றாகக் கலந்தது. அதன் பிறகு, மகா சுதர்சனம், மகேஸ்வரனின் திருக்கரத்தில் அமர்ந்தது. இந்த சுதர்சனம் திருமாலின் கைக்கு வந்ததற்கும் ஒரு புராண கதை உண்டு.

கோலோகத்தில், திருமாலின் சேவையே பெரிதெனக் கருதி வாழ்ந்தவ துளசிதேவி,ஒரு சாபத்தால், பூவுலகில் பிருந்ததை என்பவளாக, மிக்க அழகுடன், காலநேமி என்கிற அரக்கனுக்கு மகளாகப் பிறந்தாள். அவளே ஜலந்தரனின் மனைவியானாள். அவளது பதிவிரதா சக்தியால்தான், அழியா வரம் பெற்றிருந்த ஜலந்தரன், முடிவில் சிவபெருமானால் அழிந்ததும், பிருந்ததை தீக்குளித்தாள். எப்போதும் திருமாலுடன் வாசம் செய்யும் வரம் பெற்று, மீண்டும் துளசியாகி, சேவையாற்றி வந்தாள். ஜலந்தரனுடன் வாழ்ந்தவள் துளசி. எனவே, அவன் உறைந்திருக்கும் மகா சுதர்சனச் சக்கரத்தையும் தன் திருக்கரத்தில் வைத்து, பிருந்தா-ஜலந்தர சங்கமத்தைத் தன்னுள் நிகழ்த்த விரும்பினார் திருமால். மேலும் பூவுலகில், தர்மத்தை நிலைநாட்ட, சுதர்சனத்தின் பங்கு இருப்பதை அறிந்து, அதனைச் சிவனாரிடம் இருந்து பெற, ஈஸ்வரனை பூஜிக்கத் துவங்கினார் ஸ்ரீமந் நாராயணன். ஆயிரத்தெட்டு தாமரை மலர்களைப் பறித்து, அதைக் கொண்டு ஆதிசிவனாரை அர்ச்சித்து வழிபடலானார். அப்போது,வழக்கம் போல், சிவனாரின் சோதனையால் ஒரேயொரு மலர் மறைந்துவிட... மந்திரம் ஒன்றுக்கு மலர் ஒன்று குறைந்தது கண்டு, தன் கமலக்கண்ணையே பெயர்த்து, மலராகச் சமர்ப்பித்தார், திருமால். பூஜையில் மகிழ்ந்த ஈசன் மகா சுதர்சனச் சக்கரத்தை திருமாலிடம் தந்து, துஷ்டர்களைச் சம்ஹரித்து, பக்தர்களை ரட்சிக்கிற பணியை அவரிடம் தந்தருளினார்.

மகா சுதர்சனத்தை வழிபடுகிறவர்கள், சிவனாரையும் ஸ்ரீமந் நாராயணனையும் சேர்த்து வழிபட்ட பலனைப் பெறுவர்கள் என்பது நம்பிக்கை. ஹரியும் ஹரனும் சேர்ந்த அற்புதச் சக்தியே சுதர்சனம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close