அமாவாசை நல்ல நாளா?

  கோமதி   | Last Modified : 08 Oct, 2018 05:17 pm

is-no-moon-day-good

அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது அதாவது ஒன்றையொன்று சந்தித்துக்கொள்கிறது. அன்று  மறைந்த நமது முன்னோர்கள் புண்ணியலோகத்திலிருந்து பூமிக்கு வருகிறார்கள். தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில் பார்ப்பதுடன், அவர்களது வாரிசுகளான நாம் துவங்கும் காரியங்களை கரிசனத்தோடு  ஆசிர்வதிக்க செய்கிறார்கள். எனவே பிதுர் தேவதைகள் என்ற முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு மரியாதை செய்து அமாவாசை தினத்தில் புதிய காரியங்களை துவங்கினால் நிச்சயம் நல்லதே நடக்கும். அமாவாசை  அன்று நற்காரியங்களை செய்வதனால் தீங்கு ஏற்படாது. முன்னோர்கள் பூமிக்கு வரும் தினம் என்பதனால் அமாவாசை நிச்சயம் நல்லநாளே. அமாவாசை குறித்த பல தகவல்களை இந்தப் பதிவில் அறிந்து கொள்வோம்.

முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாட்களான அமாவாசைகளில் தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி,மாசி அமாவாசை மிகவும் சிறப்புடையது. அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும் என்று விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சோ்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது.சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால் சுழுமுனை என்னும் நெற்றிக்கண் பலப்படுகிறது. அதனால் அமாவாசையில் சாஸ்திரிகள் மந்திர ஜெபம் ஆரம்பிக்கின்றனா். கடலில் நீராடி தங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குகின்றனா். ஜோதிட ரீதியாக அமாவாசை நிறைந்த நாள். அனேகமானவர்கள் அமாவாசை அன்று  மோதிரம் செய்து போடுகின்றனா்.அமாவாசையன்று ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. எனவே ஜீவ சமாதிகளில் அமாவாசையன்று  குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் நடத்துகின்றனா்.

அமாவாசை அன்று படையல் ஏன்?

சாதாரணமாக இறந்த ஆவிகள் சந்திரனின் ஒளிக்கற்றையில் உள்ள அமிர்தத்தைப் புசிக்கும். அதுதான் அதற்கு உணவு.அமாவாசையன்று சந்திரனின் ஒளிக்கற்றை ஆவிகளுக்குக் கிடைக்காது. அதனால் ஆவிகள் உணவுக்குத் திண்டாடும். பசி தாங்க முடியாமல் இரத்த சம்பந்தமுடைய வீடுகளுக்கு வரும்.அப்போது நம்மை யாராவது எண்ணுகிறார்களா ,நமக்குத் தா்ப்பணம், படையல் செய்கிறார்களா என்று ஆத்மாக்கள் ஏங்கும். எனவே தான் அமாவாசையன்று முன்னோர் நினைவாக படையல் இடப்படுகிறது. அமாவாசை பிதுா் தா்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் குல தெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது நல்லது. முடியாதவா்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்யலாம். வீட்டிலும் செய்யலாம்.

 மேலும் அமாவாசையன்று வீடு வாசல் இல்லாத ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அமாவாசையன்று செய்யப்படும் அன்னதானம் பெரும் புண்ணியம். ஒவ்வொரு மாதம் அமாவாசை அன்னதானம் செய்ய முடியாதவா்கள் தை, ஆடி, புரட்டாசி அமாவாசையில் அன்னதானம் செய்ய வேண்டும். புரட்டாசி அமாவாசையில் செய்தால் 12 ஆண்டுகளாக அன்னதானம் தா்ப்பணம் செய்யாத தோஷம் நீங்கும்.நமக்கு அன்னம் இடுபவள் அன்னபூரணி! ஆவிகளுக்கு அன்னம் இடுபவள் ஸ்வதா தேவி! நாம் ஆவிகளை நினைத்துக் கொடுக்கும் அன்னத்தை மற்றும் யாகத்தில் போடும் ஆவுதிகளை ஸ்வதா தேவிதான் சம்பந்தப்பட்ட ஆவிகளிடம் சோ்ப்பிக்கிறாள்.

மனிதர்களுக்கு மட்டுமன்றி  பசு, காகம், நாய், பூனை மற்றும் இதர ஜீவராசிகளுக்கும் அமாவாசைக்கு  அன்னம் அளிப்பது சிறப்பு.அமாவாசையன்று காலை சூரிய உதயத்தின் போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டுக்குக் கொண்டுவந்து தீா்த்தமாகத் தெளிக்கலாம். அதனால் வீட்டிலுள்ள தோஷங்கள் நீங்கும். அமாவாசையன்று முன்னோர் நினைவாக நாம் செய்யும் அன்னதானம் மற்றும் தர்ம காரியங்கள் நம் தலைமுறைகளை மிகச் சிறப்பாக வாழ வழி செய்யும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.